வெப்ப அலை ஏற்படுத்திய விபரீத மாற்றங்கள்


வெப்ப அலை ஏற்படுத்திய விபரீத மாற்றங்கள்
x

அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் நாட்டின் பல பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவாகி பொதுமக்களை வாட்டி வதைத்திருக்கிறது. அண்டை நாடான பாகிஸ்தானும் கடும் வெப்ப அலை பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறது.

இந்தியாவில் 121 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சராசரி வெப்பநிலையை விட 0.44 டிகிரி செல்சியஸ் அதிகம் பதிவாகி உள்ளது. டெல்லியில் மார்ச் மாதத்தில் வெப்பநிலை புதிய உச்சத்தை தொட்டது. இந்திய வானிலை துறையின் கணிப்பு படி டெல்லியில் 120.5 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை நிலவியது. அதேபோல் 15 மாநிலங்கள் வெப்ப அலையால் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. சில பகுதிகளில் வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்று வானிலைத் துறை கூறினாலும், வெப்பநிலை குறைந்தபாடில்லை.

பாக்கிஸ்தானில் ஏப்ரல் மாதத்தில் பல பகுதிகளில் வெப்பநிலை 49 டிகிரி செல்சியஸ் அதாவது 120 டிகிரி பாரன்ஹீட்டை எட்டியது. மேலும் நாட்டின் நிலப்பரப்பில் 30 சதவீத பகுதிகள் கடுமையான வெப்பத்தால் பாதிப்புக்குள்ளானது. இதன் விளைவாகஅங்கு பனிப்பாறை ஒன்று வெடித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக ஹசனாபாத் கிராமத்தில் உள்ள பாலம் இடிந்து விழுந்தது.

இந்தியாவின் பல பகுதிகளில் நிலவிய கடும் வெப்பநிலை விவசாய உற்பத்தியை கடுமையாக பாதித்துள்ளது. உக்ரைன் போரினால் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையால் அவதிப்படும் மற்ற நாடுகளுக்கு கோதுமையை ஏற்றுமதி செய்ய முடியாத நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது. அந்த அளவுக்கு கோதுமை விளைச்சல் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அதிகரித்த வெப்பநிலையை சமாளிப்பதற்காக பலரும் ஏ.சி., ஏர் கூலர், டேபிள் பேன் போன்ற மின் சாதனங்களை அதிகம் பயன்படுத்த தொடங்கினார்கள். திடீரென மின்சார தேவை அதிகரித்ததால் மின் உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன் தாக்கமாக நிலக்கரி கையிருப்பு குறைந்து போனது. அதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின் வெட்டு ஏற்பட்டது. லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது.

கடுமையான வெப்பத்தால் உடல்நலப் பிரச்சினைகளையும் பலர் எதிர்கொண்டனர். வெப்பம் தொடர்பான பாதிப்புக்கு ஆளாகி இந்தியா மற்றும் பாகிஸ்தானில் 90 பேர் இறந்ததாக ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. இருப்பினும், முறையாக இறப்பு பதிவு செய்யப்படாததால் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

புவி வெப்பமடைதல்தான் இந்த திடீர் வெப்பநிலை அதிகரிப்புக்கு மூலகாரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். புவி வெப்பமடைதல் பிரச்சினைதான் வெப்ப அலைகளை 30 மடங்கு அதிகமாக்கியுள்ளது என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது. உலகம் முழுவதும் பதிவாகும் வெப்பநிலை முந்தைய அளவை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தால் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை கடுமையான வெப்ப அலைகள் ஏற்படும் என்றும் கூறுகிறார்கள். இதனை ஒருசாரர் மறுக்கின்றனர். இங்கிலாந்தின் வானிலை ஆய்வு மையம், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்ப அலைகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று கூறியுள்ளது. ஆனாலும் எல்லா ஆய்வு முடிவுகளும் ஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலை உயர்ந்து வருவதை சுட்டிக்காட்டி எச்சரிக்கை மணி அடிக்கின்றன. வெப்ப அலைகளை கட்டுப் படுத்த மரக்கன்றுகள் நடுவதுதான் ஒரே வழி!


Next Story