விண்ணில் ஒருநாள் வாழ்க்கை


விண்ணில் ஒருநாள் வாழ்க்கை
x

இந்த பூமியில் உள்ள 800 கோடி மக்கள் ஒவ்வொருவரும் பல வகைகளில் வேறுபட்டிருந்தாலும், காலையில் எழுவதில் இருந்து, உண்ணும் உணவு, பயணம், படிப்பு அல்லது வேலை என பல்வேறு நடைமுறைகளில் எவரோ ஒருவரையோ, பலரையோ ஒன்றுபட்டு செயல்படுகிறோம். ஆனால், விண்வெளியில் உள்ளவர்களின் வாழ்க்கை முறை தலைகீழாக இருக்கும். நமது தலைக்கு மேலே சுமார் 400 கி.மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களின் தினசரி செயல்பாடுகள் முற்றிலும் வேறுபட்டவை.

அவர்களின் ஒரு நாள் செயல்பாடுகளை இங்கு சுருக்கமாக காணலாம்.

விழித்தெழுதல்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தூங்குவதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள பைக்குள் விண்வெளி வீரர்கள் இரவு முழுவதும் மிதந்து கொண்டே தூங்குகிறார்கள். காலை 6 மணிக்கு தானாக எரியும் விளக்குகளை சமிக்ஞையாக கொண்டு வீரர்கள் தூக்கத்தில் இருந்து எழுவார்கள்.

மிதக்கும் பற்பசை

தூங்கி எழுந்தவுடன் கழிவறைக்கு செல்வது, பல் தேய்ப்பது என வீரர்களின் வாழ்கை பூமியில் உள்ளவர்களோடு ஒத்து காணப்படும். பற்பசை மற்றும் பல் துலக்கியை பயன்படுத்திவிட்டு அப்படியே விட்டுவிடுவார்கள் - அவை ஓடத்தில் மிதந்துகொண்டே இருக்கும். அதற்கடுத்து, சிறிது காலை உணவை சாப்பிட்டுவிட்டு, ஓடத்தின் கீழுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் நடக்கும் தினசரி நிகழ்வுகள் குறித்து திட்டமிடும் கூட்டத்திற்காக கூடுவார்கள்.

பராமரிப்பு

தங்களது பெரும்பாலான நேரத்தை சர்வதேச விண்வெளி ஓடத்தின் பராமரிப்பு மற்றும் இயக்கத்தை நிர்வகிப்பதிலேயே விண்வெளி வீரர்கள் செலவிடுகிறார்கள். அதைவிடுத்து ஓடத்தை சுத்தம் செய்வதற்கு, பொருட்களை இடமாற்றம் செய்வதற்கு ஒருநாளும், ஓடத்தின் காற்று சுத்திகரிப்பு கருவி உள்பட முக்கிய கருவிகளில் ஏற்படும் பழுதை நீக்குவதற்கு மற்றொரு நாளையும் செலவிடுகிறார்கள். வீரர்கள் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் விண்வெளியில் மிதந்து கொண்டே இருக்கும் என்பதால், புதிதாக இங்கு வரும் வீரர்கள் தாங்கள் வைத்த பொருட்களை கண்டுபிடிப்பதிலேயே தொடக்க நாட்களை செலவிடுவார்கள்.

மிதக்கும் உடற்பயிற்சி கூடம்

விண்வெளி வீரர்கள் எப்போதும் மிதந்துகொண்டே இருப்பதால் அவர்களுக்கு பல்வேறுவிதமான உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். ஈர்ப்பு விசையற்ற சூழலில் வாழ்வதால் விண்வெளி வீரர்களின் எலும்புகள் உடையக்கூடிய தன்மையை அடைவதாகவும், தொடர்ந்து உடலை நகர்த்திக்கொண்டே இருக்கும்போது தசைகள் வலிமையற்றுப் போவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த உடல்ரீதியான பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு விண்வெளி வீரரும் அங்கேயே அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் உடற்பயிற்சி கூடத்தில் 1 நாளைக்கு குறைந்தது 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகிறது.

மதிய உணவு

பூமியில் இருப்பவர்களை போன்றே விண்வெளி வீரர்களின் வாழ்க்கையும் வார நாட்கள், வார இறுதி நாட்கள் என்று இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் விண்வெளி வீரர்கள் தங்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி 2 பேர் சேர்ந்தோ, சிறு குழுவாகவோ பணியாற்றுகிறார்கள். வார நாட்களில் எப்போதாவது ஒருமுறைதான் அனைத்து வீரர்களும் ஒன்றாக மதிய உணவு உண்பார்கள். வார இறுதியில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பேசிக்கொண்டு உண்ணுகின்றனர்.

ஓய்வு நேரம்

ஒவ்வொரு நாளும் தங்களுக்கான பணிகளை முடிந்தபின்பு மீதமுள்ள நேரத்தை தங்களது விருப்பம் போல் செலவிட்டுக்கொள்வதற்கு வீரர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்துகொண்டே தங்களது குடும்பத்தினருக்கு போன் செய்யலாம்; மின்னஞ்சல் அனுப்பலாம்; திரைப்படங்களும் பார்க்க முடியும். சர்வதேச விண்வெளி நிலையத்தின் டிராங்குலிட்டி எனும் பகுதியிலிருந்து கண்ணாடி வழியாக விண்வெளியில் இருந்து பூமியை பார்ப்பது விண்வெளி வீரர்களின் பொதுவான பொழுதுப்போக்காக உள்ளது. அதுமட்டுமின்றி, பூமியின் ஆச்சரியமளிக்கும் வடிவத்தையும், அதிலுள்ள குறிப்பிட்ட நகரங்கள், காடுகள் குறித்த புகைப்படங்களையும் வீரர்கள் எடுக்கிறார்கள்.


Next Story