நெய்தல் மக்களின் வாழ்வியலை மீட்டெடுக்கும் படைப்பாளி

தூத்துக்குடியை சேர்ந்த எழுத்தாளர் அண்டோ கால்பட் நெய்தல் நில மக்களின் வாழ்வியலை, அவர்களின் வட்டார வழக்கங்களில் பதிவு செய்து வருகிறார்.
ஐவகை நிலங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் கலை, இலக்கிய படைப்புகளுக்கு பெயர் பெற்று விளங்குகிறது. எட்டயபுரத்து முண்டாசு கவியான பாரதியார் முதல் பல எழுத்தாளர்கள், கவிஞர்கள் வசித்த பூமி இது. இன்றளவும் அவர்களின் அடியொற்றி எழுத்தாளர்கள் பட்டாளம் அணிவகுத்து கொண்டிருக்கிறது. இதனால்தான் பல சாகித்ய அகாடமி விருதுகள் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட எழுத்தாளர்களின் கைகளில் தவழ்ந்து கொண்டு இருக்கின்றன. இந்த எழுத்தாளர் பட்டாளம் பலரையும் எழுத்தார்வம் மிக்கவர்களாகவும் உருவாக்கி வருகிறது என்றால் சந்தேகமில்லை.
தூத்துக்குடியை சேர்ந்த எழுத்தாளர் அண்டோ கால்பட் நெய்தல் நில மக்களின் வாழ்வியலை, அவர்களின் வட்டார வழக்கங்களில் பதிவு செய்து வருகிறார். இவர் தூத்துக்குடி கடலோர பகுதியை மையமாக வைத்து 'பதினாறாம் காம்பவுண்ட்', 'ஒற்று' ஆகிய நாவல்களையும், 'இனியொரு விதி செய்வோம்' என்ற கட்டுரை தொகுப்பையும், 'உப்பேறிய மனிதர்கள்' என்ற சிறுகதை தொகுப்பையும் பதிவு செய்து உள்ளார். இவர் இதுவரை அதிகம் கையாளப்படாத நெய்தல் நில மக்களின் வாழ்வியலை ஆராய்ந்து பதிவு செய்து வருகிறார்.
''தமிழ் இலக்கிய உலகின் பரப்பானது பல்வேறு வகைகளாக மிகப்பெரிய அளவில் பரந்து விரிந்து உள்ளது. தமிழ் இலக்கியம் ஏனைய மொழி இலக்கியங்களை விட செறிவார்ந்த மரபும், தனித்தன்மையும் கொண்டது. இத்தகைய பரந்த இலக்கிய படைப்புகள் வாசிப்பு பசிக்கு தீனி போடும் வகையில் அமைந்துள்ளது. பல்வேறு களங்களை முன்வைத்து படைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் நெய்தல் மண் சார்ந்த படைப்புகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கின்றன.
தமிழ் இலக்கியத்தில் நெய்தல் மண் சார்ந்த கதைகள் குறிப்பிட்ட எல்லைக்குள் சுருக்கப்பட்டு விட்டன. கடலோடு தொடர்பில் இருப்பவர்களுக்கானது மட்டும் நெய்தல் மக்களின் வாழ்வியல் அல்ல. கடலுக்கும், தங்களுக்குமான தொப்புள் கொடி அறுக்கப்பட்டு நெய்தல் நிலத்தில் வாழும் மக்களின் அன்றாட வாழ்வியலும் சேர்ந்ததுதான். இந்த வாழ்வியல் முறைகள் இலக்கியங்களில் அதிகமாக பேசப்படாத நிலை உள்ளது. இவர்கள் கொழும்பில் தொழில் செய்தவர்கள், ஆசிரியராக பணியாற்றியவர்களாக இருப்பார்கள். இவர்களது வாழ்வியலை பற்றி எழுதி வருகிறேன்'' என்பவர் வட்டார வழக்கு மொழிகள் பற்றியும், அவை வாழ்வியல் முறையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் விவரிக்கிறார்.
''சமவெளி, சமூக இலக்கியத்தில் நாஞ்சில், கரிசல், நடுநாடு என்று பல்வேறு நிலம் சார்ந்த வாழ்வியலும், பகுதி வாரியான வட்டார வழக்குகளும், அதன் அடிப்படையிலான வேறுபட்ட வாழ்க்கை முறையும் உள்ளன. அதே போன்றுதான் நெய்தல் நிலப்பரப்பிலும் பல்வேறு பிரிவுகளும், வட்டார வழக்குகளும், வாழ்வியல் முறைகளும் உள்ளன. எந்தவொரு மொழியாக இருந்தாலும் ஒவ்வொரு 20 கிலோ மீட்டருக்கு இடையே வட்டார மொழி மாறும் என்று கூறப்படுகிறது.
இதனால் தான் சென்னை, கோவை, நெல்லை என்று ஒவ்வொரு ஊரிலும் வட்டார வழக்கு மொழி மாறுபடுகிறது. ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் ஐவகை நிலங்களும் உள்ளன. இங்கு பேச்சு வழக்கும் வித்தியாசப்படுகிறது. ஒவ்வொரு தெருவுக்கும் இடையே கூட பேச்சு வழக்கு, வாழ்வியல் முறைகளில் வித்தியாசங்கள் உள்ளன'' என்பவர் அவை எப்படி மாறுபடுகின்றன என்பதையும் குறிப்பிடுகிறார்.
''பரதவ மக்களின் சொற்களில் போர்ச்சுக்கீசிய சொற்களின் கலப்பு அதிகமாக இருக்கும். இது அந்த மக்களின் பயணம், வாழ்வியல் முறைகள் காரணமாக ஏற்படுகிறது. புன்னக்காயல் வரை திருவாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. இதனால் அந்த சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி மக்கள் சற்று வார்த்தைகளை இழுத்து பேசுவார்கள். கன்னியாகுமரி முதல் வேம்பார் வரை ஓரளவுக்கு ஒற்றுமையான பேச்சுவழக்கை பார்க்க முடியும். ஆனால் அதில் சிறு, சிறு சிதைவுகள் இருக்கும். கடற்கரையை விட்டு ஊருக்குள் வந்தவர்களிடமும் வழக்கு சிதைவுகள் காணப்படுகிறது.
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட மக்கள் ஏல, வால என்று பேசுவதாக கூறுவார்கள். அதே நேரத்தில் அங்க, நிக்க, வைக்க என்று 'க' எழுத்தில் முடியும் வகையில் பேச்சு வழக்கு அதிகம் இருக்கிறது. அங்கிட்டு, இங்கிட்டு என்ற பேச்சுவழக்கும் உள்ளது. இந்த வழக்கு தூத்துக்குடியை தாண்டினால் கிடையாது. கேரல் பவனி தூத்துக்குடியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த பவனி மற்ற பகுதிகளில் கிடையாது. வாழ்வியல் முறைகளில் வித்தியாசங்கள் உள்ளன. இது போன்ற வாழ்வியல் முறைகள் நுட்பமாக பதிவு செய்யப்படவில்லை'' என்கிறார்.
நெய்தல் பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் பின்பற்றி வந்த வாழ்வியல் முறைகளை உயிர்ப்புடன் பின்பற்றி அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அண்டோ கால்பட்டின் படைப்புகள் அமைந்திருக்கின்றன.
''நெய்தல் பகுதியில் ஒவ்வொரு விஷயமும், கையாண்டு இருக்கும் மொழியும், வாழ்வியலும் வித்தியாசமாக உள்ளது. பல திரிபுகளாகத்தான் வாழ்வியலை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். உண்மையான நெருக்கமான வாழ்வியலை தொலைத்து விட்டோம். அதனை மீட்டு மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்தப் பகுதி மக்களின் வாழ்வியல், மொழி மற்றும் பண்பாட்டு வித்தியாசத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதனை முன்னிலைப்படுத்தியே எனது படைப்புகள் அமைந்திருக்கின்றன'' என்கிறார், அண்டோ கால்பட்.






