சுதந்திரத்தைப் போற்றிய தமிழ் திரைப்படங்கள்


சுதந்திரத்தைப் போற்றிய தமிழ் திரைப்படங்கள்
x
தினத்தந்தி 15 Aug 2021 9:27 AM GMT (Updated: 15 Aug 2021 9:27 AM GMT)

சுதந்திரப் போராட்டத்தை, அது உச்சத்தில் இருந்த காலங்களில் மக்களின் மனதில் பதியம் போட்டதில், திரைப்படங்களின் பங்கு அளப்பரியது.

சுதந்திரப் போராட்டத்தை, அது உச்சத்தில் இருந்த காலங்களில் மக்களின் மனதில் பதியம் போட்டதில், திரைப்படங்களின் பங்கு அளப்பரியது.

சுதந்திரத்திற்குப் பிறகும் கூட, அதற்காக பாடுபட்டவர்களின் தியாகங்களையும், போராட்டங்களையும் மக்களிடம் வீரியத்தோடு விதைத்ததில், திரைப்படங்களின் பார்வை இன்னும் விரிவானது.

திரைப்படங்கள் பேசத் தொடங்கிய காலம்தொட்டே, சுதந்திரப் போராட்டத்திற்கு துணை நின்றது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, ஆரம்ப காலத்தில் பாட்டுகளே முக்கியத்துவம் பெற்றிருந்தன. காட்சிகளை விட இசை, மக்களின் மனதைக் கவர்ந்த காலகட்டம் என்பதால், சுதந்திர உணர்வை மக்களிடம் வலிமையாக கொண்டு சேர்க்க பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

தமிழின் முதல் பேசும் படம் ‘காளிதாஸ்.’ இந்தப் படம், ‘ராட்டினமே காந்தி கை பாணமாம்..’ என்ற பாடலின் வாயிலாக, சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் போராடிக்கொண்டிருந்த காந்தியை, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தது.

1933-ம் ஆண்டில் வெளிவந்த படம், ‘ஸ்ரீ வள்ளித் திருமணம்.’ இதில் வள்ளியாக நடித்த டி.பி.ராஜலட்சுமி, தினைப் புலத்திலேயே பறவைகளை விரட்டியபடி பாடுவதாக ஒரு பாடல். அதில் ‘வெட்கம் கெட்ட வெள்ளை கொக்குகளா.. விரட்டி அடித்தாலும் வாரீகளா?..’ என்று வெள்ளைக்காரர்களுக்கு எதிராக சில வரிகளை இழையோட விட்டிருப்பார்கள்.

1936-ம் ஆண்டு வெளியான ‘சத்தியசீலன்’ படத்தில், ‘சொல்லு பாப்பா.. சொல்லு பாப்பா.. சுதந்திரம் பெற வழியொன்று சொல்லு பாப்பா’ என்று தன்னுடைய கந்தர்வக் குரலால், சுதந்திர தாகத்தை மக்கள் மனதில் பதிவேற்றம் செய்திருப்பார், எம்.கே.தியாகராஜ பாகவதர்.

1938-ம் ஆண்டில் வெளியான ‘அனாதைப் பெண்’ திரைப்படம், ‘பாரதமாதா பரிபூரண சுதந்திரம் அடைவாளோ...’ என்றும், ‘பஞ்சாபகேசரி’ திரைப்படம் ‘வந்தே மாதரம்.. ஜெயஜெய வந்தே மாதரம்..’ என்றும் முழங்கின. 1939-ல் வெளியான ‘தியாகபூமி’ திரைப் படம், அதுவரை பாடல்களால் உருவேற்றிய தேசப்பற்றை, முதன் முறையாக காட்சிப்படுத்தியது. கயவனான கணவனைப் பிரிந்து, சுகவாழ்க்கையை உதறிவிட்டு, தேச சேவைக்காக தன்னை அர்ப் பணிக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய கதைக்களம் இது.

சுதந்திர உணர்வை, அந்த காலத்திலேயே மிகவும் உக்கிரமாக வெளிப்படுத்திய படம் ‘மாத்ருபூமி.’ 1939-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், நாட்டிற்கு துரோகம் செய்யும் கணவனை விட, தேசமே உயர்ந்தது என்று கருதும் ஒரு பெண், தன்னுடைய தாலியை கழற்றி கணவனின் முகத்தில் விட்டெறிவது போன்ற காட்சி வைக்கப்பட்டிருந்தது. இந்தக் காட்சி அந்த காலகட்டத்தில் பலரையும் திடுக்கிட வைத்தது. ஆனால் பலரது மனதிலும் பதிந்துபோன காட்சியாக அமைந்தது.

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பலரையும், ஆங்கிலேய அரசு கைது செய்து சிறையில் அடைத்த காலகட்டத்தில் 1940-ம் ஆண்டு ‘மணிமேகலை’ திரைப்படம் வெளியானது. அதில் நடித்த கே.பி.சுந்தராம்பாள் தன்னுடைய வெண்கலக்குரலால் ‘சிறைச்சாலை இது என்ன செய்யும்? சரீராபிமானம் இலா ஞானதீரரை, சிறைச்சாலை இது என்ன செய்யும்?’ என்று, போராட்டக் களத்தில் நின்ற தியாகிகளுக்கு ஆதரவையும், உற்சாகத்தையும் வழங்கினார்.

நாடு சுதந்திரம் அடைந்த ஆண்டான 1947-ல், ஏவி.மெய்யப்ப செட்டியார் தயாரிப்பில் ‘நாம் இருவர்’ படம் வெளியானது. இதில் சுதந்திரத் தீயை ஊட்டும், பாரதியாரின் புரட்சிகரமான பாடல்கள் இடம்பெற்றன. ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே.. ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று..’, ‘விடுதலை விடுதலை விடுதலை..’ போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்தன.

1954-ம் ஆண்டு ஏவி.எம். தயாரிப்பில் வெளியான ‘அந்த நாள்’ திரைப்படம், மக்களின் மனதில் தேசப்பற்றை வேரூன்றச் செய்தது. காதலித்து மணந்தவன், எதிரி நாட்டுக்கு உளவு வேலை பார்ப்பதை அறிகிறாள் மனைவி. தேசமா, நேசமா என்ற போராட்டத்தில் கணவனைக் கொன்று, நாட்டுப் பற்றை நிலைநாட்டுகிறாள் என்பதாக கதைக்களம் அமைந்திருந்தது.

அதன் பிறகான காலகட்டங்களில் சுதந்திரத்திற்காக போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுசகோதரர்கள், கப்பலோட்டிய தமிழன் வ.உசிதம்பரம், பூலித்தேவன் ஆகியோரின் வீரம்செறிந்த வாழ்க்கையை பேசிய படங்கள், போராடி பெற்ற சுதந்திரத்தை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வையும் மக்களுக்கு அளித்தன.

தாயைக் கூட பார்க்க நேரமில்லாமல், தாய் மண்ணுக்காக போர்முனையில் நிற்கும் இளம் ராணுவ வீரனின் வாழ்க்கையை, 1966-ல் வெளிவந்த ‘தாயே உனக்காக’ படம் பேசியது. கொடி காத்த குமரனின் தியாகத்தை ‘ராஜபார்ட் ரங்கத்துரை’ சொன்னது. தேசம் பல மாநிலங்களாகப் பிரிந்திருந்தாலும், அனைவரும் ஒருதாய் மக்கள் என்ற உணர்வை ‘பாரதவிலாஸ்’ திரைப்படம் கொடுத்தது.

அண்மைக் கால சினிமாக்களிலும் கூட அவ்வப்போது தேசப்பற்றை வலியுறுத்தும் படங்கள் வந்தவண்ணம்தான் இருக்கின்றன. 1992-ல் ‘ரோஜா’, 1994-ல் ‘ஜெய்ஹிந்த்’, 1995-ம் ஆண்டு ‘குருதிப்புனல்’, 1996-ம் ஆண்டு ‘இந்தியன்’, 2009-ல் ‘பேராண்மை’, 2012-ல் ‘துப்பாக்கி’ என்று, இன்றும் திரைப்படங்கள் பல கதைக்களங்களின் வாயிலாக, தேசப்பற்றை வலியுறுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. இந்த நற்காரியம் திரையுலகில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என்றாலும், தேசப்பற்று என்பது பிறர் உணர்த்த வருவது அல்ல.. நம் உள்ளத்திலேயே ஊறிக்கிடக்க வேண்டியது.

Next Story