குழந்தை பிறப்புக்கு சீனா கடைப்பிடிக்கும் புது யுக்தி


குழந்தை பிறப்புக்கு சீனா கடைப்பிடிக்கும் புது யுக்தி
x

சீனாவில் உள்ள யுனான் விந்தணு வங்கி முதன் முறையாக பல்கலைக்கழக மாணவர்களிடம் விந்தணு தானம் செய்வதற்கு முன் வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவது மக்கள் தொகையில் பெறும் மாறுதலை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களை காட்டிலும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதித்து வந்த நிலையில் 2015-ம் ஆண்டு அந்த சட்டத்தை ரத்து செய்தது. 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதி அளித்தது. ஆனாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

குழந்தை பிறப்பை அதிகரிக்கச் செய்ய அந்நாட்டு மாகாண அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சமீபத்தில் திருமணமாகாதவர்கள் கூட குழந்தை பெற்றுக்கொள்வதற்கு சிச்சுவான் மாகாண அரசு அனுமதி அளித்தது.

இந்தநிலையில் தென் மேற்கு சீனாவில் உள்ள யுனான் விந்தணு வங்கி முதன் முறையாக பல்கலைக்கழக மாணவர்களிடம் விந்தணு தானம் செய்வதற்கு முன் வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன் தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்பட நாடு முழுவதும் உள்ள விந்தணு தான கிளினிக்குகள் மாணவர்களை விந்தணு தானம் செய்யுமாறு வலியுறுத்தி உள்ளன. நாட்டில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதன் ஒரு அங்கமாக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யுனான் விந்தணு வங்கி மாணவர்களுக்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி விந்தணு தானம் செய்வதற்கு முன்வருபவர்கள் 20 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 165 செ.மீ.க்கும் மேல் உயரம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். குடும்ப மரபணு சார்ந்த நோய் பாதிப்புகளுக்கோ, பிற நோய்த்தொற்றுகளுக்கோ ஆளாகி இருக்கக்கூடாது. கல்வி அறிவு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

இந்த விதிமுறைகளை ஏற்பவர்களுக்கு 4,500 யுவான் முதல் 7 ஆயிரம் யுவான் (இந்திய மதிப்பில் ரூபாய் 54 ஆயிரம் முதல் ரூபாய் 85 ஆயிரம் வரை) ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளது. பெய்ஜிங்கில் உள்ள விந்தணு தான வங்கி மற்ற வங்கிகளை விட அதிக ஊக்கத்தொகை வழங்குகிறது.

1 More update

Next Story