ஏழைக் குடும்பங்களை வாழவைக்கும் 'ஆரி கலை'


ஏழைக் குடும்பங்களை வாழவைக்கும் ஆரி கலை
x

ஆரி வேலைபாடுகள் அடங்கிய பிளவுஸ் அணியும் பழக்கமும் தமிழ்நாட்டு பெண்களிடையே அதிகரித்திருக்கிறது.

''தமிழ்நாட்டில் இப்போது டிரெண்டாக இருக்கும் வேலைகளில் ஆரி வேலைபாடும் ஒன்று. வீட்டில் இருந்தபடியே, குடும்ப தலைவிகளால் செய்யமுடிந்த வேலை என்பதால் இது வைரலாகி இருக்கிறது. அதேபோல, ஆரி வேலைபாடுகள் அடங்கிய பிளவுஸ் அணியும் பழக்கமும் தமிழ்நாட்டு பெண்களிடையே அதிகரித்திருக்கிறது.

கோவில் திருவிழா, திருமணம், குடும்ப விழாக்கள், பண்டிகைகள்... என எல்லா கொண்டாட்ட நிகழ்வுகளிலும், ஆரி வேலைப்பாடு அடங்கிய பிளவுஸ் அணியவே பெண்கள் ஆசைப்படுகிறார்கள். இப்படி அதிக தேவை இருக்கும் ஆரி தொழில் மூலமாக ஏழை குடும்ப தலைவிகளுக்கு புதிய வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கவே, இலவச ஆரி பயிற்சிகளை வழங்குகிறேன்'' என்று பேசத் தொடங்கினார், ஷஹனாஸ்.

கும்பகோணத்தை சேர்ந்தவரான இவர், கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி. திருமணத்திற்கு பிறகுதான் ஆரி பயிற்சி இவரது வாழ்க்கைக்குள் நுழைந்திருக்கிறது.

''திருமண வாழ்க்கைக்குள் நுழைந்ததும் நிறைய ஓய்வு நேரம் இருப்பதை உணர்ந்தேன். அதேசமயம், என்னுடைய கணவர் சென்னையில் பணியாற்றியதால், தனிமை உணர்வுக்கு ஆளானேன். அப்போதுதான், ஆரி வேலைப்பாடுகளை கையில் எடுக்க ஆரம்பித்தேன்.

எனக்கு பள்ளிப்பருவம் முதலே, நூல் வேலைப்பாடுகளில் அதீத ஆர்வம் உண்டு. அதனால் நூல் வேலைப்பாட்டின் நவீன 'அப்டேட்' ஆன ஆரி கலையை கற்றுக்கொண்டு முயன்றுபார்த்தேன்.

என்னுடைய தனிமை உணர்வை போக்கவும், ஓய்வு நேரத்திற்கான சிறந்த பொழுதுபோக்காகவும் ஆரி கலை இருந்ததால் அதோடு ஐக்கியமானேன். அதுசம்பந்தமாக தேடித்தேடி படித்தேன். புதிதாக நிறைய கற்றுக்கொண்டேன்'' என்றவர், வெகுவிரைவாகவே ஆரி கலையில் 'எக்ஸ்பர்ட்' ஆகிவிட்டார்.

அக்கம் பக்கத்தினருக்கு புதுமையான ஆரி வேலைப்பாடுகளை செய்து கொடுத்து, தனக்கான நட்பு வட்டத்தை வெகுவிரைவிலேயே உருவாக்கினார். மேலும் சில குடும்ப பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் இவரிடமிருந்து ஆரி கலையை கற்றுக்கொள்ள ஆர்வமாய் இருந்தனர். அவர்களது ஏழ்மை பின்னணிதான், ஷஹனாஸை ஆரி கலை பயிற்றுனராக மாற்றி இருக்கிறது. குறிப்பாக தன்னுடைய பொழுதுபோக்கு பிறரது வாழ்வாதாரமாக மாற இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார்.

''ஒருகாலத்தில், டைலரிங் கலை பல குடும்ப பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியது. ஏழை குடும்பங்களின் வீடுகளில், நிச்சயம் ஒரு தையல் இயந்திரம் இருக்கும். அதை கொண்டு, ஓய்வு நேரங்களில் துணிகளை தைத்து, பெண்கள் சிறு வருமானம் சம்பாதித்தனர். இப்போதும், அந்த கலாசாரம் இருக்கிறது. ஆனால் ஆரி வேலைப்பாட்டிற்கு, தையல் இயந்திரமும் தேவையில்லை.

கலை நுணுக்கமும், பொறுமையும் இருந்தால் போதும், வேலைப்பாடுகளுக்கு ஏற்ப ஒரு பிளவுசிற்கு குறைந்தது 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும். அதனால்தான் நடுத்தர குடும்ப பெண்கள் ஆரி கலை கற்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். வீட்டில் இருந்துகொண்டே, கை நிறைய சம்பாதிக்க இது சிறப்பான கலை'' என்பவர், ஏழை குடும்ப பெண்களுக்கும், நடுத்தர கல்லூரி மாணவிகளுக்கும் இந்த கலையை இலவசமாக கற்றுக்கொடுக்கிறார். குறுகிய காலத்தில், இவரிடம் 80-க்கும் மேற்பட்டவர்கள் ஆரி கலை பயின்றிருக்கிறார்கள்.

''ஆரி கலையை யார் வேண்டுமானாலும் கற்கலாம். வயது வித்தியாசம் இல்லை. பள்ளி குழந்தைகள் முதல் 50 வயதை கடந்த மூத்த குடும்ப தலைவிகள் வரை பலரும் என்னிடம் ஆரி கலை பயின்று, அதன்மூலம் சம்பாதிக்கின்றனர்.

ஆரி கலையை கற்பதும், அதை செய்து பார்ப்பதும் மிக சுலபம்தான். தேவையும், ஆர்வமும் இருப்பவர்களால், 10 நாட்களிலேயே கற்றுக்கொள்ள முடியும். இதற்கு முதலீடு என்பது பெரிதாக இருக்காது. ஆரி வேலைப்பாடு செய்ய ஆரி ஸ்டாண்ட், ஆரி நீடில், சில்க் நூல், கோல்டன் திரெட், ஜதோஷி, கலர் பீட்ஸ், கற்கள்... இப்படி சின்ன சின்ன பொருட்கள்தான் தேவைப்படும். ஆனால் இதை கொண்டு ஆடைகளை அழகாக்க, நிறைய பொறுமையும், கலைநுணுக்கமும் அவசியம். அதுதான் இந்த கலையின் முதலீடு'' என்று பெண்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறார்.

''வடமாநில கலாசாரம் தமிழ்நாட்டில் அதிகமாக தென்படுகிறது. அதில் ஆரி கலாசாரமும் ஒன்று. பிளவுஸ் மட்டுமின்றி, ஜிப்பா, கோட்-சூட், சட்டை, ஷெர்வானி போன்ற ஆண் உடைகளிலும், நகைகளிலும் ஆரி வேலைப்பாடுகள் வர தொடங்கிவிட்டன.

ஆரி வேலைகள் செய்து கொடுப்பதற்காகவே, வட மாநிலங்களில் இருந்து பல குடும்பங்கள் தமிழ்நாட்டிற்குள் குடியேறி இருக்கிறார்கள். நிறைய தேவை இருக்கும் வேலை என்பதால் பலரும் வீட்டிலேயே ஆரி வேலைப்பாடுகளை செய்கிறார்கள். சிலர் சுய உதவி குழுக்கள் மூலமாக ஆரி வேலைகள் செய்கிறார்கள்.

ஆரி வேலைப்பாடுகள் செய்வதற்கு என பிரத்யேக இயந்திரங்களும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இப்போது இருக்கும் தேவைகளை விட, ஆரி வேலைப்பாடுகளுக்கு எதிர்காலத்தில் இன்னும் பலமடங்கு தேவை இருக்கும்'' என்று உற்சாகமூட்டும் ஷஹனாஸ், புதிதாக ஆரி கலை பயில்பவர்களுக்கு சில டிப்ஸ்களை கூறினார்.

''ஆரி கலையில் வாடிக்கையாளரின் உடல் அமைப்பை பொறுத்துதான், அழகான வேலைப்பாடுகளை செய்யமுடியும். டிசைன் அழகாக தெரியலாம். ஆனால் அது எல்லோருடைய உடலுக்கும் சிறப்பாக அமைந்துவிடாது.

நடுத்தர உடல் அமைப்பு கொண்டவர்களுக்கு எல்லா ஆரி வேலைப்பாடுகளும் சிறப்பாக இருக்கும். ஆனால் கொஞ்சம் பருமனானவர்களுக்கு வேலைப்பாடு குறைவாகவும், 'கட் லுக்' மாடலிலும் இருந்தால்தான் சிறப்பாக இருக்கும். அதேபோல ஒல்லியாக இருப்பவர்களுக்கு அதிக வேலைப்பாடுகளுடன் கூடிய ஸ்ட்ரைட் லுக் மாடல் நன்றாக இருக்கும்'' என்பவர், ஆரி கலை சம்பந்தமான தேடலில் ஆர்வமாய் இருக்கிறார். அதில் புதிதாக அறிமுகமாகும் நவீன நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டு, தன்னிடம் பயின்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார். அவர்களையும் அப்டேட்டாக வைத்திருக்கிறார்.

''எல்லா குடும்பங்களிலும் பணத் தேவை இருக்கும். அதை ஈடுகட்ட குடும்ப பெண்களும் முயற்சிப்பார்கள். அந்தவகையில், அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியாக ஆரி பயிற்சிகளை இலவசமாக வழங்குகிறேன். இது அவர்களது தேவையை பூர்த்தி செய்ய உதவியாக இருக்கும். அவர்களது மகிழ்ச்சியில்தான் என்னுடைய மனநிறைவு இருக்கிறது'' என்று மனமகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஆரி கலையை கற்பதும், அதை செய்து பார்ப்பதும் மிக சுலபம்தான். தேவையும், ஆர்வமும் இருப்பவர்களால், 10 நாட்களிலேயே கற்றுக்கொள்ள முடியும்.

1 More update

Next Story