குளிர்சாதனப் பெட்டியில் பசுமை தோட்டம்

வீட்டில் மாடித்தோட்டம் அமைத்து விதவிதமான செடிகள் வளர்க்க விரும்புபவர்களுக்கு முன்னோடியாக திகழ்கிறார், தாயுமானவன் குணபாலன்.
மண் தொட்டிகள், பிளாஸ்டிக் தொட்டிகள், 'குரோ பேக்குகள்' என வரிசையாக அடுக்கி வைத்து செடி வளர்ப்பவர்களுக்கு மத்தியில் மாற்று முயற்சியாக பழைய குளிர்சாதனப் பெட்டிகளை (Refrigerator) செடி வளர்ப்புக்கு பயன்படுத்துகிறார். தனது வித்தியாசமான செடி வளர்ப்பு பற்றி அவர் அளித்த பேட்டி..
உங்களைப் பற்றி சொல்லுங்கள்?
எனது பூர்வீகம் காரைக்கால். மின்னியல் மற்றும் மின்னணுவியல் (இ.இ.இ.) பிரிவில் முதுகலை என்ஜினீயரிங் படிப்பை முடித்துள்ளேன். திருமணத்திற்கு பிறகு பணி நிமித்தமாக கடலூர் அடுத்த நெய்வேலியில் குடியேறினேன். மனைவி எழில்மதி இல்லத்தரசி. இன்னிலா, கவிநிலா என இரு குழந்தைகள் உள்ளனர். பண்ருட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணி புரிகிறேன்.
செடி வளர்ப்பில் ஆர்வம் வந்தது எப்படி?
எனது பெற்றோர் குணபாலன் - கஸ்தூரி இருவரும் ஆசிரியர்கள். வீட்டில் மலர் செடிகள், காய்கறிகள், மூலிகைகள் கொண்ட தோட்டத்தை பராமரித்து வந்தனர். சிறு வயதிலேயே அவர்களுக்கு உதவி செய்து வளர்ந்ததால் இயல்பாகவே செடி வளர்ப்பு மீது ஆர்வம் ஏற்பட்டது. உயர் படிப்பு, வேலை என வாழ்க்கை சூழல் மாறிப்போனாலும் திருமணத்திற்கு பிறகு மீண்டும் செடி வளர்ப்பு ஆசை துளிர்விட்டது. அதனால் செடிகள் வளர்க்கத் தொடங்கினேன். வாடகை வீடு என்பதால் வீட்டின் உரிமையாளர் செடி வளர்ப்புக்கு அனுமதிக்கவில்லை. அதனால் ஏற்பட்ட விரக்தி சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது.
செடி வளர்ப்புதான் என்னை சொந்த வீடு வாங்க வைத்திருக்கிறது என்பதை நினைக்கும்போது பெருமிதமாக இருக்கிறது. இப்போது என் வீட்டில் மாடித்தோட்டம் அமைத்து விரும்பிய செடிகளை வளர்க்கிறேன். வீட்டின் அருகிலேயே 5 செண்ட் நிலம் வாங்கி அதில் செடிகள் வளர்த்து எனது தோட்ட பண்ணையை விரிவாக்கம் செய்திருக்கிறேன். முயல், வாத்து வளர்ப்பு என ஒருங்கிணைந்த பண்ணையாகவும் மாற்றிக்கொண்டிருக்கிறேன்.
ஆரம்பகாலகட்டத்தில் செடி வளர்க்கும்போது எதிர்கொண்ட சிரமங்கள் என்ன?
நானும் ஆரம்பத்தில் மற்றவர்களை போலத்தான் செடி வளர்ப்புக்கான தொட்டிகள், மண் புழு உரம், மண் கலவை, கோகோபீட், செடி என ஒவ்வொன்றையும் தனித்தனியாக வாங்கி செடி வளர்த்தேன். அதன் மூலம் ஓரளவு அனுபவம் கிடைத்தது. செடிகள் வளர்க்கும் ஆசையும் அதிகரித்தது. ஆனால் செடி வளர்க்க தேவையான பொருட்கள் வாங்குவதற்குரிய செலவும், கடையில் காய்கறி வாங்கும் செலவும் ஒன்றாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் செடி வளர்ப்புக்கு கூடுதல் செலவு செய்வது போல் தோன்றியது. அது குடும்பத்தினரிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி யது. என் மனமோ இயற்கை நிச்சயம் நம்மை கைவிடாது என்று நம்பியது. அதனால் செடி வளர்ப்புக்கு தேவையான மூலப்பொருட்களை வீட்டிலேயே தயார் செய்யலாம் என்று முடிவெடுத்தேன்.
எப்படி சாத்தியப்படுத்தினீர்கள்?
நான் செடி வளர்ப்புக்கு தேவையான மூலப்பொருட்களை ஒரு கிலோ மீட்டருக்குள்ளேயே பெறுகிறேன். எங்கள் பகுதியில் முந்திரி தோட்டம் அதிகம் இருக்கிறது. ஒரு தோட்டத்திற்குள் சென்றால் காய்ந்த இலை சருகுகளை குவியல் குவியலாக அள்ளிவிடலாம். எதிர் வீட்டில் மாமரங்களின் இலைகள் தரையில் விழுந்து கிடக்கும். அவற்றை எரிப்பார்கள். இப்போது எனக்கு கொடுத்து உதவுகிறார்கள். கரும்பு ஜூஸ் கடைக்கு சென்று கரும்பு சக்கைகளை வாங்கி வந்து அதனை சிறு இயந்திரம் மூலம் தூள்களாக மாற்றிவிடுவேன். டைல்ஸ் கடைக்கு சென்று அதனை பேக்கிங் செய்ய பயன்படுத்தும் வைக்கோல் கழிவுகளை வாங்கி வருவேன். சாலையோரத்தில் கிடக்கும் கால்நடைகளின் கழிவுகள், கல்யாண மண்டபத்தில் இருந்து வாழை சருகுகள், பழக்கடைகளில் வீணாகும் பழங்கள், தேநீர் கடைகளில் வீணாகும் டீ, காபி தூள்கள், மீன் கடை கழிவுகள் என நம்மை சுற்றியே செடி வளர்ப்புக்கான மூலப்பொருட்கள் ஏராளம் உள்ளன. குப்பைகளாக பார்க்கப்படும் அவற்றை தேடிச் சென்று சேகரித்து, செடி வளர்ப்புக்கு பயன்படுத்துகிறேன். நம்மால் முடிந்தவரை இவற்றை மறுசுழற்சி செய்து பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் மாசுபடுவது தவிர்க்கப்படும். இயற்கையும், ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.
பழைய குளிர்சாதன பெட்டிகளை (பிரிட்ஜ்) தேர்ந்தெடுத்ததற்கு காரணம் என்ன?
பூந்தொட்டி, குரோ பேக் போன்றவற்றில் ஓரிரு செடிகள் தான் வளர்க்க வேண்டும். நிறைய செடிகள் வளர்க்க வேண்டுமென்றால் அவைகளை வாங்குவதற்கே அதிகம் செலவளிக்க வேண்டும். யூடியூப், இணைய தள தேடல்கள் செடி வளர்ப்பு முறையை எளிமைப்படுத்தியுள்ளன. ஏராளமான ஆலோசனைகளை வழங்குகின்றன. அதன் அடிப்படையில்தான் பழைய பொருட்கள் வாங்கும் கடைக்கு சென்று பிரிட்ஜ் வாங்கி வந்தேன். அது ஒரு பூந்தொட்டி, குரோ பேக் வாங்குவதற்கு ஆகும் செலவை விட குறைவாக இருந்தது. ஒரு பிரிட்ஜிலேயே நிறைய செடிகளை வளர்க்க முடிந்தது.
6 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட பிரிட்ஜை கிடைமட்டமாக வைத்து அதில் காய்ந்த இலைகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு அடுக்காக பரப்புவேன். அவற்றுக்கு இடையே கரும்பு சக்கைகளை ஒரு அடுக்காக போடுவேன். மரத்தின் இலைகள் இரு வித்திலை தாவர வகையை சேர்ந்தவை. கரும்பு சக்கை ஒரு வித்திலை தாவர வகையை சார்ந்தவை. இவை இரண்டும் ஒருசேர கலக்கும்போது மக்கும் செயல்முறை சம நிலைப்படும். மேல் பரப்பில் மட்டும் ஒரு அடுக்குக்கு மண் தூவுவேன்.
வாரம் ஒரு முறை தண்ணீர் தெளித்து வந்தால் போதும். மூன்று மாதங்களில் செடி வளர்ப்புக்கு உகந்த மண் கலவை தயாராகிவிடும். அதில் விதைகள் விதைப்பேன். செடிகளும் நட்டு வைப்பேன். ஒரே பிரிட்ஜ் தொட்டிக்குள் உயரமாக வளரும் செடி, நடுத்தர உயரம் கொண்ட செடி, படர் கொடி வகை செடி, கிழங்கு வகை செடி என பல்வேறு வகையான செடிகளை வளர்க்கிறேன். ஏற்கனவே அதில் மக்கி இருக்கும் இலை சருகுகள் உர தேவையை பூர்த்தி செய்துவிடும். மாதம் ஒருமுறை ஜீவாமிர்தம் தெளித்தால் போதும். செடிகள் நன்றாக வளர்ந்து எதிர்பார்த்ததை விட அதிக மகசூல் கொடுக்கும். கடையில் வாங்கும் காய்கறிகளை விட அதன் சுவை பிரமாதமாக இருக்கும். ஒருமுறை வீட்டு தோட்டத்தில் விளைந்த காய் கறியை சமைத்து சாப்பிட்டு பாருங்கள். செடி வளர்க்கும் ஆர்வம் இயல்பாகவே அதிகரித்துவிடும்.
என்னென்ன செடிகளை வளர்க்கிறீர்கள்?
நான் அந்தந்த பருவ காலங்களுக்கு ஏற்ப செடிகளை பயிரிடுகிறேன். இப்போது 20-க்கும் மேற்பட்ட பிரிட்ஜுகளில் செடிகள் வளர்க்கிறேன். 100-க்கும் மேற்பட்ட தொட்டிகள், குரோ பேக்குகளிலும் செடிகள் வளர்கின்றன. ஒருமுறை அறுவடை செய்ததும் பிரிட்ஜின் அடிப்பகுதியில் இருக்கும் மண் கலவையை எடுத்து மற்ற தொட்டி செடிகளுக்கு உரமாக பயன்படுத்துகிறேன். அதனால் எதையும் வெளியில் இருந்து வாங்குவதில்லை. என் தேவைக்கு அதிகமாக விளைச்சல் இருப்பதால் அக்கம் பக்கத்தினர், கல்லூரி நண்பர்களுக்கு விற்பனை செய்கிறேன். என் வீட்டு தோட்டத்தை வணிக ரீதியாக மாற்றுவது என் நோக்கமல்ல. அனைவரும் தற்சார்பு முறையில் தங்களுக்கு தேவையானவற்றை வீட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். காய்கறி கழிவுகளை குப்பைகளாக கொட்டி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் மறு சுழற்சி செய்து உபயோகிக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.
மகரந்த சேர்க்கை அவசியம்
ஒரு செடி ஊட்டச்சத்துமிக்க மண் வளத்தில் வளர்ந்து பூ பூத்தாலும், ஆண் பூவில் இருந்து மகரந்தம் பெண் பூவின் சூலில் சேர்ந்தால் தான் பிஞ்சு, காய் உருவாகும். இதை இயற்கை காற்று, எறும்புகள், தேனீக்கள், வண்டுகள் மூலம்தான் நிகழ்த்துகிறது. அதில் தேனீக்களின் பங்கு அளப்பரியது. பூவுக்கும் பூவுக்கும் மணமுடித்து நமக்கு உணவை உற்பத்தி செய்யும் அற்புதமான பணியை தேனீக்கள் செய்கிறது. நாம் வளர்க்கும் செடிகள் மட்டுமல்ல களைச்செடிகளில் பூக்கும் மலர்களும் மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றன. அதனால் அவற்றை அப்புறப்படுத்தக்கூடாது.






