நிறங்களும்.. நிஜங்களும்..


நிறங்களும்.. நிஜங்களும்..
x
தினத்தந்தி 25 Jun 2021 8:55 PM IST (Updated: 25 Jun 2021 8:55 PM IST)
t-max-icont-min-icon

நிறங்களோடு நமக்கு உணர்வுரீதியான பிணைப்பு உண்டு. நமது சிந்தனை, செயல், குணம் போன்றவைகளோடு நிறங்களுக்கு விவரிக்க முடியாத பங்களிப்பும் இருக்கிறது. நாம் பயன்படுத்தும் நிறங்கள் நமது மனோபாவத்தை வெளிப்படுத்துவதாகவும், நமது மனநிலையில் தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது.

அதனால்தான் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் வெவ்வேறு வண்ணங்களை பயன்படுத்துகிறார்கள். அது அவர்களது வீடுகளுக்கு தரும் அழகைவிட, அவர்களது உணர்வுகளுக்கு தரும் மகிழ்ச்சி அதிகமானதாக இருக்கும். சுவர்களில் தீட்டப்படும் வண்ணங்களில் எது எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை பார்ப்போம்!

சிவப்பு: இந்த நிறம் பூசப்பட்ட அறையில் வசிப்பவர்களின் செயல்திறன் மேம்படும். இந்த அறையில் இருப்பவர்கள் அனைவரிடமும் நெருக்கமும் காணப்படும். அவர்கள் அனைவரும் மனம்விட்டுப் பேசும் சூழலும் உருவாகும். அதனால் லிவிங் ரூம், டைனிங் ஹால் போன்றவைகளில் சிவப்பு நிறத்தை பயன்படுத்தலாம். படுக்கை அறை, ஓய்வறை போன்றவைகளுக்கு சிவப்பு நிறம் ஏற்புடையதல்ல.

வைலட்: சிவப்பும், நீலமும் கலந்த கலவையாக காணப்படும் இந்த நிறம் அமைதியையும், நிதானத்தையும் உருவாக்கும். இந்த நிறம் பூசப்பட்ட அறைகளில் வசிப்பவர்கள் சமாதானத்தை விரும்புபவர்களாகவும், திருப்திகொண்டவர்களாகவும் இருப்பார்கள். வைலட் நிறத்தை விரும்புபவர்கள் அவையடக்கம் கொண்டவர்களாகவும், தனித்துவம் நிறைந்தவர்களாகவும் காணப்படுவார்கள்.

மஞ்சள்: சூரிய சக்தி போன்று புத்துணர்ச்சியை தருவது இந்த நிறம். சோம்பலை நீக்கி எப்போதும் உற்சாகத்தை தரும். மஞ்சள் மகிழ்ச்சியை தரும் நிறமாக இருப்பதால், சமையல் அறை, டைனிங் ஹால், குளியல் அறை 
போன்றவைகளுக்கு பயன்படுத்தலாம்.

நீலம்: இது மனதுக்கு தன்னம்பிக்கையையும், உடலுக்கு ஆற்றலையும் தரும் நிறம். இந்த நிறம் பூசப்பட்ட அறையில் வசிப்பவர்கள் அதிக மனஅமைதியுடன் காணப்படுவார்கள். அதனால் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள், சுவாசப் 
பிரச்சினை கொண்டவர்கள் இந்த நிறத்தை தேர்வுசெய்து தங்கள் வீட்டு சுவர்களுக்கு பயன்படுத்தலாம். எப்போதும் மனஅமைதியை விரும்புகிறவர்கள், தாங்கள் அதிகமாக புழங்கும் அறைகளில் இந்த வண்ணத்தை பயன்படுத்த வேண்டும். படுக்கை அறை மற்றும் குளியல்அறைகளுக்கு இளநீல நிறம் ஏற்றது. துக்கத்தில் இருப்பவர்கள் அடர்ந்த நீல நிறத்தை தவிர்ப்பது நல்லது. அது துக்கத்தை அதிகரித்து வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாகும்.

பச்சை:கண்களுக்கு பிடித்த நிறம் இது. இந்த நிறத்தை பார்த்துக்கொண்டிருந்தால் அதிக உற்சாகம் கிடைக்கும். கண்கள் வழியாக மூளைக்கு புத்துணர்ச்சி உருவாகும். நீலமும், மஞ்சளும் கலந்த இந்த நிறம் எல்லா அறைகளுக்கும் பொருந்தும். இளம் பச்சை நிறம் மனதில் இருக்கும் சலனத்தை அகற்றி சந்தோஷத்தை பெருக்கும். பிரகாசமான பச்சை நிறம் மனதுக்கு அளப்பரிய ஆற்றலைத்தரும். வீடுகளில் உள்ள பெரும்பாலான அறைகளுக்கு இது பொருத்தமானதாக இருக்கும்.
1 More update

Next Story