மனித சமுதாயத்துக்கு கால்நடை மருத்துவ துறையின் உன்னத சேவை...!


மனித சமுதாயத்துக்கு கால்நடை மருத்துவ துறையின் உன்னத சேவை...!
x
தினத்தந்தி 26 April 2019 10:02 AM IST (Updated: 26 April 2019 10:02 AM IST)
t-max-icont-min-icon

நாளை (ஏப்ரல் 27-ந் தேதி) உலக கால்நடை மருத்துவ தினம்

கால்நடை மருத்துவத் துறை என்பது வெறும் கால்நடைகளின் மருத்துவம் தொடர்பான துறை மட்டுமல்ல. அது மனித சமுதாயத்துக்கான உணவு உற்பத்தி மற்றும் விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்துவதன் மூலம் மனித சமுதாயத்தின் நலனுக்காகவும் செயல்படும் துறை. மேலும் சுற்றுச்சூழல் மற்றும் உணவு உற்பத்தி மேம்பாட்டுக்காகவும் இத்துறை செயல்படுகிறது.

பால், முட்டை, இறைச்சி உள்ளிட்ட மனித சமுதாயத்துக்கு தேவையான முக்கியமான உணவுப்பொருட்களை உற்பத்தி செய்வதில் கால்நடைத்துறையின் பங்கு மிக முக்கியமானது. அதுமட்டுமின்றி, கால்நடைகள் வேளாண்துறைக்கு ஆற்றும் சேவைகள் அனைவருக்கும் தெரியும். ஆகவே வேளாண்மை, உணவு உற்பத்தி, உணவு பாதுகாப்பு மற்றும் மனித நலன் ஆகிய அனைத்துக்கும் அளப்பரிய பங்காற்றுவது கால்நடை மருத்துவத்துறை ஆகும்.

கால்நடை மருத்துவத் துறையின் பணிகளை பொதுமக்களுக்கு பரவலாக தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் உலக கால்நடை மருத்துவ சங்கம் மற்றும் பன்னாட்டு விலங்குகள் நல சங்கம் ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் கடைசி சனிக்கிழமையை உலக கால்நடை மருத்துவ தினமாக அனுசரிக்க முடிவெடுத்து, கடந்த 2000-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.

உலக கால்நடை மருத்துவ சங்கம் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 5 லட்சம் கால்நடை மருத்துவர்களை உறுப்பினர்களாக கொண்டு செயல்படும் அமைப்பாகும். இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 95 கால்நடை மருத்துவ அமைப்புகளும் இணைந்து செயல்படுகின்றன. இதன் தலைமையகம் பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸ்சல்ஸ் நகரில் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையமாக வைத்து, உலக கால்நடை மருத்துவ தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

2000-ம் ஆண்டு கொண்டாடப்பட்ட முதல் உலக கால்நடை மருத்துவ தின கருப்பொருள் வெறிநோய் ஆகும். அவ்வாண்டு வெறிநோய், வெறிநோய் தடுப்பு நடவடிக்கை, தெரு நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக உலகெங்கும் மிகப்பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 2018-ம் ஆண்டின் கருப்பொருள் ‘மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நீடித்த மேம்பாட்டில் கால்நடை மருத்துவத்துறையின் பங்கு’ என்பதாகும்.

2019-ம் ஆண்டுகான உலக கால்நடை மருத்துவ தின கருப்பொருள் ‘தடுப்பூசியின் மதிப்பு’ ஆகும்.

உலக கால்நடை மருத்துவ தினத்தை கால்நடை மருத்துவ பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் இத்துறை தொடர்புடைய பல்வேறு அமைப்புகள் விமரிசையாக கொண்டாட அழைப்பு விடுக்கிறது உலக கால்நடை மருத்துவ அமைப்பு. உலக கால்நடை மருத்துவ தினத்தன்று, கருப்பொருள் தொடர்பான கருத்தரங்கு, மாநாடு, துண்டு பிரசுரம் வெளியீடு, இலவச தடுப்பூசி முகாம், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு கால்நடைத்துறை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசனைகளை வழங்குகிறது இவ்வமைப்பு. சிறப்பான முறையில் செயல்படும் அமைப்புக்கு ஆண்டுதோறும் சர்வதேச விருது ஒன்றையும் 2008-ம் ஆண்டு முதல் வழங்குகிறது. முதல் விருது கென்யா நாட்டின் கால்நடை மருத்துவ சங்கத்துக்கு வழங்கப்பட்டது.

ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த உயரிய விருதை உலகின் பல நாடுகளை சேர்ந்த கீழ்கண்ட அமைப்புகள் பெற்றுள்ளன.

பாகிஸ்தான் கால்நடை பாதுகாப்பு அமைப்பு (2010); மியான்மர் கால்நடை மருத்துவ சங்கம் (2011); துருக்கி கால்நடை மருத்துவ சங்கம் (2012); தென்ஆப்பிரிக்க கால்நடை மருத்துவ சங்கம் (2013); அமெரிக்க கால்நடை மருத்துவ சங்கம் (2014); கோஸ்டாரிக்கா கால்நடை மருத்துவ சங்கம் (2015); ஜமைக்கா கால்நடை மருத்துவ சங்கம் (2016); பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கால்நடை மருத்துவ தேசிய கவுன்சில் (2017); உகாண்டா கால்நடை மருத்துவ சங்கம் (2018).

இந்த ஆண்டு உலக கால்நடை மருத்துவ தினம் ஏப்ரல் மாதம் 27-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சிறப்பான முறையில் உலக கால்நடை மருத்துவ தினத்தைக் கொண்டாடும் அமைப்புக்கு 2500 அமெரிக்க டாலர் (சுமார் 1,75,000 ரூபாய்) பரிசுத்தொகை வழங்க முன்வந்துள்ளது உலக கால்நடை மருத்துவ சங்கம்.

உலக கால்நடை மருத்துவ அமைப்பு வழங்கும் விருதை பாகிஸ்தான், மியான்மர் போன்ற நாடுகளை சேர்ந்த கால்நடை மருத்துவ சங்கங்கள் பெற்றுவிட்ட நிலையில், உலகின் அதிகமான கால்நடைகளை கொண்டுள்ள, உலகின் சிறந்த கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளையும், ஆய்வு நிறுவனங்களையும் கொண்டுள்ள இந்தியா இன்னும் பெறவில்லை. உடனடியாக இந்திய கால்நடை மருத்துவ சங்கம் இவ்விருதை பெற முயற்சிக்க வேண்டும்.

சமூக வலைத்தளங்களிலும் உலக கால்நடை மருத்துவ தினம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு, தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள் கால்நடை மருத்துவம் மற்றும் வளர்ப்பு பிராணி ஆர்வலர்கள், உலக கால்நடை மருத்துவ தினத்தை அனைவரும் சிறப்பாகவும், பயனுள்ள வகையிலும் கொண்டாட வேண்டுகிறேன்.

டாக்டர் வ.ஞானபிரகாசம், முன்னாள் துணைவேந்தர்,
தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம்.

1 More update

Next Story