திகைக்க வைக்கும் தீக்குச்சி சிற்பங்கள்


திகைக்க வைக்கும் தீக்குச்சி சிற்பங்கள்
x

தீக்குச்சியில் நிறைய கலை சிற்பங்களையும், உருவாக்கி இருக்கிறார் விவேக்.

லேசான, எளிதில் உடையக்கூடிய தீக்குச்சிகளை வைத்து என்ன செய்துவிடமுடியும்...? என்ற கேள்விக்கு, 'படைப்பாற்றல்' நிறைந்த விவேக்கிடம், பிரமாண்டமான பதில்கள் இருக்கின்றன. அதிலும் தீக்குச்சிகளை கொண்டு இவர் உருவாக்கி இருக்கும், 'தாஜ்மஹால்', 'கொலோசியம்' மற்றும் 'பிரமிடு' போன்ற உலக அதிசயங்கள், நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. இவை தவிர்த்து, தீக்குச்சியில் நிறைய கலை சிற்பங்களையும், உருவாக்கி இருக்கிறார்.

கன்னியாகுமரியின் தக்கலை பகுதியை சேர்ந்தவரான விவேக், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ. முடித்திருக்கிறார். கல்லூரி காலத்தில், பொழுதுபோக்காக தொடங்கிய தீக்குச்சி சிற்ப முயற்சி, இப்போது 'விஸ்வரூபம்' எடுத்திருக்கிறது. அதுபற்றி பகிர்ந்து கொள்கிறார்.

* தீக்குச்சிகளை, கலை சிந்தனையுடன் கையில் எடுத்தது எப்போது?

4 வருடங்களாகத்தான், தீக்குச்சி கலை சிற்பங்களை செய்கிறேன். எனக்கு சிறுவயதில் இருந்தே, கலை ஆர்வம் உண்டு. நிறைய ஓவியங்கள் வரைந்திருக்கிறேன். காகிதங்களை கொண்டு நிறைய கலை முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன். அதிலிருந்து கொஞ்சம் மாறுதலுக்காக, தீக்குச்சிகளை கையில் எடுத்தேன். அப்படிதான், 'தீக்குச்சி சிற்பங்கள்' உருவாகின.

* முதல் முயற்சி எப்படி அமைந்தது?

ஒரு கலை பற்றி கொஞ்சம் தெரிந்துகொண்டு அதற்கு பிறகுதான், 'ரிஸ்க்' எடுக்க ஆசைப்படுவார்கள். ஆனால் நான் முதல் முயற்சியிலேயே, மிகப்பெரிய 'ரிஸ்க்' எடுத்தேன். ஆம்...! தீக்குச்சியில் சிற்பங்கள் செய்ய ஆசைப்பட்டவுடன், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலைதான், முதன் முதலில் தேர்ந்தெடுத்தேன். நான் நினைத்ததைவிட, தாஜ்மஹால் சிற்ப முயற்சி மிகவும் சவாலாக இருந்தது. மேலும் பொறியியல் படித்துக்கொண்டே இந்த முயற்சியில் இறங்கியதால், ஓய்வு நேரங்களில் கொஞ்சம் கொஞ்சமாகதான் செய்ய முடிந்தது. அப்படி, தாஜ்மஹால் தீக்குச்சி சிற்பம் முழுமை பெற, 25 ஆயிரம் தீக்குச்சிகளும், 6 மாத கால உழைப்பும், பொறுமையும் தேவைப்பட்டது.

* வேறு என்ன செய்திருக்கிறீர்கள்?

தாஜ்மஹாலை தொடர்ந்து, மீதமிருக்கும் மற்ற உலக அதிசயங்களையும் தீக்குச்சி சிற்பங்களாக மாற்றும் முயற்சியில் இறங்கினேன். இரண்டாவதாக, மெக்ஸிகோவில் இருக்கும் 'இட்ஸா பிரமிடு' கோபுரத்தை, 55 ஆயிரம் தீக்குச்சிகளை கொண்டு சிற்பமாக்கினேன். இட்ஸாவின் மினியேச்சர் போல அச்சு அசலாக அதை உருவாக்க 8 மாதங்கள் தேவைப்பட்டது.

பிறகு, ரோமானிய கொலோசியத்தை உருவாக்கினேன். என்னுடைய முயற்சிகளிலேயே மிக முக்கியமானது இது. ஏனெனில், 3 ½ அடி உயரத்தில், ஒன்றரை லட்சம் தீக்குச்சிகளை கொண்டு, மிக பிரம்மாண்டமான கொலோசியத்தை உருவாக்கினேன்.

இவை மட்டுமின்றி, ரெயில் என்ஜின், கப்பல், கிட்டார், பட்டாம்பூச்சி, மனிதன், பூச்செடிகள், இங்கிலாந்தின் பிக்பென் கோபுரம், ஊஞ்சல், பூந்தொட்டி, இந்திய வரைபடம், காபி கோப்பை... என நிறைய தீக்குச்சி சிற்பங்களை உருவாக்கினேன்.

* எப்படி செய்கிறீர்கள்?

எதை சிற்பமாக மாற்ற இருக்கிறோமோ, அதன் புகைப்படங்களை நன்றாக (அப்சர்வேஷன்) உள்வாங்க வேண்டும். அதேபோல, தீக்குச்சி சிற்பம் செய்ய, 'கால்குலேஷன்' அவசியம். அடித்தளம் முதல் மேல் கூரை வரை சிற்பத்தின் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றை முன்கூட்டியே கணக்கிட்டு, அதற்கு பிறகுதான் சிற்பம் செய்ய ஆரம்பிப்பேன். அப்போதுதான், சிற்பத்தின் உருவம் கீழும், மேலுமாக வேறுபடாமல், கீழிருந்து மேல் வரை அழகாக காட்சியளிக்கும்.

* நிறைய தீக்குச்சிகள் தேவைப்படுமே. எப்படி சமாளிக்கிறீர்கள்?

தீக்குச்சி தொழிற்சாலையில் இருந்து குச்சிகளை கிலோ கணக்கில் வாங்குவதால், செலவு குறைகிறது. ஒவ்வொரு சிற்பமும் செய்ய, குறைந்தது 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை செலவாகும்.

* மிகவும் சவாலான தீக்குச்சி சிற்பம் எது?

தாஜ்மஹால்தான் மிகவும் சவாலாக இருந்தது. ஏனெனில் தாஜ்மஹாலின் கூம்பு வடிவ கூரைப் பகுதியை, தீக்குச்சியில் உருவாக்க மிகவும் சிரமப்பட்டேன்.

* தீக்குச்சி தவிர்த்து, மற்ற கைவினை கலைகளில் ஆர்வம் உண்டா?

நிறையவே இருக்கிறது. களிமண் சிற்பம், பேப்பர் சிற்பம், பேப்பர் குயிலிங், மூங்கில் சிற்பங்கள், களிமண் நகைகள், மர சிற்பங்கள்... இப்படி நிறைய கலைப்பொருட்களை உருவாக்குகிறேன். குறிப்பாக, உபயோகமில்லாத கழிவுப் பொருட்களை கலைப்பொருட்களாக மாற்றி, அதன் மூலம் வருமானம் ஈட்ட பிரத்யேக வகுப்புகளையும் நடத்துகிறேன்.

* மீதமிருக்கும் உலக அதிசயங்களை செய்து வருகிறீர்களா?

ஆம்..! 4-வது முயற்சியாக, பிரேசில் நாட்டில் இருக்கும், கிறிஸ்து சிலையை தீக்குச்சி சிற்பமாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறேன். 3 முதல் 4 மாதங்களில் முடித்துவிடுவேன். அதற்கு பின், மீதமிருக்கும் மற்ற உலக அதிசயங்களையும் செய்ய திட்டமிட்டிருக்கிறேன்.

* உங்களுடைய முயற்சிகளுக்கு, பெற்றோரின் ஆதரவு கிடைத்ததா?

நன்றாகவே கிடைத்தது. என்னுடைய தந்தை ராதாகிருஷ்ணன் ஆரம்பத்தில் இருந்தே, என்னை ஊக்கப்படுத்தி வருகிறார். நான் முயன்று பார்க்க விரும்பும் கலைக்கு தேவையான அத்தனை பொருட்களையும், வாங்கி கொடுப்பதுடன் நான் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி, அதை 100 சதவிகிதம் அழகாக்க முயற்சிக்கிறார்.

* உங்களுடைய கலை முயற்சிகளுக்கு பாராட்டுகள், விருதுகள் கிடைத்திருக்கின்றனவா?

ஆம்..! என்னுடைய கலைத் திறனை பாராட்டி, தமிழக அரசு 'தமிழ் வளர்மணி' என்ற விருதினை வழங்கி கவுரவித்தது. மேலும் 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்' மற்றும் 'ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்' போன்ற சாதனை புத்தகங்களில் இடம்பிடித்திருக்கிறேன்.


Next Story