குழந்தைகளின் மன அழுத்தத்தை விரட்டி ருசிக்கத் தூண்டும் கலை


குழந்தைகளின் மன அழுத்தத்தை விரட்டி ருசிக்கத் தூண்டும் கலை
x

மன அழுத்ததிற்காக மருத்துவர்களை அணுகியபோது, கைகளின் அழுத்த புள்ளிகளுக்கு அதிக வேலை தரக்கூடிய தையல் கலை, ஆரி வேலைப்பாடுகள், சமையல், கேக் தயாரிப்பு... இப்படி ஏதாவது ஒன்றில் ஈடுபட வழிகாட்டினர்.

'கேக்' கொண்டாட்டங்கள் முன்பை விட இப்போது மிகவும் அதிகம். பிறந்தநாள், திருமண நாள்... போன்ற வழக்கமான கொண்டாட்டங்களை தாண்டி, மகிழ்ச்சியான எல்லா தருணங்களையும் 'கேக்' வெட்டி கொண்டாட பழகிவிட்டனர். 'கேக்' என்பதை எல்லோரும் கொண்டாட்ட பொருளாகவும், வியாபார யுக்தியாகவும் சிந்தித்துக்கொண்டிருக்கையில், அதை மன அழுத்தத்திற்கான மருந்தாக மாற்றியிருக்கிறார், ஹசீனா ஷாபீர். இவருக்கு 'கேக் தயாரிப்பு' அறிமுகமானதே ஸ்பெஷல் ஸ்டோரி.

''சில வருடங்களுக்கு முன்பு எனது வலது கையில், வலி அதிகமாக இருந்தது. கூடவே மன அழுத்தமும் இருந்தது. அதற்காக மருத்துவர்களை அணுகியபோது, கைகளின் அழுத்த புள்ளிகளுக்கு அதிகம் வேலை தரும்படியான முயற்சிகளில் ஈடுபட அறிவுறுத்தினர். அதாவது தையல் கலை, ஆரி வேலைப்பாடுகள், சமையல், கேக் தயாரிப்பு... இப்படி ஏதாவது ஒன்றில் ஈடுபட வழிகாட்டினர். எனக்கு, கேக் தயாரிப்பில் ஆர்வம் இருந்ததால், கேக் தெரபியை முயன்று பார்த்தேன். கை வலிக்கு மட்டுமல்ல, மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் அது உதவியாக இருந்தது'' என்று கேக்கிற்கும், அவருக்குமான பந்தத்தை தெரியப்படுத்தும் ஹசீனா, சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர்; பட்டதாரி.

தன்னுடைய மனதிற்கும், கைகளுக்கும் மருந்துபோட்ட கேக் தயாரிப்பை, முழுமையாக தெரிந்துகொள்ள பாஸ்ட்ரி சம்பந்தமான தொழில் படிப்புகளையும் முறையாக கற்றுக்கொண்டு, அன்றிலிருந்து இன்று வரை பாஸ்ட்ரி கலையை புதுமையாக முன்னெடுத்து வருகிறார்.

''கேக், குக்கீஸ், பீட்சா, பிரவுணி... இதுபோன்ற பாஸ்ட்ரி தயாரிப்புகள் இன்று மிகப்பெரிய வியாபாரம் என்பதும், அதை மையப்படுத்தி பல்வேறு விதமான தொழில்கள் நடக்கிறது என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் பாஸ்ட்ரி கலை மூலமாக உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் முடியும் என்பதை வெகுசிலரே அறிந்திருப்பார்கள். அதில் நானும் ஒருத்தி. எனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதுடன், அவர்களை மன அழுத்தத்தில் இருந்தும் உடல் வலிகளில் இருந்தும் குணமாக்குகிறேன்'' என்றவர், தன்னை போலவே உடலாலும், மனதாலும் சோர்வடைந்திருக்கும் பலருக்கு பாஸ்ட்ரி கலையை கற்றுக்கொடுக்கிறார். குறிப்பாக மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்ப தலைவிகள், தனிமையுடன் போராடும் முதியவர்கள், பள்ளிப் படிப்பு மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சிகளினால் சோர்வடைந்த பள்ளி குழந்தைகள் ஆகியோருக்கும் 'கேக் தயாரிப்பு' கலை மூலம் உற்சாகமூட்டுகிறார்.

''ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு கேக் தயாரிக்க கற்றுக்கொடுத்திருக்கிறேன். இதில் ஒருவர், முன்னணி உணவு நிறுவனத்தில் பிரவுணி கலைஞராக பணியாற்றுவதோடு, வாழ்க்கையை மகிழ்ச்சியாக எதிர்கொள்கிறார். சிலர் கேக் கலைஞர்களாக, குக்கீஸ்-டெசர்ட் கலைஞர்களாக மாறி, வாழ்க்கையை இனிமையாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சிறப்பு குழந்தைகள் மட்டுமின்றி, நிறைய பள்ளி குழந்தைகளுக்கு பாஸ்ட்ரி கலையை சந்தோஷமாக கற்றுக்கொடுத்து வருகிறேன். அவர்கள், பாட்டு, நடனம் போன்ற திறன் வளர்ப்பு பயிற்சியை போலவே கேக் தயாரிப்பை கற்றுக்கொள்கிறார்கள்.

அதுமட்டுமா..? வீட்டில் தனிமையில் வாடும் முதியவர்களுக்கு கேக் தயாரிக்க கற்றுக்கொடுத்திருக்கிறேன். இது அவர்களை சுறுசுறுப்பாக இயங்க வைப்பதுடன், தனிமையில் இருந்து கொஞ்சம் விலகி இருக்க செய்யும். கூடவே, அவர்களது 'கிரியேட்டிவிட்டி' மூலம் வயதான காலத்தில் கொஞ்சம் பணம் கிடைப்பது இனிப்பான செய்தி தானே'' என்றவர், சமூகத்தில் பின்தங்கிய குடும்ப தலைவிகளின் வாழ்க்கையை இனிப்பான கேக் மூலமாக, மேலும் இனிப்பூட்டுகிறார். கணவனை இழந்தவர்கள், சிங்கள் மதர்ஸ், பெற்றோர் இன்றி தாத்தா பாட்டியுடன் வளரும் குழந்தைகளுக்கு தனக்கு தெரிந்த பாஸ்ட்ரி கலையை சிறப்பாக கற்றுக்கொடுத்து, அவர்களது வாழ்க்கையை மேலும் சிறப்பாக்குகிறார்.

''கேக் தயாரிப்பை பொறுத்தவரை, எல்லோருக்கும் ஒவ்வொரு தனி ஸ்டைல் இருக்கும். அந்தவகையில், என்னுடையது சிறுதானிய கேக்குகள். கேக் தயாரிப்பை கற்றுக்கொண்டு, கற்றுக்கொடுக்க தொடங்கியது முதலே, புதுமையான முயற்சிகளில் என்னை முன்னிலைப்படுத்தி வருகிறேன். சந்தைகளில் கிடைப்பது ஒருபுறம் இருந்தாலும், எனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்குவதில் எனக்கு அதீத ஆர்வம் உண்டு. அந்தவகையில், மைதா மாவு தவிர்த்து கோதுமை, ராகி, கம்பு, கேழ்வரகு... இப்படி ஆரோக்கியம் நிறைந்த சிறுதானியங்களில் கேக் தயாரிக்க பழகிக்கொண்டேன். அதேபோல, செயற்கை வண்ணங்கள், சுவை கூட்டிகளுக்கு பதிலாக காய்கறிகளில் இருந்து பெறப்படும் வண்ணங்கள் மற்றும் ஆர்கானிக் பொருட்களை கொண்டே கேக் தயாரிக்கிறோம்'' என்றவர், பயிற்சி வகுப்புகள் மூலம் உருவாக்கப்பட்ட கேக், பிரவுணி, குக்கீஸ்... போன்ற பொருட்களை ஹசி டிலைட்ஸ் இன்ஸ்டாகிராம் மூலமாக காட்சிப் படுத்துகிறார்.

* உங்களுடைய ஸ்பெஷல் ?

சீஸ் கேக், டபுள் பியூஷன் கேக், மோஸ் கிரீம் கேக், சிறுதானிய பிரவுணி, சிறுதானிய கேக்குகள். இதனுடன், கேக்கை அலங்கரிக்கும் பைப்பிங் (கிரீம் கோன்களை கொண்டும் கேக் மேற்புரத்தை அலங்கரிக்கும் கலை), கார்னிசிங் (சாக்லெட் துகள்களை கொண்டு கேக்கை அலங்கரிப்பது) போன்றவைகளையும் சிறப்பாக செய்வேன்.

* உங்களுடைய ஆசை ?

'கேக்' வர்த்தகம் லாபகரமானதுதான். அதை ஏழை-எளிய பெண்களுக்கு கற்றுக்கொடுப்பதே என்னுடைய ஆசை.

* கடை கேக்குகளுக்கும், வீட்டில் செய்யும் கேக்குகளுக்கும் என்ன வித்தியாசம்?

நமக்கு பிடித்தமானவர்களுக்கு பிடித்த ஸ்டைலில் 'கேக்'குகளை உருவாக்கும்போது, ஒரு 'பெர்சனல் டச்' கிடைக்கும். அதை கடைகளில், நாம் தேட முடியாது.

1 More update

Next Story