சீர்குலைந்த கிராமத்தை மீட்டெடுக்கும் ‘புராஜெக்ட் கூர்க்’


சீர்குலைந்த கிராமத்தை மீட்டெடுக்கும் ‘புராஜெக்ட் கூர்க்’
x
தினத்தந்தி 4 Oct 2021 2:53 PM GMT (Updated: 4 Oct 2021 2:53 PM GMT)

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஏராளமான கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

அவற்றுள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டது கலூரு என்ற கிராமம். இங்கு வசிக்கும் மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்தவர்கள். நிலச்சரிவால் விளைநிலங்கள் விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு கடும் பாதிப்புக்குள்ளானது. வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட பொருட்கள் விளைநிலங்களில் குவிந்து, நிலப்பரப்பை கரடுமுரடாக மாற்றின. வீட்டில் வளர்க்கப்பட்ட கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர் வகைகள் அனைத்தும் சேதமடைந்தன. ஒட்டு மொத்தமாக கலூரு மக்களின் வாழ்வாதாரம் முடங்கிப்போனது. அவர்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியானது. அந்த சூழலை மாற்றி இயல்பு நிலைக்கு மீட்டெடுப்பதற்காக ‘புராஜெக்ட் கூர்க்’ என்ற திட்டம் பல்வேறு தன்னார்வலர்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது. கலூரு கிராம மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அவற்றுள் ஒன்றாக உணவுப் பொருட்களை தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டது. இங்கு மசாலா பொருட்கள், சாக்லெட், சிப்ஸ், அரிசி மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக 30-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தக் கூடத்தில் பெண்களுக்கு உணவுப் பொருட்கள் தயார் செய்வது மட்டுமின்றி தையல் தொடர்பாகவும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை கற்றுக்கொண்ட பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொண்டனர். அவர்களுக்கு தற்போது மாதா மாதம் சம்பளம் கிடைக்கிறது. விற்பனை அதிகமாக இருக்கும்போது கூடுதல் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் வாழ்வாதாரத்தை தொலைத்த பெண்கள் மீண்டும் வாழ்க்கையை வாழ தொடங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி ‘பாரஸ்ட் கபே’ என்ற திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பெண்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் பாரம்பரிய உணவுகள் தயார் செய்யப்பட்டும் விற்கப்படுகின்றன. இதற்கு சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதுபோன்ற தொடர் முயற்சிகளால் கலூரு கிராம மக்கள் தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.


Next Story