50 ஆண்டு அண்ணா தி.மு.க.வுக்கு விதை போட்ட நாள்


50 ஆண்டு அண்ணா தி.மு.க.வுக்கு விதை போட்ட நாள்
x
தினத்தந்தி 1 Oct 2021 4:42 AM GMT (Updated: 1 Oct 2021 4:42 AM GMT)

கருணாநிதியுடன் சமாதானமாகும் எண்ணத்துடன் இருந்த எம்.ஜி.ஆர். மனதை மாற்றியது, அக்டோபர் 1-ந் தேதி

க்டோபர் 1. தமிழக வரலாற்றில் இந்த நாளுக்கு தனிச்சிறப்பு உண்டு. 1972-ம் ஆண்டு, அக்டோபர் 1-ம் நாள்தான் பொன்விழா காணும் அண்ணா தி.மு.க. (அ.தி.மு.க.) எனும் புரட்சிகரமான இயக்கம் தோன்றுவதற்கான விதை போடப்பட்டது. இந்த தினத்தில் நடந்த நிகழ்வுகளை அப்படியே கூற விழைகிறேன். பேரறிஞர் அண்ணாவின் திடீர் மறைவுக்கு பிறகு, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ஆதரவினால் கருணாநிதி முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். அதன் பிறகு 1971 தேர்தலில் எம்.ஜி.ஆர். தீவிர பிரசாரம் காரணமாகவே, தி.மு.க. 184 தொகுதிகளில் வென்று சரித்திர சாதனை படைத்தது. அதன்பிறகான கருணாநிதியின் ஆட்சியின்மீது பெருந்தலைவர் காமராஜர் கடுமையாக விமர்சனம் வைத்தார்.

அதேநேரம், எம்.ஜி.ஆருக்கு போட்டியாக கருணாநிதியின் மகன் மு.க.முத்து, ‘பிள்ளையோ பிள்ளை’ படத்தின் மூலம் சினிமாவுக்குள் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். போலவே வேடமிட்டு நடித்த மு.க.முத்துவின் பெயரால் தி.மு.க.வில் ஏராளமான ரசிகர் மன்றங்கள் தொடங்க ஆதரவு கொடுக்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் பெயரில் புதிய ரசிகர் மன்றங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, மு.க.முத்துவின் பெயரில் மன்றங்கள் ஆரம்பிக்கும்படி கட்சியின் கிளைச் செயலாளர்களுக்கு உத்தரவுகள் பறந்தன. புதிதாக உருவாகும் எம்.ஜி.ஆர். மன்றங்களை மு.க.முத்து மன்றமாக மாற்றுவதற்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. மதுரை தி.மு.க. மாநாட்டில் மு.க.முத்து தலைமையேற்று ஊர்வலம் நடத்தியதை கண்டு எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் அதிர்ந்தே போனார்கள்.

எம்.ஜி.ஆர். மன்றம்

இனியும் பொறுப்பதில்லை என்று ஆவேசப்பட்டு எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றங்களின் முக்கிய பொறுப்பாளர்கள் தாம்பரம் பாலுவின் இல்லத்தில் கூடி, ‘தென்னக புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். புகழ் பரப்பும் கலைக்குழு’ என்ற அமைப்பை ஏற்படுத்தினோம். மேலும், எம்.ஜி.ஆர். மன்றத்துக்கு பிரத்யேக கொடி உருவாக்க எண்ணினோம். அப்போது, எம்.ஜி.ஆரின் தாயார் பெயரில் இயங்கிய ராயப்பேட்டை சத்யா திருமண மண்டபத்தின் (இன்றைய அ.தி.மு.க. தலைமைக்கழகம்) முகப்பு இரும்புக்கதவில் இருந்த தாமரை மலரை பயன்படுத்தலாம் என்று நான் சொன்ன ஆலோசனையை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அதன்படி, தாமரைக்கொடி வடிவமைக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். மன்றங்களுக்கு கொடுக்கப்படும் நெருக்கடிகளை எதிர்கொள்வது குறித்தும், தாமரைப்பூ கொடிக்கு அங்கீகாரம் கேட்கவும் ஆலோசனை கூட்டம் நடத்த முடிவெடுத்தோம். அப்போது எம்.ஜி.ஆர். மன்றங்களின் பாதுகாவலராக திகழ்ந்த ஆர்.எம்.வீரப்பன் மூலம் கூட்டத்துக்கு அனுமதி பெற்றோம். 1972 அக்டோபர் 1-ந் தேதியன்று, எம்.ஜி.ஆர். மன்றங்களின் சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம், சத்யா திருமண மண்டபத்தில் ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டம் நடப்பதற்கு முன்பு, அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி சாணக்கியத்தனமாக புதுச்சேரி முதல்-அமைச்சர் பரூக் மரைக்காயர் மூலம் எம்.ஜி.ஆரிடம் சமாதானம் பேசினார். புரட்சித்தலைவரும் வெள்ளை மனதுடன் அதனை ஏற்றுக்கொண்டார்.

வேதனையை கொட்டினேன்

இதையடுத்து அன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.ஜி.ஆர்., “அண்ணா கண்ட இருவர்ண கொடிதான் நமது அடையாளம். தனித்த வேறு அடையாளம் நமக்கு தேவை இல்லை. தாய்க்கழகம் வேண்டுமா, சேய் மன்றம் வேண்டுமா என்று என்னிடம் கேட்டால், நான் தாய்க்கழகம்தான் வேண்டும் என்பேன்…’’ என்று பேசி, எங்களுடைய தனிக்கொடி கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். எம்.ஜி.ஆரின் பேச்சு அனைத்து தொண்டர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. எனக்கு பேரதிர்ச்சி. ஆனாலும், துணிச்சலுடன் எம்.ஜி.ஆர். காரில் ஏறும்போது, அவரிடம் என் நெஞ்சில் இருந்த அத்தனை வேதனையையும் மளமளவென கொட்டினேன்.

“அண்ணே… நீங்கள் பேசிய பேச்சால் இனிமேல் ஒரு எம்.ஜி.ஆர். மன்றம்கூட உருவாகாத நிலை ஏற்பட்டுவிட்டது’’ என்று ஆரம்பித்து, எம்.ஜி.ஆர். மன்றங்கள் தொடங்க வட்ட கிளைக்கழக செயலாளர்களுக்கு தடை விதிக்கப்படுவதையும், மு.க.முத்து மன்றங்கள் தொடங்குவதற்கு ஊக்கம் கொடுக்கப்படுவதையும், கட்சியில் எம்.ஜி.ஆருக்கு எதிராக நடைபெறும் உள்ளடி தகவல்களையும் சொன்னேன். நான் சொன்னதை அக்கறையுடன் கேட்டுக்கொண்ட எம்.ஜி.ஆர்., ‘நான் பார்த்துக்கொள்கிறேன்…’ என்று சொல்லிவிட்டு கிளம்பினார். அதன்பிறகு நான் சொன்னது சரிதானா என்று விசாரித்து, அது உண்மை என்பதை தெரிந்துகொண்டார் எம்.ஜி.ஆர். அதனால்தான், சமாதானத்தை கைவிட்டு, அன்று மாலையே 8-ந் தேதி திருக்கழுக்குன்றம் மற்றும் சென்னை லாயிட்ஸ் சாலை என இரண்டு பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு தேதி கொடுத்தார்.

தன்னெழுச்சி புரட்சி

முதலில் திருக்கழுக்குன்றம் கூட்டத்தில், “தி.மு.க. கட்சி நிர்வாகிகள் ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கிளைக்கழகச் செயலாளர்கள் முதல் அமைச்சர்கள் வரை சொத்து கணக்கு காட்டவேண்டும்” என்று முழங்கினார். நான் சொன்ன கருத்துகளில் இருந்த உண்மையை அறிந்துதான், “கிளைக்கழகச் செயலாளர்களும் கணக்கு காட்டவேண்டும்” என்று பேசினார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் பேச்சு தி.மு.க.வில் பெரும் பூகம்பத்தை கிளப்பியது. தி.மு.க. செயற்குழு உறுப்பினர்கள் 26 பேர் கையெழுத்திட்டு கொடுத்த மனுவின் அடிப்படையில் எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பு அக்டோபர் 10-ந் தேதி வெளியானது. எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட செய்தி கேட்டு தமிழகமே நிலைகுலைந்தது. ‘எம்.ஜி.ஆர். வாழ்க…’ என்ற வாசகம் எழுதப்பட்ட வாகனங்கள் மட்டுமே ஓடின. நாடெங்கும் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. யாருடைய தலைமையும் இல்லாமல் தமிழகத்தில் தன்னெழுச்சி புரட்சி ஏற்பட்டதன் விளைவாக, அ.தி.மு.க. என்ற மக்கள் இயக்கம் அக்டோபர் 17-ந் தேதி உதயமானது.

விதைத்தவர்களில் நானும் ஒருவன்

கருணாநிதியுடன் சமாதானமாகும் எண்ணத்துடன் இருந்த எம்.ஜி.ஆர். மனதை மாற்றியது, அக்டோபர் 1-ந் தேதி நான் துணிச்சலுடன் பேசிய உண்மை கருத்துகள்தான். ‘விதையின் அளவால் மரத்தின் உயரம் தீர்மானிக்கப்படுவதில்லை’ என்பார்கள். அதுபோல் நான் சொன்ன சில உண்மைகளின் அடிப்படையில் எம்.ஜி.ஆர். 8-ந் தேதி நீதி கேட்டதால், 10-ந் தேதி நீக்கப்பட்டார். இதையடுத்து 17-ந் தேதி அ.தி.மு.க. உதயமானது. ஒரு வகையில் அ.தி.மு.க. எனும் பேரியக்கத்துக்கு விதை விதைத்தவர்களில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன் என்பதை நினைத்து, நினைத்து பெருமிதம் கொள்கிறேன். அன்றில் இருந்து இன்றுவரை எம்.ஜி.ஆரின் கொள்கைகளை, லட்சியங்களை, வாழ்வியல் பண்புகளை நெஞ்சில் சுமந்து, ‘வாழ்ந்து காட்டி, வழி காட்டு’ எனும் அறநெறியுடனும், மனிதநேய சிந்தனையுடனும் வாழ்ந்துவருவதை இந்த நாளில் எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

Next Story