சுய பரிசோதனைக்கு தயாரான 'அக்ஷய்குமார்'


சுய பரிசோதனைக்கு தயாரான அக்ஷய்குமார்
x

என்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலகட்டமாக இதைப் பார்க்கிறேன் என்று அக்‌ஷய்குமார் கூறியுள்ளார்.

பாலிவுட் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளாக கோலோச்சி வரும் நடிகர்களில் முக்கியமானவர், அக்ஷய்குமார். சமகால நடிகர்களாக பார்க்கப்படும் அமீர்கான், சல்மான்கான், ஹிருத்திக்ரோஷன் போன்றோர் சினிமா பின்புலத்தில் இருந்து வந்த காலகட்டத்தில், அக்ஷய்குமார் மட்டும் தன்னுடைய தனிப்பட்ட முயற்சியால், சினிமாவிற்குள் நுழைந்து பாலிவுட்டின் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை, அக்ஷய்குமார் நடிப்பில் சில படங்கள் தோல்வியை சந்தித்திருந்தாலும், படத்தின் வசூல் எப்போதும் டாப் ரகமாகத்தான் இருக்கும். தமிழ் மொழியில் நடிகர் விஜய் படங்களுக்கு எப்படி ஒரு ஓபனிங் இருக்கிறதோ, அதைவிட பல மடங்கு ஓபனிங், பாலிவுட்டில் அக்ஷய்குமார் படத்திற்கு இருக்கும். அவரது படம் என்றாலே மினிமம் ரூ.200 கோடி வசூல் நிச்சயம் என்ற நிலை இருந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்த நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது.

2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ந் தேதி 'லட்சுமி' என்ற படம் ஓ.டி.டி.யில் வெளியானது. இது தமிழ் மொழியில் சக்கைபோடு போட்ட'காஞ்சனா' படத்தின் ரீமேக். ஆனால் பாலிவுட்டில் இந்தப் படத்தின் நிலை மிகவும் பரிதாபகரமாக இருந்ததுதான் வேதனையான விஷயம். 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 'பெல்பாட்டம்' என்ற படம் வெளியானது. ரூ.168 கோடியில் உருவான இந்தப் படம், வெறும் ரூ.50 கோடியை மட்டுமே வசூல் செய்து மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால் அடுத்ததாக அதே ஆண்டில் நவம்பர் மாதம் வெளியான 'சூரியவன்சி' என்ற படம் ஓரளவு வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படம் தான், கடைசியாக ஓரளவு கையைக் கடிக்காமல் கடந்துபோன படமாகும்.

'சூரியவன்சி' படத்திற்குப் பிறகு 2022-ம் ஆண்டு வெளியான அனைத்துப் படங்களும் தோல்வி அடைந்ததுடன், வசூல் ரீதியாக அக்ஷய்குமாரை அதலபாதாளத்திற்குள் விழச்செய்தன. 2022 மார்ச் மாதம் வெளியான 'பச்சான் பாண்டே' திரைப்படம், ரூ.165 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வெறும் ரூ.73 கோடி வசூலோடு நின்று போனது. அதே ஆண்டு ஜூன் மாதம் வெளியான வரலாற்று படம் 'சாம்ராட் பிருத்விராஜ்'. 'பாகுபலி' படத்தின் வசூலால் பிரமித்துப் போன இந்தப் படக்குழு, இந்தப் படத்தை பான் இந்தியா படமாக அனைத்து மொழிகளிலும் வெளியிட்டது. ரூ.300 கோடியில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ஈட்டிய வசூல் ரூ.90 கோடி மட்டுமே.

அடுத்ததாக ஆகஸ்டு மாதம் 'ரக்ஷாபந்தன்' என்ற படம் வெளியானது. ரூ.70 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப்படம் ரூ.60 கோடியை மட்டுமே ஈட்டியது. ரூ.150 கோடியில் தயாரிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் வெளியான 'கட்புட்ல்லி' திரைப்படம், நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியானது. இதனால் இந்தப் படத்தின் பாதிப்பு பற்றி தெரியவில்லை. 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 'ராம் சேது' என்ற படம் வெளியானது. 90 கோடி ரூபாயை வசூலித்த இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.150 கோடியாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த மாதம் 24-ந் தேதி வெளியான 'செல்பி' திரைப்படம், இதுவரை ரூ.20 கோடி வசூலைக்கூட தாண்டவில்லை. இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.130 கோடியாகும். அக்ஷய்குமாரின் கடந்த 10 ஆண்டு சினிமா வாழ்க்கையில் மிகக் குறைவான வசூல் படம், 'செல்பி'யாகத்தான் இருக்கும் என்கிறார்கள். இந்தப் படம் மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'டிரைவிங் லைசென்ஸ்' படத்தின் ரீமேக் ஆகும்.

இந்த நிலையில் தன்னுடைய படங்களின் தொடர் தோல்வி குறித்து அக்ஷய்குமார் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், "இந்த தோல்விகளுக்கு என்னுடைய ரசிகர்களை நான் குறைகூற மாட்டேன். என்னுடைய கதைத் தேர்வில்தான் குறை இருக்கிறது. நான் என்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலகட்டமாக இதைப் பார்க்கிறேன். தோல்வியால் நான் அச்சப்படவில்லை. இதற்கு முன்பும் கூட தொடர்ச்சியாக 15 படங்களுக்கு மேல் தோல்வியை சந்தித்தவன் நான். அதில் இருந்து மீண்டுதான் இந்த இடத்தைப் பிடித்திருக்கிறேன். இனியும் என்னுடைய வெற்றியை தக்க வைக்க வேண்டுமானால், ரசிகர்களுக்குப் பிடித்தது எது என்று நான் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதை தேர்வு செய்யும் கட்டாயம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. என்னுடைய படங்கள் தொடர்ந்து தோல்வி அடைகின்றன என்றால், ரசிகர்களுக்கு பிடித்தமான எதையோ என்னுடைய படத்தில் நான் தவற விடுகிறேன். அது என்ன என்று ஆராய்ந்து அதை சரிசெய்ய முயல்வேன்" என்று கூறியுள்ளார்.


Next Story