ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் கடும் பாதிப்பு; அழிவின் விளிம்பில் உயிரினங்கள் - அரசின் ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்!


ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் கடும் பாதிப்பு; அழிவின் விளிம்பில் உயிரினங்கள் - அரசின் ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
x

கடந்த 5 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் வேகமாக பாதிப்படைந்து வருவதாக, ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் அறிக்கை காட்டுகிறது.

மெல்போர்ன்,

கங்காரு இனத்துக்கு புகழ்பெற்ற ஆஸ்திரேலிய கண்டத்தில், சுற்றுச்சூழல் பாதிப்பு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அறிக்கை காட்டுகிறது.

கடுமையான வறட்சி, காட்டுத்தீ மற்றும் வெள்ளம் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளை ஆஸ்திரேலியா எதிர்கொண்டு வருகிறது. பருவநிலை மாற்றம், வாழ்விட இழப்பு, ஆக்கிரமிப்பு இனங்கள், மாசுபாடு மற்றும் சுரங்கம் ஆகியவற்றால் சுற்றுச்சூழலில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.

ஆஸ்திரேலிய அரசாங்கத்திடம் இந்த பிரச்சனையை போதுமான அளவு கையாள்வதற்கான கட்டமைப்பு அல்லது நிதி இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் உள்ள பெரும்பாலான தாவரங்கள் மற்றும் விலங்குகள் உலகில் வேறு எங்கும் காணப்படவில்லை. அங்கு பாதிப்படைந்து வரும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படா விட்டால், இந்த இயற்கை செல்வங்கள் நிரந்தரமாக இழக்கப்படலாம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அறிக்கையில் வெளியாகியுள்ள மிகவும் ஆபத்தான கண்டுபிடிப்புகள் இவை:

உலகில் உள்ள வேறு எந்த கண்டத்தையும் விட ஆஸ்திரேலியா அதிக பாலூட்டி இனங்களை இழந்துள்ளது. 100க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய இனங்கள் அழிந்துவிட்டன.

202 விலங்கு மற்றும் தாவர இனங்கள் வெறும் 5 வருட காலத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகவும் அழிவின் விளிம்பில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2019-20 காலகட்டத்தில் பரவலாக ஏற்பட்ட காட்டுத்தீயின் தாக்கத்தில், 100 முதல் 300 கோடி விலங்குகள் அழிந்ததாக நம்பப்படுகிறது.

ஆறுகள் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் வறண்டு போவதால், நீர் வாழ்விடமும் நன்றாக இல்லை. நீர் பிரித்தெடுத்தல் மற்றும் வறட்சி ஆகியவை நாட்டு மீன்களின் எண்ணிக்கை குறைவதற்கு வழிவகுத்துள்ளது.

பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் கடற்கரைக்கு அருகில் வாழ்கின்றனர். இது நமது கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று அரசின் ஆய்வறிகையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சமீபத்திய தேர்தல் முடிவுகள், பொதுமக்கள் பசுமை ஆற்றலைப் பற்றியும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும் வாக்காளர்கள் கவலைப்படுவதை நிரூபித்ததாக பல அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

சுற்றுச்சூழல் பாதிப்புகள் நம் அனைவரையும் பாதிக்கும். நமது சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தைப் புரிந்துகொள்வது, பாதுகாப்பது மற்றும் மீட்டெடுப்பது மக்களின் சொந்த நலனுக்கானது. இது நமது பொறுப்பும் கூட என்று தெரிவித்தனர்.

இந்த சுற்றுச்சூழல் ஆய்வு, கடந்த ஆண்டு விஞ்ஞானிகளால் முடிக்கப்பட்டு அறிக்கை தயாரானது. ஆனால் அங்கு பொதுத் தேர்தல் முடியும் வரை முந்தைய பிரதமர் ஸ்காட் மோரிசன் அரசாங்கத்தால் அறிக்கை வெளியிடப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்த அறிக்கை மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது என்று கூறிய அந்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத்துறை மந்திரி தன்யா பிலிபர்செக், இப்போது புதிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சியில், சுற்றுச்சூழலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.


Next Story