உணவில் நச்சு.. தவிர்க்கும் வழிகள்..


உணவில் நச்சு.. தவிர்க்கும் வழிகள்..
x
தினத்தந்தி 3 July 2021 11:35 PM GMT (Updated: 3 July 2021 11:35 PM GMT)

ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வது பல வகையான நோய் பாதிப்புகளை உண்டாக்கும். சாப்பிடும் உணவு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். சிலருக்கு வெளி உணவுகளை உட்கொள்ளும்போது வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் தோன்றும். அவை உணவு கெட்டுப்போய் அதில் நச்சுத்தன்மை கலந்திருப்பதற்கான அறிகுறிகளாகும்.

உணவில் நச்சுதன்மை இருந்தால் வயிற்று வலி, பசி இன்மை, காய்ச்சல் போன்று உடலில் வெப்பநிலை அதிகரிப்பது, தசை வலி போன்ற அறிகுறிகளும் தோன்றும். பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்ற தொற்று கிருமிகள் வயிற்றுக்குள் செல்வதால் இந்த பிரச்சினை உண்டாகிறது. பழைய உணவுகள், சுத்தமாக தயாரிக்கப்படாத உணவுகள்தான் பெரும்பாலும் விஷமாக 
மாறுகின்றன. என்டமொபா, ஜியார்டியா, காம்பிலோபாக்டர், ஷிகெல்லா, சால்மோனெல்லா, லிஸ்டீரியா மற்றும் நோரோ வைரஸ் போன்ற பொதுவான நுண்ணுயிரிகள் உணவு நச்சுத்தன்மை அடைவதற்கு காரணமாக இருக்கின்றன.

அடிக்கடி விஷத்தன்மை கொண்ட உணவை உட்கொண்டால் வயிற்றுப்போக்கும் தொடர்ந்து கொண்டிருக்கும். அதனால் உடலில் நீரிழப்பு பிரச்சினை உண்டாகும். உடலில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்றவற்றின் சமநிலை பாதிப்புக்குள்ளாகும். பிற அத்தியாவசியமான செயல்பாடுகளும் பாதிக்கப்படும். நீரிழப்பு பிரச்சினைக்கு உடனடியாக சிகிச்சை 
அளிக்காவிட்டால் கடுமையான பாதிப்புகள் நேரும். உணவு நச்சுத்தன்மை அடைவதை கவனமாக கையாளாவிட்டால் பேசுவதில் சிரமம், இரட்டை பார்வை, தசை பலவீனம், அதிகப்படியான வியர்வை, நடுக்கம், பிரமை, சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சுத் திணறல், நாக்கு மற்றும் வாயில் வீக்கம், கை, கால்களில் நடுக்கம், இதயம் வேகமாக துடிப்பது போன்ற பிரச்சினைகளை 
எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உணவு விஷத்தன்மை அடைவதை தடுக்க சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

* காய்கறிகளை சமைப்பதற்கு முன்பு உப்புநீரில் கழுவ வேண்டும். அதுபோல் பழங்களையும் கழுவி சாப்பிட வேண்டும். சமைப்பதற்கு முன்பு இறைச்சியையும் நன்கு சுத்தம் செய்வதும் முக்கியம்.

* சமையலறையை சுத்தமாக பராமரிக்க வேண்டும். கத்திகள் மற்றும் காய்கறிகளை நறுக்கும் பலகைகளை தினமும் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

* குளிர்சாதன பெட்டியை வாரம் ஒரு முறை சோப்பு நீரை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். சமைத்த உணவுகளை குளிர்சாதன பெட்டியில் அதிக நேரம் வைக்க வேண்டாம். பால் பொருட்களையும் சேமித்து வைக்கக்கூடாது.

* சுத்தமான தண்ணீரை பருக வேண்டும். நன்கு காய்ச்சி குடிப்பது நல்லது.

* எந்த வேலையாக இருந்தாலும் அதனை முடித்ததும் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். வீட்டை சுத்தம் செய்யும் போது கையுறைகளை அணிவது நல்லது.

* சாப்பிட்ட உணவு நச்சுத்தன்மை அடைந்திருந்து அவதிப்பட்டால் தண்ணீர் அதிகம் பருக வேண்டும். வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு இருந்தால், திரவ உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். மென்று சாப்பிடும் உணவு வகைகளை தவிர்த்துவிடலாம்.

* வயிற்றுப்போக்கு, வாந்தி தொடர்ந்து கொண்டிருந்தால் நீர்ச்சத்துடன் பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட பிற தாதுக்களும் உடலில் குறைந்துபோய்விடும். அத்தகைய சூழலில் தண்ணீருடன் உப்பு அல்லது சர்க்கரையை கலந்து பருகுவது நன்மை பயக்கும்.

* சரியான நேரத்தில் உணவை உண்ண வேண்டும். மதியம் மற்றும் இரவு உணவுக்கு பிறகு இஞ்சி டீ பருகுவது நல்லது. ஆப்பிள் சிடேர் வினிகரையும் உபயோகிக்கலாம். அது உணவில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவும். ஒரு கப் சூடான நீரில் இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சிடேர் வினிகர் கலந்து பருகி வரலாம்.

* தேனுடன் லவங்கப்பட்டை தூள் கலந்து சாப்பிடுவதன் மூலம் வயிறு தொடர்பான பிரச்சினைகளை களையலாம். வெந்தயமும் வயிற்றுக்கு இதமளிக்கும். அதனுடன் தயிர் சேர்த்து  சாப்பிடலாம்.

Next Story