முதல் மத்திய ஜெயிலும்.. சீர்திருத்த மையமும்..


முதல் மத்திய ஜெயிலும்.. சீர்திருத்த மையமும்..
x

சிறைக் கைதிகள் படிப்பை தொடர்வதற்கும் அருணாச்சலப்பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ராஜீவ் காந்தி பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.

நாட்டில் மிக குறைந்த குற்ற விகிதங்களை கொண்ட மாநிலங்களுள் ஒன்று அருணாச்சலப்பிரதேசம். அதனால் அங்கு சிறைச் சாலைகளின் எண்ணிக்கையும் குறைவுதான். நகர ரீதியாக அமைந்திருக்கும் கிளை சிறைகள்தான் அதிகம். மாவட்ட சிறைகள் இரண்டுதான் இருக்கிறது என்பது ஆச்சரியமாக இல்லையா?

அதற்கு அடுத்தகட்டமாக அமைந்திருக்கும் மத்திய சிறை அங்கு இதுநாள் வரை இல்லை. இப்போதுதான் முதன் முதலாக மத்திய சிறைச் சாலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. அதையும் மத்திய சிறைச் சாலையாக நிர்வகிக்க அம் மாநில அரசு விரும்பவில்லை. அதற்கு சீர் திருத்த மையம் என்றே பெயர் சூட்டி இருக்கிறது.

சிறைக் கைதிகள் தங்கள் தண்டனைக் காலம் முடிந்தபிறகு மீண்டும் சமூகத்துடன் இணைந்து மறுவாழ்வைத் தொடங்குவது சவாலான விஷயமாக இருக்கிறது. சமூகத்தில் கண்ணியமாக நடத்தப்படுவதை உறுதிப்படுத்தும் விதமாக சிறைக்குள்ளேயே மறுவாழ்வு திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. அவற்றை கற்றுத்தேர்பவர்கள், சிறைவாசத்துக்கு பிறகு தங்கள் மறுவாழ்வுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதனை பின்பற்றியே இந்த சீர்திருத்த மையமும் செயல்பட இருக்கிறது.

சிறைக் கைதிகள் படிப்பை தொடர்வதற்கும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ராஜீவ் காந்தி பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. தற்போது இரண்டு கைதிகள் முதுகலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், மூன்று பேர் பட்டதாரி அளவிலான படிப்புகளை தொடர்வதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story