காற்றாலைக் கட்டிடம்


காற்றாலைக் கட்டிடம்
x
தினத்தந்தி 16 Sep 2021 12:58 PM GMT (Updated: 16 Sep 2021 12:58 PM GMT)

உலகின் மிக உயர்ந்த வானுயர் கட்டிடங்கள் வளைகுடா நாடுகளில்தான் அதிகம் உள்ளன. துபாயிலுள்ள புர்ஜ் கலீபா கட்டிடத்துக்கு இவற்றில் முதலிடம்.

இது அல்லாது சவுதி அரேபியா, கத்தார், ஓமன், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இதே போன்ற வானுயர் கட்டிடங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று பஹ்ரைனில் உள்ள உலக வர்த்தக மையக் கட்டிடம். பஹ்ரைனில் இரண்டாவது உயர்ந்த கட்டிடம் இது. பஹ்ரைன் தலைநகர் மனாமாவின் கடற்கரைக்கு அருகில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தின் மற்றுமொரு சிறப்பு இது உலகின் முதல் காற்றாலை வானுயர் கட்டிடம். இந்தக் கட்டிடமும் அமெரிக்காவின் பழைய உலக வர்த்தக மையம்போல் இரு கோபுரக் கட்டிடம். இங்கிலாந்தைச் சேர்ந்த அட்கின்ஸ் கட்டுமான நிறுவனம் இந்தக் கட்டிடத்தை உருவாக்கியுள்ளது.

2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கட்டிடப் பணிகள் 2008-ம் ஆண்டு நிறைவுற்றன. 240 மீட்டர் உயரம் கொண்ட இந்தக் கட்டிடம், 50 மாடிகளைக் கொண்டது. இதன் இரு கோபுரங்களும் பாலம்போல் மூன்று இணைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று இணைப்புகளின் நடுவில் காற்றாலை விசிறி பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வோர் இயந்திரமும் 225 கிலோ வாட் மின் உற்பத்தித் திறன் கொண்டது. இந்தக் காற்றாலை டென்மார்க்கைச் சேர்ந்த நார்வின் ஏ.எஸ். என்னும் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது.

பெர்சி வளைகுடாவில் வீசும் காற்றைப் பயன்படுத்தி மின்னாற்றலாக மாற்றும் முயற்சியாக இந்தக் காற்றாலை நிறுவப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தின் மொத்த மின் தேவையின் 15 சதவீதம் இந்தக் காற்றாலை மின்சாரத்தால் பூர்த்தி செய்யப்படுகிறது.

Next Story