20 ஆயிரம் காலி பணியிடங்கள்: எஸ்.எஸ்.சி. தேர்வுகளுக்கு அளிக்கப்படும் இலவச பயிற்சிகள்


20 ஆயிரம் காலி பணியிடங்கள்: எஸ்.எஸ்.சி. தேர்வுகளுக்கு அளிக்கப்படும் இலவச பயிற்சிகள்
x

ஸ்டாப் செலக்சன் கமிஷன் - எஸ்.எஸ்.சி (Staff Selection Commission-S.S.C) என்ற அமைப்பு, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது 20 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வுக்கான (Combined Graduate Level Exam) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த தேர்வு நடைபெறும் விதம் குறித்த தகவல்கள் கடந்த வாரம் வெளியானது. இந்த வாரம் இந்த தேர்வுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் இலவச பயிற்சிகள் குறித்து காண்போம்.

மனத்தடையை அகற்றுங்கள்

எஸ்.எஸ்.சி தேர்வுகள் கடினமானவை, ஆங்கிலப் பகுதிக்கு விடையளிப்பது என்னால் முடியாது, ஆங்கிலம் தெரியாது, கணிதம் எனக்கு வராது, ரீசனிங் (Reasoning) பகுதி எனக்குப் புரியாது.... போன்றவை இந்த தேர்வு எழுதாமைக்கு மாணவர்கள் சொல்லும் காரணங்கள்.

பொதுவாக நமது மாணவர்கள், "எனக்கு கணக்கு வராது, ஆங்கிலம் புரியாது என தனக்குத்தானே மனத்தடைகளை (Mental Barriers) ஏற்படுத்திக் கொள்கிறார்கள். சிறு வயதில் அவ்வப்போது நாம் சந்தித்த சில தோல்வி களின் காரணமாக நமக்கு நாமே தடைகளையும், தவறான எண்ணங்களையும் உருவாக்கிக் கொண்டு அதை முழுமையாக நம்பி விடுகிறோம்.

இதனால் கணக்கு பாடத்தை கண்டாலே வெறுப்பு வருவதுடன், அதில் தங்களால் நல்ல மதிப்பெண்கள் பெற முடியாது, தனக்கு அந்தப்பாடம் ஒத்துவராது என்ற எண்ணம் வந்துவிடுகிறது. இதனால் முயற்சியை கைவிடுகின்றனர். ஆனால் பயிற்சியின் மூலம் இந்த மனநிலையை மாற்ற முடியும்.

1954-க்கு முன்பு வரை ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் ஓடிக் கடப்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டதாகவே தடகள வீரர்களால் நம்பப்பட்டு வந்தது. ஆனால் 1954-ம் ஆண்டு மே மாதம் இங்கிலாந்தைச் சேர்ந்த ரோஜர் பெனிஸ்டர் ஒரு மைல் தூரத்தை 3 நிமிடங்கள் 59.4 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இதுபோல ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் புதிய சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. முடியும் என்ற நம்பிக்கையும், கவனக்குவிப்புமே, தடைகளைத் தாண்டி வெற்றி பெற வழி வகுக்கிறது.

எனவே, என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் இன்றே தேர்வுக்கான பயிற்சியை தொடங்குங்கள். உங்களுக்கான பயிற்சிகளை நீங்கள் வீட்டில் இருந்தபடி அல்லது வேலை செய்துகொண்டு மற்ற நேரங்களில் எடுத்துக்கொள்ள முடியும். இந்த பயிற்சிகளை தமிழக அரசு இலவசமாக அளிக்கிறது. அதுதொடர்பான விவரங்கள் வருமாறு:-

மெய்நிகர் கற்றல் வலைத்தளம்

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையானது அரசு போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு உதவும் நோக்கில் இணைய வழியிலான மெய்நிகர் கற்றல் வலைத்தளத்தை (Virtual Learning Portal) செயல்படுத்தி வருகிறது. கிராமப்புற மாணவர்கள் உள்பட அனைத்துப் போட்டியாளர்களும் பயனடையும் வகையில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் மெய்நிகர் கற்றல் (Virtual Learning) என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.

இது TNPSC (Group I, Group II, Group IV and Group VIIB/VIII) TNUSRPB, UPSC, SSC, Airforce, IBPS, RRB போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகளை கொண்டுள்ளது.

ஒருங்கிணைந்த இணைய வழியிலான மெய்நிகர் கற்றல் முறையின் மூலம் மாணவர்கள் எந்த இடத்திலிருந்தும் எந்த நேரத்திலும் கற்கும் சூழலை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம். போட்டித் தேர்வுக்கு தயார் செய்துவரும் இளைஞர்கள் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்தில் தங்கள் பெயரை கட்டணமின்றி இலவசமாக பதிவு செய்து பயன் பெறலாம்.

சிறப்பம்சங்கள்

கிராமப் பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களின் தேவை அறிந்து தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் அனைத்து மென்பாடக்குறிப்புகளும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மேலும், இம்மென்பாடக்குறிப்புகளை ஆஃப் லைன் முறையிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில், மாதிரி தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டுத் தேர்வுகளை மேற்கொண்டு பயிற்சி பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் தினந்தோறும் எடுக்கப்படும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள இயலாத தொலைதூரத்தில் உள்ள இளைஞர்கள் பயனடையும் வகையில் பயிற்சி வகுப்புகளுக்கான காணொலி பாடக் குறிப்புகளும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

தன்னார்வ பயிலும் வட்டம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், தன்னார்வ பயிலும் வட்டம் செயல்படுகிறது. இதில் அனைவரும் உறுப்பினராகலாம். கட்டணம் எதுவுமில்லை. போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து மாதாந்திர சஞ்சிகைகள், தினசரி நாளிதழ்கள் மற்றும் TNPSC, வங்கிப்பணி (IBPS), SSC, ரெயில்வே தேர்வாணையம் மற்றும் யு.பி.எஸ்.சி, என்ஜினீயரிங் துறை போன்ற அனைத்து வகை தேர்வுகளுக்கான புத்தகங்களும் இங்கே உள்ளன.

இதைத் தவிர இப்போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளும், நடத்தப்படுகின்றன. அனைத்து வகுப்பு (கம்யூனிட்டி) இளைஞர்களும் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.

இத்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகும் விவரம், தேர்வு முடிவுகள், இதர துறை வேலைவாய்ப்புகள், ஒவ்வொரு வருடமும் எஸ்.எஸ்.சி, யு.பி.எஸ்.சி, டி.என்.பி.எஸ்.சி போன்ற பலவகை தேர்வு வாரியங்களில் என்னென்ன தேர்வுகள் எந்த மாதத்தில் நடைபெறும் என்னும் கால அட்டவணை போன்ற வேலைவாய்ப்பு விவரங்களும் இந்த தன்னார்வ பயிலும் வட்டத்தில் கிடைக்கிறது.

கல்வி தொலைக்காட்சி

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பாக டி.என்.பி.எஸ்.சி (TNPSC), ரெயில்வே தேர்வாணையம் (RRB), பணியாளர் தேர்வு குழுமம் (SSC), வங்கிப் பணியாளர் சேவைகள் குழுமம் (IBPS) உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தயாராகும் மாணவ - மாணவிகள் பயன்பெறும் வகையில் போட்டித் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக நடைபெறும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள இயலாதவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டு அரசுப் பணிக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தினமும் காலை 7 மணியிலிருந்து 9 மணி வரையிலும், இதன் மறு ஒளிபரப்பு இரவு 7 மணியிலிருந்து 9 மணி வரையிலும் ஊக்கவுரைகள், முந்தைய ஆண்டுகளில் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மேலும், தினசரி நிகழ்ச்சிகளை TN Career Services Employment என்ற Youtube Channel - ல் அடுத்தடுத்த நாட்களிலும் காணலாம். எனவே, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் அனைத்து இளைஞர்களும் கல்வி தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சியினை கண்டு பயன்பெறலாம்.

இந்த தேர்வுக்கு தயாராகும் முறைகள், மாதிரி வினாத்தாள்கள் குறித்த விவரங்களை அடுத்த வாரம் காணலாம்.

எம்.கருணாகரன், துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு), கோவை.


Next Story