தடகள தங்கம்


தடகள தங்கம்
x

‘ஸ்பிரிண்ட்’ ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய தடகள போட்டிகளில் பட்டைய கிளப்பி வரும் ருத்திகாவிடம் சிறுநேர்காணல்.

* உங்களை பற்றி கூறுங்கள்?

சென்னை சேத்துப்பட்டில், அப்பா சரவணன், அம்மா காஞ்சனா மற்றும் அக்கா ஹர்ஷினி ஆகியோருடன் வசித்து வருகிறேன். எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியில், பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படிக்கிறேன்.

* தடகளம் மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

என்னுடைய அப்பா விளையாட்டு பின்னணி கொண்டவர். என்னுடைய அக்காவும் தடகளத்தில் சாதித்துக்கொண்டிருக்கிறார். அவர்களை முன்மாதிரியாக கொண்டு நானும் தடகள விளையாட்டுகளில் ஆர்வம் காட்டினேன்.

* தடகளத்தில், ஓட்டப்பந்தயத்தை தேர்ந்தெடுத்தது ஏன்?

என்னுடைய அக்கா, நீளம் தாண்டுதலில் பல சாதனைகள் படைத்தவர். அவரை போலவே, நானும் நீளம் தாண்டுதலில்தான் கவனம் செலுத்தினேன். ஆனால் நீளம் தாண்டுதலை விட, 'ஸ்பிரிண்ட்' எனப்படும் குறுகிய தூர அதி விரைவு ஓட்டப்பந்தயங்களில் சிறப்பாக செயல்பட்டதால், அப்பா மற்றும் பயிற்சியாளரின் அறிவுரைபடி ஓட்டப்பந்தயத்தில் பயிற்சி பெற தொடங்கினேன்.

* எந்தவயதில் இருந்து பயிற்சி பெறுகிறீர்கள்?

3-ம் வகுப்பு படிக்கையில் இருந்து, பயிற்சி பெறுகிறேன். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் இவை இரண்டிற்குமே பயிற்சி பெற்றேன். ஓட்டப்பந்தயத்திற்கு தேவையான திறன், எனக்கு இயற்கையாகவே இருப்பதாக பயிற்சியாளரும் கூறியதை தொடர்ந்து, ஓட்டப்பந்தயங்களில் கூடுதல் கவனம் செலுத்தினேன். 9-ம் வகுப்பு படிக்கும்போதே, மாநில அளவிலான பந்தயங்களில் கலந்து கொண்டு பதக்கம் வெல்ல ஆரம்பித்தேன்.

* இதுவரை எந்தெந்த போட்டிகளில் வென்றிருக்கிறீர்கள்?

நான் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். சென்னை மாவட்ட போட்டியில் 100 மீ, ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி, நீளம் தாண்டுதலில் தங்கம் வென்றேன்.

மதுரையில் நடந்த மாநில ஓபன் போட்டியில், 100 மீ ஓட்டப்பந்தயத்தில், தங்கம்; நீளம் தாண்டுதலில் வெள்ளி கைப்பற்றினேன்.

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடந்த ஜூனியர் தேசிய தடகள போட்டிகளில், 100 மீ ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி, நெய்வேலியில் நடந்த மாநில அளவிலான போட்டியில் 100 மீ, 200 மீ மற்றும் ரிலே ஆகிய மூன்றிலும் வெள்ளி வென்றேன்.

கடந்த 2019-ம் ஆண்டு, இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் சார்பில், அரியானாவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் 100 மீ ஓட்டப்பந்தயத்தில் வெண்கலம், ரிலேவில் வெள்ளி கைப்பற்றினேன்.

2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டிகளில் 2 வெள்ளி பதக்கமும், மாநில அளவிலான போட்டிகளில் 2 தங்கப்பதக்கமும் கிடைத்தது. இந்த வருடம் நடத்தப்பட்ட தேசிய போட்டிகளில் 3 தங்கமும், மாநில அளவிலான போட்டிகளில் 2 தங்கமும் கிடைத்தது. தற்போது கூடுதலாக, சர்வதேச தங்கப்பதக்கமும் கிடைத்திருக்கிறது.

* சாதனை எதுவும் புரிந்திருக்கிறீர்களா?

ஆம்..! கர்நாடகாவில் நடந்த தென்மண்டல தேசிய அளவிலான போட்டியில் 100 மீ மற்றும் 200 மீ ஓட்டப்பந்தயங்களில் தங்கம் வென்றேன். இதில் 100 மீ தூரத்தை, 12.35 வினாடிகளில் கடந்து தேசிய அளவில் புதிய சாதனை படைத்தேன்.

2020-ம் ஆண்டு அசாமில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில், 100 மீட்டர் பிரிவிலும், ரிலேவிலும் வெள்ளி பதக்கம் வென்றதோடு ரிலேவில் (12.26 வினாடிகள்) புதிய சாதனையும் படைத்தேன்.

2022-ம் ஆண்டு, மாநில அளவிலான 100 மீ ஓட்டப்பந்தயத்தை, (12.21 வினாடிகள்) மின்னல் வேகத்தில் ஓடி கடந்து, மற்றொரு மாநில சாதனையை படைத்தேன்.

* யாரிடம் பயிற்சி பெறுகிறீர்கள்?

நீளம் தாண்டுதலில் பல சாதனை புரிந்திருக்கும் வெயின் பெப்பின் என்பவரிடம்தான், நானும் எனது சகோதரியும் பயிற்சி பெறுகிறோம்.

* தடகள வாழ்க்கையில், மறக்கமுடியாத அனுபவம் எது?

குவைத் ஆசிய நேஷனல்ஷிப் போட்டிகளில் பங்கேற்க, தேசிய அளவில் தகுதி போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றிபெறுபவர்கள் மட்டுமே, இந்தியாவின் சார்பாக குவைத்திற்கு அனுப்பி வைக்கப்படுவர். இந்நிலையில், நான் 200 மீட்டர் ரிலே பிரிவிலும், 100 மீட்டர் 'ஸ்பிரிண்ட்' ஓட்டப்பந்தய பிரிவிலும் களம் கண்டேன். இதில் 100 மீட்டர் ஓட்டத்தை, மிக விரைவாக ஓடி முடித்தாலும் 'பவுல்' செய்ததால், ஆசிய நேஷனல்ஷிப் போட்டியில் 100 மீ ஓட்டப்பந்தய போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போனது. பவுல் இல்லாதபட்சத்தில், 100 மீ ஓட்டப்பந்தயத்திலும் கலந்து கொண்டு, இந்தியாவிற்கு மற்றொரு தங்கம் வென்று கொடுத்திருப்பேன்.

உங்களுடைய இலக்கு எது?

இப்போது 18 வயதிற்குட்டோருக்கான பிரிவில் சர்வதேச பதக்கம் வென்றிருக்கிறேன். அடுத்ததாக, சர்வதேச போட்டிகளின் ஜூனியர் பிரிவில் கலந்துகொண்டு, வெற்றிபெற ஆவலாய் இருக்கிறேன். அதற்காகவே கடுமையாக உழைக்கிறேன்.

* தடகளத்தில் கிடைத்த, மிகப்பெரிய வெற்றி எது?

சமீபத்தில் குவைத்தில், ஆசிய நேஷனல்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டன. இது சர்வதேச போட்டி. அதில் இந்தியாவின் சார்பாக, 200 மீட்டர் ரிலே பிரிவில் கலந்துகொண்டு தங்கம் வென்றேன். சர்வதேச அளவிலான தடகளப்போட்டியில் தங்கம் வென்றதையே சிறப்பானதாக கருதுகிறேன்.


Next Story