கார் சீட் பெல்ட்டில் இருந்து தயாராகும் பேக்குகள்


கார் சீட் பெல்ட்டில் இருந்து தயாராகும் பேக்குகள்
x
தினத்தந்தி 25 Jan 2022 5:19 AM GMT (Updated: 25 Jan 2022 5:19 AM GMT)

சுற்றுச்சூழலை பாதுகாக்க மறுசுழற்சி பயன்பாட்டு பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மண்ணில் மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு மறு சுழற்சி பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.

சுற்றுச்சூழல் மீது நேசம் கொண்ட பலரும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் கைவண்ணங்களில் விதவிதமான மறுசுழற்சி பொருட்கள் சந்தையை அலங்கரிக்கின்றன. அத்தகைய பொருட்கள் மூலம் சுற்றுச்சூழலை காப்பதோடு சுய தொழில் செய்தும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக நிர்வகித்தும் தொழில் முனைவோர்களாக தங்களை நிலை நிறுத்திக்கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர், கவுதம் மாலிக்.


டெல்லி அடுத்த குருகிராமில் வசிக்கும் இவர் குப்பையில் வீசப்படும் பழைய கார் சீட் பெல்ட்டுகள், கார்கோ பெல்டுகளை பயன்படுத்தி நவநாகரிகமான பேக்குகளை உருவாக்குகிறார். இது வித்தியாசமான மற்றும் பலரும் கேள்விப்படாத ஒன்று என்றும் சொல்கிறார்.

‘‘ஏழு ஆண்டுகளுக்கு முன்பு துணிகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை பலர் மறுசுழற்சி செய்தனர். அதுபோன்று நானும் ஏதாவதொரு பொருளை மறுசுழற்சி செய்வது பற்றி ஆராய்ந்தேன். பொதுவாக லாரிகளில் ஏற்றப்படும் பொருட்கள் கீழே விழாமல் பாதுகாப்பதற்கு தார்ப்பாய்களை பயன் படுத்தி கட்டுவார்கள். அத்தகைய தார்பாய்கள் சேதமடைந்து கழிவு களாக மாறும்போது மீண்டும் உபயோகிக்கும் வகையில் பேக்கு களாக உருமாற்றும் வழக்கத்தை சுவிட்சர்லாந்து நிறுவனம் பின்பற்றுவது பற்றி படித்தேன்.

ஆனால் இங்குள்ள தார்ப்பாய் களின் தரம் அவ்வளவு நன்றாக இல்லை. இங்கு தார்ப்பாய் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மிகவும் இலகுவானது. ஆனால் கார் பெல்ட்கள் மிகவும் உறுதியானவை, நீண்ட ஆயுளும் கொண்டவை என்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்தேன்’’ என்கிறார்.

கவுதம் தனது மனைவி பாவனா மற்றும் தாயார் டாக்டர் உஷாவுடன் இணைந்து 2015-ம் ஆண்டே ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கி கார் பெல்ட் பயன்படுத்தி பேக்குகள், பைகள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட தொடங்கிவிட்டார். ஆனால் காரில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட பேக்குகளின் தரம் குறித்து மக்கள் நம்பாததால் வணிக ரீதியான விற்பனையை தொடங்குவதற்கு காலதாமதம் ஆனது என்றும் சொல்கிறார்.

கவுதம் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். பள்ளிப்படிப்பை முடித்ததும் புனே பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை சார்ந்த படிப்பை தேர்ந் தெடுத்தார். அப்போது சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானம் கட்டுவது பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். படிப்பை முடித்ததும் 2001-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு திரைப்படம் மற்றும் ஊடகம் சார்ந்த முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் டிசைனிங் மற்றும் கிராபிக்ஸ் துறையில் களம் இறங்கி இருக்கிறார். மேலும் வெவ்வேறு திட்டங்களில் பணிபுரிந்தபோது பைகள் தயாரிப்பு பற்றி சிந்திக்க தொடங்கி இருக்கிறார்.

‘‘வடிவமைப்பு என்பது நுகர்வோர் ரசனையின் ஒருங்கிணைந்த பகுதி யாகும். ஒவ்வொரு பொருளையும் நுகர்வோர்கள் எப்படி கையாளு கிறார்கள் என்பதை பொறுத்து அதன் வடிவமைப்பு அமைந்திருக்கும். மாறுபடவும் கூடும். சுவிஸ் நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை தயாரிப்பதும் அப்படித்தான் என்பதையும் தெரிந்துகொண்டேன்’’ என்கிறார்.

2010-ம் ஆண்டு இந்தியா திரும்பியவர், பல்வேறு நிறுவனங்களுடன் பணிபுரிய தொடங்கி இருக்கிறார். அப்போது மறுசுழற்சி பொருட்கள் மீது நாட்டம் ஏற்படவே தனது வேலையை விட்டுவிட்டார். பின்பு மறுழற்சி பொருட்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்.

‘‘எனது பணி அனுபவத்தின் மூலம் தொழிற் சாலைக் கழிவுகள் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டியிருந்தது. நாடு முழுவதும் குப்பைகள் கொட்டப் படுவதை கண்டேன். இறுதியாக கார் பெல்டை பயன் படுத்தி பைகள் தயாரிக்க முடிவு செய்தேன்’’ என்கிறார்.

கவுதம் டெல்லியின் மாயாபுரி பகுதியில் பழைய சீட் பெல்ட்களை சேகரிக்க தொடங்கி இருக்கிறார். அவற்றை கொண்டு முதல்கட்டமாக மாதிரி பேக்குகளை உருவாக்கி இருக்கிறார். அவற்றை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வழங்கி இருக்கிறார். அந்த பேக்குகளுக்கு ஓரளவு வரவேற்பு கிடைக்கவே ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கி பேக் தயாரிப்பில் முழுமூச்சில் ஈடுபட தொடங்கிவிட்டார்.

கவுதமின் தாயார் உஷா கூறும்போது, ​​“கிட்டத்தட்ட 40 வருடங்களாக நான் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். ஓய்வுக்குப் பிறகு, வித்தியாசமாகவும், சிறப்பாகவும் ஏதாவது செய்ய விரும்பினேன்.

இந்த ேபக் தயாரிப்பு ஐடியாவை கவுதம் என்னிடம் கூறியபோது அவருக்கு முழு ஆதரவு கொடுத்தேன். எங்கள் வணிகத்தின் மூலம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கும் திட்டமிட்டு வருகிறோம்’’ என்கிறார்.

இந்த பேக் தயாரிப்புக்கு சேதமடைந்த ஆட்டோமொபைல் சீட் பெல்டு களுடன் ராணுவ டிரக் கழிவு பாகங்கள், கழிவு லெதர் பொருட்கள், குப்பையில் வீசப்படும் படுக்கை விரிப்புகள், மேஜை துணிகள், காந்தா மற்றும் மஷ்ரு பட்டு போன்ற ஜவுளி துணிகளையும் பயன்படுத்துகின்றனர். இந்த பேக்குகள் ஜப்பான், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

Next Story