ஈரோட்டில் தெருநாய்கள் தொல்லையா? இல்லையா?; நடைபயிற்சி செய்வோர் கருத்து


ஈரோட்டில் தெருநாய்கள் தொல்லையா? இல்லையா?; நடைபயிற்சி செய்வோர் கருத்து
x

ஈரோட்டில் தெருநாய்கள் தொல்லையா? இல்லையா?; என்பது குறித்து நடைபயிற்சி செய்வோர் கருத்து தொிவித்துள்ளனா்.

ஈரோடு

தெருநாய்கள் பிரச்சினை ஏதோ தெருவில் உள்ள பிரச்சினையாக இல்லாமல் இன்றைக்கு தேசிய அளவில் உருமாறி இருக்கிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் மட்டும் ஒரு நிமிடத்துக்கு 10 முதல் 12 பேர், தெருநாய் கடிக்கு அல்லது துரத்தலுக்கு ஆளாகிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அபரிதமான இனப்பெருக்கம்

தெருநாயின் சராசரி வாழ்நாள் 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும். 10 முதல் 12-வது மாதங்களிலேயே நாய்கள் கருத்தரிக்கும் நிலையை அடைந்து விடுகிறது. ஒரு நாய் ஒரே சமயத்தில் குறைந்தபட்சம் 8 குட்டிகள் முதல் அதிகபட்சம் 16 குட்டிகள் ஈனும். இதனால் நாய்கள் இனப்பெருக்கம் அபரிதமான வளர்ச்சியை கண்டு வருகிறது.

தொடக்க காலத்தில் ரேபிஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாகவும், இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொல்லும் நிலை இருந்தது. நாளடைவில் ரேபிஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாலும், விலங்கு நல வாரியத்தின் எதிர்ப்பாலும் நாய்களை கொல்லும் முறை கைவிடப்பட்டு, கருத்தடை செய்யும் முறை கொண்டு வரப்பட்டது. முன்பு நாய்களை சுறுக்கு வலை மூலம் மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து வந்தனர். அப்போது கழுத்து இறுக்கி நாய்கள் இறக்கும் நிலை ஏற்பட்டதால், தற்போது வலை மூலம் நாய்கள் பிடிக்கும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

மக்களுக்கு அச்சுறுத்தல்

தெருநாய்களால் அதிகம் பாதிக்கப்படுவது நடைபயிற்சி செய்பவர்கள்தான். எந்திரமயமான இன்றைய வாழ்க்கையில் முறையற்ற உணவு பழக்கம், உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களால் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோர் ஏராளம். அவர்களுக்கெல்லாம் டாக்டர்கள் சொல்லும் முக்கிய ஆலோசனை 'தினமும் நடைபயிற்சி செய்யுங்கள்' என்பதுதான்.

அதன்படி மாநகராட்சி பூங்காக்கள், சாலையோர பகுதிகள் போன்ற இடங்களில் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சியில் ஈடுபடுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சிலர் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணியான விலையுயர்ந்த நாய்களையும் நடைபயிற்சியின்போது உடன் அழைத்து வருகிறார்கள். அப்படி ஆர்வமுடன் நடைபயிற்சிக்கு வருவோருக்கு தெருநாய்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. தெருநாய்களால் அச்சுறுத்தல் என்பது ஒருபுறம் பொதுமக்களும், தெருநாய்கள் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன என்று விலங்குகள் நல அமைப்பினர் இன்னொரு புறமும் மாநகராட்சிக்கு புகார் அளிக்கச் சென்று கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய சூழலில் ஈரோட்டில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதா? இல்லையா? என்பது குறித்து அன்றாடம் நடைபயிற்சியில் ஈடுபடுபவர்களில் சிலர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

நாய்களால் தொல்லை

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஈரோடு மாவட்ட செயலாளர் பொ.ராமச்சந்திரன் என்கிற ராமு:-

தெருநாய்கள் தொல்லை அனைத்து பகுதிகளிலும் பரவலாகவே இருக்கின்றன. கடந்த காலங்களில் நாய்கள் வளர்ப்பவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் ஒரு அனுமதி அட்டை வழங்கும். அந்த அட்டை வைத்திருப்பவர்கள் வளர்க்கும் நாய்கள் வீதியில் சுற்றினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவித்து விடுவார்கள். அனுமதி அட்டை இல்லாத நாய்கள் தெரு நாய்களாக கருதி அவற்றை பிடித்துச்சென்றுவிடுவார்கள். பின்னர் நாய்களை கொல்லக்கூடாது என்று இந்திய அளவில் புளூ கிராஸ் என்ற அமைப்பு எடுத்த நடவடிக்கையால் மத்திய அரசு தெருநாய்களை கொல்வதை தடை செய்தது. இதனால் தெருநாய்கள் அதிகமாக பெருகின. இதையும் தடுக்கும் வகையில் நாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

தற்போது முறையான நடவடிக்கை எதுவும் இல்லை என்ற நிலையில் எங்கு பார்த்தாலும் தெருநாய்கள் பெருகிக்கிடக்கின்றன. ஈரோடு அல்லது தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுமைக்கும் இந்த பிரச்சினை உள்ளது. எனவே மத்திய அரசு இந்த விஷயத்தில் முழுமையான அக்கறை எடுக்க வேண்டும். தெருநாய்கள் ஒழிப்பு தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டியது அவசியம். ஒரு வேளை நாய்களை கொல்ல முடியாது என்ற நிலையை எடுத்தால் தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து ஆங்காங்கே அவற்றுக்கு வசதிகள் செய்து உணவு கொடுக்கவும், அவை வீதியில் சுற்றாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருநாய்களை கொல்லக்கூடாது என்கிற அரசு, அதே நாய்களால் குழந்தைகள் கடித்துக்கொல்லப்படும் அவலத்தை வேடிக்கை பார்ப்பது சரியா. ஒரு நாய்க்கு இருக்கும் சட்டப்பாதுகாப்பு குழந்தைகளுக்கு இல்லையா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

விபத்துகள்

ஈரோடு பாப்பாத்திக்காடு பகுதியை சேர்ந்த எஸ்.கலியமூர்த்தி:-

நான் சம்பத்நகர் பகுதியில் தினமும் நடைபயிற்சிக்கு செல்கிறேன். காலையில் நான் வீட்டில் இருந்து செல்லும்போதே நாய்கள் பின்தொடர்ந்து வருகின்றன. ஒரு வீதியில் இருந்து இன்னொரு வீதிக்கு சென்றால் அங்கும் 10 நாய்கள் சுற்றுகின்றன. தெருநாய்கள் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்துகின்றன. கடந்த 10 நாட்களில் நாய்களுக்கு பயந்து வேகமாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் 5 பேருக்கு மேல் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி மாநகராட்சியில் புகார் கொடுத்தால் புளூ கிராஸ் சட்டம் இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி, சிலர் நாய்களுக்கு உதவி செய்கிறோம். உணவு கொடுக்கிறோம் என்று வீதி வீதியாக சென்று நாய்களுக்கு பிஸ்கெட் போடுவது, ஏதேனும் உணவு வைப்பது என்று செய்கிறார்கள். அது தவறல்ல. அப்படி விலங்குகள் மீது அன்பு காட்டுபவர்கள் அவர்கள் வசிக்கும் வீட்டில் வளர்த்துக்கொள்ளலாம். எப்போதாவது அவர்கள் நாய்களுக்கு சேவை செய்வதற்கு, மற்றவர்கள் சிரமப்பட வேண்டுமா?. எனவே தெரு நாய்களை ஒழிக்க கண்டிப்பாக சட்டம் இயற்றப்பட வேண்டும்.

தடை வேண்டும்

திண்டல் சக்தி நகர் பகுதியை சேர்ந்த எம்.அருணா:-

வியாபாரம் தொடர்பாக எந்த நேரத்திலும் இருசக்கர வாகனத்தில் பயணிக்க வேண்டியது உள்ளது. ஆனால், எந்த வீதிக்கு சென்றாலும் நாய்கள் யாரை கடிக்கலாம், யாரை துரத்தலாம் என்று நிற்பதை பார்த்தாலே அச்சமாக உள்ளது. சிறுவர்- சிறுமிகள் தனியாக வீதியில் நடந்து செல்ல முடிவதில்லை. ஒவ்வொரு வீதியிலும் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிகின்றன. யாராவது தங்கள் சேவை மனப்பான்மையை காட்ட, அவ்வப்போது ஏதேனும் உணவுகளை சாலையோரத்தில் போட்டு விட்டு செல்கிறார்கள். அப்போது நாய்கள் உணவுக்காக சண்டையிடுகின்றன. அப்போது அந்த வழியாக யாராவது வந்தால் அவர்கள் மீது கோபத்தை காட்டி பாய்கின்றன. இதனால் நாய்கள் துரத்துவதால் தினமும் வாகனங்களில் இருந்து விழுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. எனவே தெருநாய்கள் பெருகுவதை தடை செய்ய வேண்டும்.

சட்டத்திருத்தம்

லக்காபுரம் வி.ஐ.பி.நகர் பகுதியை சேர்ந்த கே.எஸ்.செல்வராஜ்:-

தெருநாய்களின் அட்டகாசத்தால் நான் 2 முறை பாதிக்கப்பட்டு இருக்கிறேன். 2 முறையும் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது தெருநாய்கள் குறுக்கே பாய்ந்து சாலையில் விழுந்து காயம் அடைந்தேன். ஹெல்மெட் அணிந்து இருந்ததால் தப்பினேன். அதுமட்டுமின்றி, நான் தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் மேலாளராக இருக்கிறேன். தினமும் எங்களிடம் காப்பீட்டு நிதி கேட்டு வரும் விபத்துகளின் விவரங்களை பார்த்தால் நாய்களால் பாதிக்கப்பட்டு விபத்தில் சிக்கியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றன. எனவே தெருநாய்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டியது அவசியம். சிலர் வீடுகளில் அவர்களுக்கு பிடித்த நாய்களை வளர்க்கிறார்கள். அத்தோடு விட்டு விடாமல் வெளியில் சுற்றித்திரியும் நாய்களுக்கும் பிஸ்கெட் போட்டு தங்கள் வீட்டின் முன்பு வைத்துக்கொள்கிறார்கள். அவை மற்றவர்கள் யார் அந்த வீதியாக சென்றாலும் துரத்துகின்றன. இதுபோன்ற விபத்துகள்தான் அதிகம் நடக்கின்றன. தெருநாய்கள் மீது அக்கறை காட்டுபவர்கள் அவர்கள் வீட்டுக்கு கொண்டு சென்று வளர்க்கலாம். ஆண் குட்டிகள் என்றால் சிலர் எடுத்துச்செல்கிறார்கள். பெண் குட்டிகளை கண்டுகொள்வதில்லை. அவை உணவுக்கு அலைந்து திரிந்து ஒரு கட்டத்தில் வெறி பிடித்து அனைவரையும் துரத்துகின்றன. இனப்பெருக்கமும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. எனவே சட்டங்களில் திருத்தம் கொண்டுவர வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Related Tags :
Next Story