மழைக்காலத்தில் பிரமிக்க வைக்கும் நீர்வீழ்ச்சிகள்


மழைக்காலத்தில் பிரமிக்க வைக்கும் நீர்வீழ்ச்சிகள்
x

பருவ மழை தீவிரமடைய தொடங்கிவிட்டாலே நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து வழிந்தோடும். நீர் வீழ்ச்சிகளில் குளிப்பதற்கு பலரும் விரும்புகிறார்கள். சில நீர் வீழ்ச்சிகளை தூரத்தில் இருந்து பார்த்தாலே மனம் குளிர்ச்சி அடைந்து விடும். மலைகளை கடந்து தண்ணீர் சீறி வரும் அழகு பிரமிக்க வைத்துவிடும்.

மழைக்காலத்தில் தவறாமல் நேரில் சென்று பார்வையிட வேண்டிய சில நீர்வீழ்ச்சிகளின் தொகுப்பு இது.

சித்ரகோட் நீர்வீழ்ச்சி

சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தில் அமைந்துள்ள சித்ரகோட் நீர்வீழ்ச்சி, இந்திராவதி ஆற்றில் இருந்து உருவாகிறது. 90 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சி 30 மீட்டர் அகலத்தில் பரந்து விரிந்து காட்சி அளிக்கும். அதனால் இது, 'இந்தியாவின் நயாகரா நீர்வீழ்ச்சி' என்று போற்றப்படுகிறது.

ஜூலை மாதம் அக்டோபர் வரையிலான காலகட்டம் இந்த நீர்வீழ்ச்சியை பார்வையிட சிறந்த நேரமாகும். இந்திராவதி ஆறு நிரம்பி வழியும் அழகும், பாறைகளுக்கு இடையே தண்ணீர் வழிந்தோடி வரும் அழகும் ரசிக்க வைக்கும்.

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி

தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி பருவ மழை காலங்களில் பார்வையிட ஏற்ற சுற்றுலாத்தலமாகும். காவிரி ஆறு கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் நுழையும் போது பாறை இடுக்குகளின் வழியே பாய்ந்தோடுகிறது.

அப்படி 14 முதல் 16 அடி உயரம் கொண்ட பாறைகளில் வழிந்தோடி வரும் தண்ணீர் நீர்வீழ்ச்சியாக காட்சி அளிக்கும். படகு சவாரி மூலம் நீர்வீழ்ச்சிகளின் அருகே சென்று வரலாம். குளிர் காலம் மற்றும் பருவ மழை காலங்களில் படகு சவாரி விமரிசையாக நடைபெறும்.

கன மழை மற்றும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் படகு சவாரி அனுமதிக்கப்படுவதில்லை. எனவே மழை காலத்தின்போது பயணம் மேற்கொள்ள திட்டமிட்டால், அங்குள்ள சீதோஷண நிலையை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது.

குடை நீர்வீழ்ச்சி

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள பந்தர்தாராவில் அமைந்துள்ள பருவகால நீர்வீழ்ச்சி இது. மழைக் காலத்தில் உருவாகும் இந்த நீர் வீழ்ச்சியின் பிறப்பிடம் வில்சன் அணை. அந்த அணை முழு கொள்ளளவை எட்டியதும் வெளியேற்றப்படும் நீர் அரை வட்ட வடிவ பாறையின் விளிம்பு பகுதிகளில் வழிந்தோடி நீர்வீழ்ச்சியாக உருமாறுகிறது.

500 அடி உயரத்தில் இருந்து குடை போன்ற தோற்றத்தில் தண்ணீர் வெளியேறுவதால் இது குடை நீர்வீழ்ச்சி என்று அழைக்கப் படுகிறது. நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள், அருவிக்கு கீழே உள்ள நடைபாதையில் நின்று அதன் அழகை ரசிக்கலாம்.

மும்பையில் இருந்து 161 கி.மீ. தொலைவிலும், புனேவில் இருந்து 165 கி.மீ தொலைவிலும் இந்த நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது.

ஜோக் நீர்வீழ்ச்சி

கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள ஜோக் நீர்வீழ்ச்சி இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். 829 அடி உயரத்தில் இருந்து ராஜா, ராணி, ரோவர் மற்றும் ராக்கெட் என நான்கு அருவிகளாக சீறி தரைத்தளத்தை எட்டும் காட்சி மெய் சிலிர்க்கவைக்கும்.

அடர்ந்த பசுமையான காடுகளால் சூழப்பட்டிருக்கும் வனத்திற்குள் ரம்மியமான சூழலில் அவ்வப்போது தோன்றும் வானவில்களும் கண்களை கொள்ளை கொள்ளும். மங்களூருவில் இருந்து 216 கி.மீ. தொலைவிலும், பெங்களூருவில் இருந்து 420 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

தலகோனா நீர்வீழ்ச்சி

ஆந்திராவில் உள்ள தலகோனா நீர்வீழ்ச்சிக்கு 270 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் சீறி பாய்ந்து வருகிறது. இந்த நீர்வீழ்ச்சி ஆந்திராவில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் மிக உயரமானது. திருப்பதி-மதனப்பள்ளி நெடுஞ்சாலையில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா தேசிய பூங்காவுக்கு அருகில் அமைந்துள்ளது.

பல்வேறு வகையான தாவரங்கள், விலங்கினங்கள் உயிர் வாழும் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் பசுமை சூழலில் இந்த நீர்வீழ்ச்சியை சென்றடையும் அனுபவம் அலாதியானது. திருப்பதியில் இருந்து 58 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி

கேரளாவின் திருச்சூரில் உள்ள சாலக்குடி ஆற்றில் இருந்து உருவான அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் 80 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் விழுகிறது. இது கேரளாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியாக விளங்குகிறது. தென்னிந் தியாவின் நயாகரா என்றும் அழைக்கப்படுகிறது. சாலக்குடி ஆற்றில் இருந்து வழச்சல், சார்பா மற்றும் அதிரப்பள்ளி என மூன்று அருவிகள் உருவாகின்றன.

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியின் இருபுறமும் பசுமையான காடுகள் சூழ்ந்திருக்கின்றன. அங்கு அரிய வகை மூலிகை தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் காணப்படுகின்றன. கொச்சியில் இருந்து 73 கிலோ மீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது.

துத்சாகர் நீர்வீழ்ச்சி

கோவா செல்லும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலையில் பகவான் மகாவீர் வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகில் அமைந்திருக்கும் துத்சாகர் நீர்வீழ்ச்சி, நாட்டின் மிக அழகான, உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும்.

சுமார் 1,017 அடி உயரத்தில் இருந்து செங்குத்தான மலை முகடுகளின் வழியாக நான்கு அடுக்கு களாக பாய்ந்து வரும் நீர் ஒன்றாக உருமாறும் காட்சி கண்களுக்கு விருந்து படைக்கும். இந்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிட பருவமழை காலம்தான் சிறந்து.

பால் கடல் என வர்ணிக்கப்படும் இந்த நீர் வீழ்ச்சியின் அழகை ரசிப்பதற்கு ரெயில் பயணம் சிறந்த வழித்தட மாகும். குல்லம்-காஸ்ட்லராக் ரெயில்வே வழித்தடத்தில் ஜூன் முதல் அக்டோபர் வரை பயணிக்கும்போது நீர்வீழ்ச்சி யின் அழகை முழுமையாக ரசித்து மகிழலாம்.

1 More update

Next Story