சுரைக்காய் ஓவியத்தில் அசத்தும் மாணவி..!

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதை நிரூபித்திருக்கிறார் கர்நாடகாவைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி சந்தனா.
மைசூருவை அடுத்த ஜி.பி. சராகுரில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி சந்தனா தேசிய அளவிலான கலைப் போட்டியில் இரண்டாவது இடத்தில் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். இந்தப் போட்டியில், சுரைக்காயில் விதவிதமான ஓவியங்களை உருவாக்கி காட்சிப்படுத்தியிருக்கிறார்.
தையல்காரரின் மகளான சந்தனா, பொது முடக்கத்தின்போதுதான் இந்த சுரைக்காய் ஓவியத்தைத் தானாக கற்றுக்கொண்டுள்ளார். ஒரு சுரைக்காயை வைத்துக்கொண்டு பலவித ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளார். சுரைக்காய் என்று தெரியாத அளவுக்கு ஓவியத்தின் உருவம் முன்னே வந்து நிற்கிறது.
இது குறித்து சந்தனாவின் ஆசிரியை சங்கீதா கூறுகையில், "எங்கள் பள்ளி சார்பில் தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெறுவது இதுதான் முதல்முறை. குறுகிய காலத்தில் நாங்கள் இந்தப் போட்டிக்குத் தயாரானோம். அரை ஆண்டு தேர்வுகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்ததால், குழந்தைகளுக்குப் பயிற்சி அளிப்பது கடினமாக இருந்தது. சந்தனாவின் கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால், மைசூருவில் உள்ள என் வீட்டுக்கு சந்தனாவை அழைத்துவந்தேன். 3 நாட்கள் தங்கியிருந்து சுரைக்காய் ஓவியத்தை வரைந்தாள்" என்றார்.
இது குறித்த சந்தனா, "என் திறமையை வெளிப்படுத்துவதற்கு என் ஆசிரியை உதவியாக இருந்தார். எல்லோரும் என்னை அடையாளம் காணத் தொடங்கியதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தேசிய அளவில் பரிசு பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. மருத்துவருக்குப் படிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. எனினும், சுரைக்காய் ஓவியத்தையும் தொடருவேன்" என்றார்.






