பாவேந்தர் பாரதிதாசன்


பாவேந்தர் பாரதிதாசன்
x
தினத்தந்தி 19 July 2021 4:32 PM IST (Updated: 19 July 2021 4:32 PM IST)
t-max-icont-min-icon

‘எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ என்று முழங்கியவர், பாவேந்தர் பாரதிதாசன். அவரது வரலாறு பற்றி காண்போம்...

புதுச்சேரியில் கடந்த 1891-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ந் தேதி கனகசபை மற்றும் இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார், பாரதிதாசன். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். பள்ளி படிப்பு வரை அந்த பெயர் கொண்டே அழைக்கப்பட்டு வந்தார். பாரதிதாசனின் தந்தை கனகசபை, புதுச்சேரியில் செல்வந்தராக வாழ்ந்து வந்தார். எனினும் அந்த காலத்தில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் இருந்ததால், பிரெஞ்சு பள்ளியில் தனது ஆரம்ப கால படிப்பை பாரதிதாசன் தொடங்க வேண்டி இருந்தது. இருப்பினும் அவருக்கு தமிழ் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது.

சிறு வயது முதலே அழகான சுவையுடன் பாடல்களை எழுதி தனது நண்பர்களிடம் பாடி காட்டுவார். தொடர்ந்து தமிழ் மொழியை முறையாக கற்க ஆரம்பித்தார். பின்னர் கல்லூரியில் சேர்ந்த பிறகு தமிழ் மொழியை படிக்க தேர்ந்தெடுத்தார். அங்கு இளங்கலை தமிழ் பயின்று பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். அதன்பிறகு காரைக்காலில் உள்ள அரசு கல்லூரியில் தமிழ் ஆசிரியராக பணியாற்ற தொடங்கினார்.

தமிழ்மொழி மீது பற்றுக்கொண்டவராக இருந்த பாரதிதாசன், தனது மானசீக குருவாக பாரதியாரை கருதினார். அவரது பாடலை தனது நண்பரின் திருமண நிகழ்வில் பாடியபோது அங்கு வந்த பாரதியாரை நேரில் சந்திக் கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் பாரதியாரிடம் இருந்து பாராட்டுக்களை மட்டுமல்லாமல் அவரது நட்பையும் பெற்று கொண் டார். அன்று முதல் தனது இயற்பெயரான கனகசுப்புரத் தினம் என்பதை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார். பின்னர் 1946-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந் தேதி தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவால் புரட்சிக்கவி என்று பாராட்டப்பட்டார். மேலும் ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

பாரதிதாசன் தனது 29-வது வயதில் பழனி அம்மையார் என்பவரை மணந்தார். அவர் களுக்கு சுமார் 8 ஆண்டுகள் கழித்து ஒரு மகன் பிறந்தார். அதன்பிறகு 3 பெண் குழந்தை கள் பிறந்தன. மகனுக்கு மன்னர்மன்னன் என்றும், மகள்களுக்கு முறையே சரஸ்வதி, வசந்தா, ரமணி என்றும் பெயரிட்டார். தமிழ் மொழிக்காக பல்வேறு தொண்டுகளை ஆற்றிய அவர், அரசியலிலும் நாட்டம் கொண்டு இருந்தார். அதன்படி 1954-ம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அதன்பிறகு 1960-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.

தந்தை பெரியாரின் தீவிர தொண்டனாக விளங்கிய பாரதிதாசன், திராவிட இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்தார். இதன் காரணமாக அவர், தனது பாடல்கள் மூலம் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றை புகுத்தினார். அவருக்கு பாவேந்தர், புரட்சிக்கவி, புரட்சி கவிஞர் போன்ற சிறப்பு பெயர்கள் உண்டு. அவர் தனது எண்ணங்களை கவிதை, பாடல், நாடகம், சிறுகதை, புதினம், கட்டுரை ஆகிய வடிவங்களில் வெளியிட்டார். மேலும் திருக்குறளின் பெருமையை விளக்கி 5 கட்டளை கலித்துறை பாடல்களை பாடி உள்ளார். மொத்தம் 86 நூல்களை எழுதி இருக்கிறார். மேலும் திரைப்பட வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதி உள்ளார். இது தவிர குயில் என்ற வார இதழை நடத்தி வந்தார். பாரதிதாசன் 1964-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந் தேதி தனது 73-வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டு இருந்த அவரது படைப்பான பிசிராந்தையார் என்ற நாடக நூலுக்கு 1969-ம் ஆண்டு சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. மேலும் அவரது அனைத்து படைப்புகளும் 1990-ம் ஆண்டு தமிழக அரசால் பொதுவுடைமையாக்கப்பட்டன.
1 More update

Next Story