காது தொற்றை தடுக்க 10 ஆலோசனைகள்

சருமத்தை அழகாக பராமரிக்க விரும்பும் பலரும் அதன் ஒரு அங்கமாக இருக்கும் காதுகளை கவனத்தில் கொள்வதில்லை. காதுகளின் நடுப் பகுதியில் வைரஸ், பாக்டீரியா தொற்றுகள் எளிதில் ஏற்படலாம். அவ்வாறு நேர்ந்தால் காது வலி, வீக்கம், சீழ் வடிதல் போன்ற பிரச்சினைகள் உருவாகும்.
காதுகளை சரியாக பராமரிக்காததே அதற்கு காரணமாகும். காதுகளில் தொற்றுகள் ஏற்படுவதை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.
1. காதுகளை சுத்தம் செய்வதற்கு சாவி, பென்சில், பேனா, ஹேர் பின்கள் அல்லது விரல்கள் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.
2. காதுகளை சுத்தம் செய்வதற்கு சுத்தமான மற்றும் சுகாதாரமான இயர் பட்ஸ்களை பயன்படுத்த வேண்டும். அவற்றை கொண்டு காது மடல்கள் எனப்படும் காதுகளின் வெளிப்புற பகுதிகளை மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
3. காதுகளின் உள் அடுக்கு பகுதியை சுத்தம் செய்வதற்கு எதையும் பயன்படுத்தக்கூடாது.
4. காதுகளை சுத்தம் செய்வதற்கு தண்ணீர், திரவம் அல்லது எண்ணெய் ஊற்றுவதை தவிர்க்க வேண்டும்.
5. உங்களுக்கு சளி பிடித்திருந்தால் மூக்கு வழியே காற்றை உள்ளிழுப்பது, வெளியிடுவது போன்ற கடினமான செயல்களில் ஈடுபடாதீர்கள். அவ்வாறு மூக்குக்கு அழுத்தம் கொடுப்பது காதுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம். காதுகளில் நோய்த்தொற்றையும் உண்டாக்கலாம்.
6. மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் போன்ற தொற்றுகள் இருந்தால் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக மலைப்பிரதேசம் போன்ற உயரமான இடங்களுக்கு செல்வதை அறவே தவிர்ப்பது நல்லது.
7. காதுகளில் அடைப்பு, காதில் இருந்து நீர் வெளியேற்றம், அரிப்பு, வலி, மூக்கில் தொற்று இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
8. மூக்கில் தொற்று இருந்தால் நீச்சல் போன்ற நீர் விளையாட்டுகளை தவிர்க்க வேண்டும்.
9. காது கேட்கும் கருவியை பயன்படுத்துபவராக இருந்தால், அதனை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அதனை பயன்படுத்தி முடித்ததும் உலர் தன்மை கொண்ட பெட்டியில் வைத்து பாதுகாக்க வேண்டும்.
10. இசையை கேட்பதற்கு இயர் போன் பயன்படுத்தினால் அதனை மறுமுறை பயன்படுத்துவதற்கு முன்பு நன்கு சுத்தப்படுத்த வேண்டும். கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்துவது நல்லது.






