திருமணத்துக்கு நேரில் அழைப்பது குறைந்து வருகிறதா?;பொதுமக்கள் கருத்து


திருமணத்துக்கு நேரில் அழைப்பது குறைந்து வருகிறதா?; என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தொிவித்துள்ளனா்.

ஈரோடு

ஒரு வீட்டில் மகனுக்கு அல்லது மகளுக்கு திருமண தேதி முடிவானால் போதும், அடுத்த முதல் வேலை கல்யாண கடிதாசு அச்சடிப்பதுதான். பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா, மாமா, மச்சான் என்று உறவுகளின் பெயர்களை அச்சிடுவது. அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு பழங்களுடன் நேரில் போய் அழைப்பிதழைக் கொடுப்பது.

அப்போது பேசாத உறவினர்கூட 'சரி.. அவன் நேரில் வந்து அழைத்துவிட்டான். கடிதாசிலும் பெயர் போட்டுவிட்டான்' என்று பழைய பகையை மறந்து விழாவுக்கு நேரில் வந்து வாழ்த்துவது என்று சுமுகமாக உறவுகளைப் புதுப்பிக்கும் விழாவாகத்தான் சமூகத்தில் திருமண விழாக்கள் பார்க்கப்பட்டன.

மாறிக்கொண்ட மக்கள்

இவ்வாறு நேரில் பார்த்து அழைப்பிதழை பூ பழத்துடன், வெற்றிலை, பாக்கு, குங்குமம் கொடுத்து உறவினர்களை 'கண்டிப்பா வந்துடுங்க...' என உரிமையுடன் அழைப்பது நமது மரபும் கூட.

ஆனால், இன்றைக்கு எல்லாமே மாறிவிட்டது. மாறி வரும் சூழலுக்கேற்பவும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்பவும் மக்களும் மாறிவிட்டார்கள்.

எந்த ஒரு விழாவாக இருந்தாலும் 'வாட்ஸ்-அப்', 'பேஸ்புக்' போன்ற சமூக வலைத்தளங்களில் அழைப்பிதழை அனுப்பி வைத்துவிட்டு அமைதியாக இருந்து விடுகிறார்கள்.

மாறி வரும் இந்த கலாசாரம் பற்றிய பொதுமக்கள் கருத்து என்னவாக இருக்கிறது என்று பார்க்கலாம்.

வாழ்க்கை சூழல்

இதுகுறித்து ஈரோடு பழையபாளையம் பகுதியில் திருமண தகவல் மையம் நடத்தி வரும் சி.சுப்பிரமணியம்:-

பொதுவாகவே நமது வீடுகளில் நல்ல விசேஷங்கள் நடக்கும்போது நமது உறவினர்கள், நண்பர்களை நேரில் சென்று அழைப்பது ஒரு மரியாதையாகும். நமது அழைப்பு அவர்களுக்கு மரியாதைக்கு உரியதாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த காலத்தில் இது ஒரு சம்பிரதாயமாக இருந்தது. தற்போதைய காலக்கட்டத்தில் ஒரு அழைப்புக்காக அதிக நேரம் செலவிடும் வகையில் வாழ்க்கை சூழல் இல்லை என்பதால் 'வாட்ஸ்-அப்' மூலம் அழைப்பு விடுப்பது சமீபகாலமாக அதிகரித்து இருக்கிறது. ஆனால், ஈரோடு மாவட்ட பகுதிகளில் 'ஜி.பே' அல்லது வேறு வகையில் ஆன்லைன் மூலம் மொய் எழுதும் வழக்கம் இதுவரை இல்லை. குறிப்பாக சொல்லப்போனால் ஈரோட்டில் மொய் எழுதும் வழக்கம் கூட இல்லாத நிலை உள்ளது. நான் இதுவரை 27 திருமணங்கள் நடத்தி வைத்து இருக்கிறேன்.

எனது அனுபவத்தில், 'வாட்ஸ்-அப்' மூலம் அழைப்பிதழ் அனுப்புவதை நண்பர்கள் மனம் உவந்து ஏற்றுக்கொள்வதுடன், நிகழ்விலும் மகிழ்ச்சியாக வந்து கலந்து கொள்கிறார்கள். ஆனால் உறவினர்கள் மற்றும் மிக நெருங்கிய உறவினர்கள் முறையாக அழைப்பு விடுக்கவில்லை என்றால் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளில் விருப்பத்துடன் பங்கேற்பது இல்லை. கடமைக்காக அழைத்தாக கருதி, கடமைக்காகவே வந்து செல்கிறார்கள். எனவே திருமண அழைப்பு என்பது நமது மரபு சார்ந்தது. அதை முறையாக கடைபிடிப்பதே சிறந்தது.

மிக மிக தவறு

ஈரோடு சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த ஆர்.மோகன்குமார்:-

திருமணமாக இருந்தாலும் எந்த நிகழ்வாக இருந்தாலும் சரி நேரில் சென்று அழைப்பு பத்திரிகை வைப்பதையே மக்கள் விரும்புகிறார்கள். குறிப்பாக உறவினர்கள் இதை கண்டிப்பாக விரும்புகிறார்கள். நட்பு வட்டாரத்தில் சிலர் அவர்களாகவே முன்வந்து 'வாட்ஸ்-அப்' மூலம் பத்திரிகை அனுப்ப சொல்கிறார்கள். ஆனால், அதற்கு உரிய மரியாதை கொடுக்கப்படுவதாக தெரியவில்லை. பலர் இன்று 'வாட்ஸ்-அப்' பயன்படுத்தினாலும், அதை முறையாக இயக்குவதை பின்பற்றுகிறார்களா என்று தெரியாது. எனவே 'வாட்ஸ்-அப்' மூலம் திருமண பத்திரிகை அனுப்பினாலும் அதை பார்க்காதவர்கள் கூட இருப்பார்கள். பொதுவாக 'வாட்ஸ்-அப்' மூலம் அனுப்புவது என்பது கடமைக்காக தவல் தெரிவிப்பதாகத்தான் இருக்கும். அதே நேரம் நட்பின் அடிப்படையில் அதை ஏற்று நிகழ்வில் கலந்து கொண்டு மகிழ்விப்பவர்கள் இருக்கிறார்கள். அதற்காக 'வாட்ஸ்-அப்' மூலம் மட்டுமே அழைப்பது என்பது மிக மிக தவறு.

நேரில் அழைப்பு

பழையபாளையத்தை சேர்ந்த ஏ.நந்தினி கூறியதாவது:-

திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களை நாம் விழாவாக நடத்துவது, விருந்து நடத்துவது என்பது எல்லாம் பெயரளவுக்கு அல்ல. நம் உறவினர்கள், நண்பர்கள் வந்து கூட வேண்டும். மகிழ்ச்சியாக அனைவருடனும் சேர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அப்படி பெரும் எதிர்பார்ப்புடன் நடத்தப்படும் விழாக்களுக்கு நாம் விரும்புவர்கள் வந்து சேர, அவர்களை நேரில் சென்று அழைப்பதே சரியானது. விழா நடைபெறுவதற்கு முன்பாகவே விருந்தினர்களுக்கும் நமக்குமான உறவு இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பாக இது இருக்கும். நாம் அவர்களை மதித்து அழைக்கும்போது அவர்கள் எந்த தடை இருந்தாலும் நம் வீட்டு நிகழ்வுக்கு வருவார்கள். இப்போது 'வாட்ஸ்-அப்' மூலம் அழைப்பு விடுப்பவர்களுக்கு 'வாட்ஸ்-அப்' மூலம் வாழ்த்து சொல்லும் வழக்கம் அதிகரித்து இருக்கிறது. இது நட்பு, உறவுகளுக்குள் இடைவெளியை ஏற்படுத்தி விடும். எனவே நேரில் அழைப்பு விடுப்பதே சரியானது.

கிடைக்கும் வாய்ப்பு

ரங்கம்பாளையத்தை சேர்ந்த பத்திர பதிவு முகவர் விமலாதேவி:-

நாம் நமது வீட்டுக்கு திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு வர இருப்பவர்களை முதலில் நாம் முறையாக அழைப்பதே மரியாதை. எனவேதான் அந்த காலத்திலேயே சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று மரியாதை செய்து, முறையாக அழைப்பு வைப்பது நடைமுறையில் இருந்தது. அதை இன்னும் சம்பிரதாயமாக கடைபிடிப்பவர்கள் இருக்கிறார்கள்.

'வாட்ஸ்-அப்' உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் நமது அத்தியாவசிய தேவைகளுக்கும், அவசர தேவைக்கும் பயன்படுத்தப்பட வேண்டும். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் திட்டமிட்டு செய்வது. அதில் நாம் யாரை அழைக்க வேண்டும் என்று திட்டமிட்டு, முன்கூட்டியே முறைப்படி அழைப்பதே சிறந்தது. இது முக்கியமானதும் கூட. இந்த அவசர காலத்தில் நாம் நமது சொந்தங்களின் வீடுகளுக்கு உரிமையாக செல்வதற்கு கிடைக்கும் வாய்ப்பாக இதுபோன்ற நிகழ்வுகள்தான் உள்ளன. எனவே நமது உறவை பலப்படுத்தவும், நம்மைப்பற்றிய அவர்களின் கருத்து, உணர்வுகளை நேரில் தெரிந்து கொள்ளவும் அழைப்பிதழ் கொடுக்கும் நிகழ்வு வாய்ப்பாகவே அமையும். எனவே நேரில் அழைப்பிதழ் வழங்குவதே சிறந்தது. திருமணத்துக்கு மொய்யாக ஆன்லைன் முறைகளை இதுவரை பெரிய அளவில் யாரும் பயன்படுத்துவதில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Related Tags :
Next Story