சாலையில் சுயநலம் தேவையில்லை

சாலையில் வாகனம் ஓட்டுபவர்களில் பலரும் ஆக்சிலேட்டரில் இருந்து காலை எடுப்பதில்லை. தனது வாகனத்தை யாராவது ‘ஓவர்டேக்’ செய்து முந்திச்சென்றால் அவ்வளவுதான், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அந்த காரை துரத்திச்செல்வார்கள். அதனால் அவர்களுக்கு மட்டுமல்ல, சாலையில் செல்லும் பலருக்கும் ஆபத்து.
சாலையில் வாகனம் ஓட்டும்போது கவனிக்கவேண்டியவை:
பல்வேறு வாகனங்கள், பாதசாரிகள், பிராணிகள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், சைக்கிள்மிதிப்பவர்கள் போன்ற அனைவருக்கும் சொந்தமானது நீங்கள் பயணிக்கும் சாலைகள் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வேகத்தையும், சுயநலத்தையும் சாலைகளில் ஒருபோதும் காட்டக்கூடாது.
உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனம் திடீரென்று ‘பிரேக்’ போட்டு நின்றாலும், உங்கள் வாகனம் அதில் மோதி விபத்து ஏற்படாத அளவுக்கு இடைவெளிவிட்டு வாகனத்தை ஓட்டிச்செல்லுங்கள்.
முன்னால் செல்லும் வாகனத்தின் பின்னால் உள்ள டயர் உங்கள் கண்களில் தெரியாத அளவுக்கு அந்த இடைவெளி அமைந்திருக்கவேண்டும்.
கவனம் சிதறாத அளவுக்கு முழுகவனமும் சாலையின் மீது இருக்கவேண்டும். பள்ளிக்கூடம், மருத்துவமனை போன்ற இடங்களை கடக்கும்போது அதிக கவனம்தேவை. சாலைகளில் இருக்கும் அறிவிப்பு பலகைகளை கவனியுங்கள். சாலைகளில் வேலைநடக்கும் பகுதியிலும், அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களிலும் வாகன ஓட்டிகளின் கவனத்தை கவர அறிவிப்பு பலகைகளை வைத்திருப்பார்கள்.
அவைகளை கவனிக்காமல் அலட்சியமாக வாகனத்தை இயக்கினால் விபத்து உருவாகிவிடக்கூடும்.
அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டும் செல்லுங்கள். அது பாதுகாப்பானது மட்டுமின்றி எரிபொருள் சிக்கனத்திற்கும் உதவும். யாரையாவது மருத்துவ மனையில் சேர்க்க அவசரமாக சென்றால், எமர்ஜென்சி சிக்னலை பயன்படுத்தி இயக்கிச்செல்லுங்கள்.
முன்னால் வாகனத்தை ஓட்டிச்செல்பவருக்கு எந்த குழப்பத்தையும், அசவுகரியத்தையும் ஏற்படுத்தாத அளவுக்கு அந்த வாகனத்தை முந்தவேண்டும். எதிர்திசையில் வரும் வாகனத்தை பார்க்க முடியாத சூழ்நிலை இருக்கும்போது ஓவர்டேக் செய்யக்கூடாது. இடதுபுறமாக ஓவர்டேக் செய்வதை தவிர்க்கவேண்டும்.
இரவில் கட்டாயம் ஹெட்லைட்டை டிம் செய்யவேண்டும். இல்லாவிட்டால் எதிர்புறம் வரும் வாகன ஓட்டிகள் பார்க்க முடியாமல் திணறும் நிலை உருவாகிவிடும்.
மது அருந்திவிட்டு ஒருபோதும் வாகனம் ஓட்டக்கூடாது.
கார் ஓட்டும்போது சீட் பெல்ட்டும், இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட்டும் மிக அவசியம்.
எப்போதும் சிக்னலை மதித்து வாகனத்தை ஓட்டுங்கள். முன்னால் செல்லும் வாகனத்தை மட்டுமல்ல, பின்னால் செல்லும் வாகனத்தையும் அவ்வப்போது கவனிக்கவேண்டும். இதன் மூலம் நிலைதடுமாறி வரும் வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களை தவிர்த்துவிடலாம்.
நன்றாக தூங்கி ஓய்வெடுத்த பின்பு, அதிக தூர பயணத்தை மேற்கொள்ளுங்கள். ஓட்டிச்செல்லும்போதே தூக்க கலக்கம் ஏற்பட்டால் அரைமணி நேரம் தூங்கி ஓய்வெடுத்துவிட்டு பயணத்தை தொடரவேண்டும். காபி, டீ போன்ற பானங்கள் ஓரளவு தூக்கத்தை கட்டுப்படுத்தும். அவை ஓரளவுக்கு மூளையை உற்சாகமாக வைத்திருக்கவும் உதவும்.
வாகனத்திற்கு தேவையான அனைத்து ஆவணங்களும் எப்போதும் வாகனத்திலே இருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
வாகனங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்துகொள்வதும் அவசியம். அவ்வப்போது டயர், பிரேக், ஹெட்லைட், இன்டிகேட்டர் போன்றவைகளின் இயக்கத்தையும் சரிபார்த்துக்கொள்ளவேண்டும்.
Related Tags :
Next Story






