அதிகம் வேட்டையாடப்பட்ட கடல் பசு

கடல் பசுவை ‘ஆவுளியா’ என்றும் அழைக்கிறார்கள். கடல் பசுவில் நிறைய இனங்கள் இருக்கின்றன. இந்தியாவில் மன்னார் வளைகுடா பகுதிகளில், ஒரு காலத்தில் இவை அதிகமாக காணப்பட்டன. தற்போது அந்தமான்- நிக்கோபர் தீவுப் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றன. பல்வேறு காலகட்டங்களில் இவை அதிகமாக வேட்டையாடப்பட்டதன் விளைவாக இந்த பேரினம் அருகி வரும் சூழல் நிலவி வருகிறது.
கடல் பசு மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவை. அவை கடலில் வாழும் தாவர உண்ணியாகும். கடல் பாசிகள், மீன் பிடிப்பு பகுதிகளில் காணப்படும் தாவரங்களையே இவை உட்கொள்கின்றன. கடல் பசுக்கள் அதிகம் ஆழம் இல்லாத பகுதிகளில் வாழ்வதாலும், இவற்றின் எடை அதிகமாக இருப்பதால் விரைந்து செல்ல முடியாத நிலை இருப்பதாலும், அதிகமாக வேட்டையாடப்படுகின்றன. வளர்ச்சியடைந்த ஒரு கடல் பசு சுமார் 400 கிலோ வரை இருக்கும். அதன் நீளமும் 3 மீட்டர் கொண்டதாக இருக்கும். ஒரு நாளில் இந்த கடல் பசு, 45 கிலோ உணவை உட்கொள்ளும்.
கடல் பசுவின் இறைச்சி மிகவும் சுவையாக இருக்கும் என்பதால் இவை, முன் காலத்தில் அதிகமாக வேட்டையாடப்பட்டுள்ளன. கடல் பசுவின் தோலை படகு கட்டவும், செருப்புக்காகவும் பயன்படுத்தியுள்ளனர். இதன் உடலில் இருந்து எடுக்கப்பட்ட கொழுப்பு, மனிதர்கள் சாப்பிடும் வெண்ணெய்க்கு நிகராக இருந்துள்ளது. அதனை விளக்கு எரிக்கவும் பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்த காலத்தில் கடல் பசுவின் கொழுப்பு எண்ணெய்க்கு, மக்களிடம் அதிக வரவேற்பு இருந்திருக்கிறது. இதனை அதிகமாக வேட்டையாட இதுவும் ஒரு காரணம்.
இந்த இனம் அழிவுப் பாதையில் சென்றதற்கு, ஐரோப்பியர்கள் முக்கிய பங்கு வகிக் கிறார்கள். இவர்கள்தான், கடல் பசுக்களின் இனங்களை அதிக அளவில் வேட்டையாடிக் குவித்திருக்கிறார்கள். பல நாடுகளிலும் தற்போது கடல் பசு இனங்களை வேட்டையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கெல்லாம் மேலாக, அந்தமான்- நிக்கோபார் தீவுகளின் மாநில விலங்காக, கடல் பசுதான் இருக்கிறது.
Related Tags :
Next Story






