சிறுதானியங்களை சேகரிக்கும் சிறப்பு பெண்


சிறுதானியங்களை சேகரிக்கும் சிறப்பு பெண்
x

27 வயதான இளம் பழங்குடியின பெண் ஒருவர் 150 வகையான அரிய சிறுதானியங்களின் விதைகளை சேகரித்து, அவற்றை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்.

இந்தியாவைப் பொறுத்தவரை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. என்ன தான் விளைச்சலை அதிகரிக்க ரசாயன பூச்சிக்கொல்லிகள், உரங்கள் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டாலும், இன்றளவும் லட்சக்கணக்கான விவசாயிகள் பராம்பரிய முறையில் இயற்கை விவசாயத்தை கண் போல் காத்து வருகின்றனர்.

குறிப்பாக நவீனம் என்ற பெயரில் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்குப் பதிலாக பாரம்பரிய விதைகளை விளைச்சலுக்கு பயன்படுத்துவதையும், அதனை சேகரிப்பதையும் இன்றைய இளம் தலைமுறையினர் கையில் எடுத்துள்ளனர்.

அந்த வகையில் 27 வயதான பைகா பழங்குடிப் பெண் லஹரி பாய், இந்தியாவின் உண்மையான இயற்கை விவசாயத்தின் அடையாளமாக மாறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் அமைந்துள்ள சில்பாடி கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட பைகா பழங்குடியினத்தைச் சேர்ந்த லஹரி பாய், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

வெறும் இரண்டே அறைகளைக் கொண்ட வீட்டில் வசித்து வரும் இவர், ஒரு அறையை பாரம்பரிய சிறு தானிய வகைகளின் சேமிப்புக் களமாக மாற்றியுள்ளார்.

கருவரகு, சாமை, வெள்ளை தினை, ராகி, பனி வரகு உள்ளிட்ட 150 வகையான அழியக்கூடிய நிலையில் உள்ள, அரிய வகை விதைகளை சேகரித்து வைத்துள்ளார். பைகா பழங்குடியினரைப் பொறுத்தவரை பெண்கள் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவதை அவர்கள் விரும்புவதில்லை. மேலும் லஹரி பாய் இளம் பெண் என்பதாலும் அவர் மீது மக்களுக்கு பெரிதாக நம்பிக்கை இல்லாமல் இருந்துள்ளது. ஆனால் லஹரி பாய் தனது முயற்சி மற்றும் கடின உழைப்பு மூலமாக இப்போது தனது மக்களின் ஆதரவை பெற்றுள்ளார்.

ஆம், லஹரி பாய் தான் சேகரித்த விதைகளை முதலில் தனக்கு சொந்தமான நிலத்தின் ஒரு சிறிய பகுதியில் விளைவிக்கிறார். அதன் மூலம் சேகரிக்கப்படும் விதைகளை பைகா பழங்குடியின மக்களுடன் இலவசமாக பகிர்ந்து கொள்கிறார். ஆரம்பத்தில் சில்பாடி கிராமத்தைச் சுற்றியுள்ள 15 முதல் 20 கிராமங்கள் லஹரியின் விதைகளை பயன்படுத்தி விவசாயம் செய்து வந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.

லஹரி இலவசமாக விதைகளை வழங்கினாலும், அதற்கு கைமாறாக பழங்குடியின மக்கள் தங்களது விளைச்சலில் ஒரு சிறு பகுதியை அவருக்கு பரிசாக கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பெண் என்பதால் அனைவரும் நான் திருமணம் செய்து கொண்டு பெற்றோரைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என நினைத்தனர். ஆனால் நான் தினை விதைகளை பாதுகாத்து அவர்களின் விவசாயத்தை மேம்படுத்துவது என முடிவெடுத்தேன். என்னை இப்போது யாரும் அவமானப்படுத்துவதில்லை என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

ஜோதூரைச் சேர்ந்த ஐ.சி.ஏ.ஆரின் 10 லட்சம் ரூபாய்க்கான உதவித்தொகைக்கு லஹரியை பரிந்துரைத்துள்ள திண்டோரி மாவட்ட ஆட்சியர் விகாஸ் மிஸ்ரா, லஹரியின் இந்த பாரம்பரிய விதைகள் சேகரிப்பை பாராட்டியுள்ளார்.

லஹரி இலவசமாக விதைகளை வழங்கினாலும், அதற்கு கைமாறாக பழங்குடியின மக்கள் தங்களது விளைச்சலில் ஒரு சிறு பகுதியை அவருக்கு பரிசாக கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


Next Story