'ஆப்' வடிவமைப்பில் அசத்தும் சிறுமி அன்விதா விஜய்..!

அன்விதா விஜய், 12 வயதே ஆன இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்தச் சிறுமி, ஆப்பிள் நிறுவனத்தின் செயலி வடிவமைப்பாளராக ஆகியுள்ளார்.
புத்தகத்தை சுமந்து கொண்டு பள்ளி செல்லும் சிறுமி, ஆப்பிள் நிறுவனத்தின் செயலி வடிவமைப்பாளர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மை அதுதான்.
ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர செயலி வடிவமைப்பாளர் கருந்தரங்கம், சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது. அதில் மிக வித்தியாசமான நிகழ்வு என்னவென்றால் சிறு வயதான அன்விதா விஜய் கலந்து கொண்டு சபையையே வியப்பில் ஆழ்த்தியதுதான். மொத்தம் 350 பேர் கலந்துகொண்ட இதில், 120 பேர் மாணவர்கள். அதிலும் 18 வயது நிரம்பியவர்கள். இவர்களில் மிகவும் சிறுவயதில் செயலி வடிவமைப்பாளராகி சாதனை படைத்துள்ளார் அன்விதா விஜய்.
ஐ-போன் மற்றும் ஐ-பேடிற்கான செயலி வடிவமைப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர். அன்விதா செயலி வடிவமைப்பாளராவதற்காக தனியாக எந்த ஒரு கல்லூரிக்கோ அல்லது நிறுவனத்திற்கோ செல்லவில்லை. யூடியூப் மற்றும் இன்டெர்நெட்டிலேயே இதனை கற்றறிந்துள்ளார்.
இது பற்றி அன்விதா விஜயிடம் கேட்ட போது, ''எவ்வாறு புரோகிராமிங் செய்வது என்பதை முற்றிலும் இண்டர்நெட்டிலேயே கற்றுக்கொண்டேன். என்னுடைய இளைய சகோதரியின் செய்கையால் ஈர்க்கப்பட்டு நிறைய ஐடியாக்கள் கிடைத்தன. இதனால் குழந்தைகளுக்கான பிரத்யேக செயலிகள் வடிவமைக்கப்பட்டன.
இதில் 100 வகையான ஒலிகள் மற்றும் ஒளிரும் அட்டைகள் உள்ளன. அதன் மூலம் பல வகையான விலங்குகளின் பெயர் மற்றும் அவற்றின் ஒலிகளை அறிய முடியும்'' என்றார்.






