உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் சைக்கிள் பயணம்..!


உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் சைக்கிள் பயணம்..!
x

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த போஸ்கோ, அவரது நண்பர் கஜேந்திரனுடன் சைக்கிளில் தமிழகத்தை சுற்றி வந்திருக்கிறார். ஏன்?, எதற்காக? என்பதை அவரிடமே கேட்டு தெரிந்து கொள்வோம்.

சைக்கிள் பயணத்தில் ஆர்வம் ஏற்பட்டது எப்போது?

கடந்த ஒரு வருடங்களாகதான் சைக்கிள் ஓட்டுகிறேன். ஆரம்பத்தில் உடல் ஆரோக்கியத்திற்காக சைக்கிள் பெடல்களை மிதிக்க தொடங்கி, ஒருகட்டத்தில் சாகசம் செய்யும் ஆசையில் நெடுந்தூர பயணங்களுக்கு திட்டமிட்டேன்.

எங்கெல்லாம் சைக்கிளில் பயணித்திருக்கிறீர்கள்?

சைக்கிள் உலகிற்கும், சைக்கிளிங் பயணங்களுக்கும் நான் ரொம்ப ரொம்ப புதிது. அதனால் ஆரம்பத்தில் குறைந்த தூர பயணங்களையே முன்னெடுத்தேன். அதாவது, என் நண்பன் கஜேந்திரனுடன் சென்னையிலிருந்து மகாபலிபுரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டேன். அது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியை வழங்கியதால், சைக்கிளில் நெடுந்தூர பயணங்கள் மேற்கொள்வதை தொடர் கதையாக்கினேன்.

பிறகு சென்னையிலிருந்து புதுச்சேரி வரை சைக்கிளிலேயே பயணித்து, மீண்டும் சைக்கிள் பயணமாகவே சென்னை திரும்பினோம். மிகவும் திரிலிங்கான அனுபவமாக இருந்தது. அதனால்தான் சென்னையில் இருந்து, கன்னியாகுமரி வரை சைக்கிளிலேயே பயணிக்கும் திட்டத்தை வகுத்தேன்.

எதற்காக இந்த பயணம்?

சாகசம் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற சிந்தனை எனக்குள் இருந்தாலும், உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தையும், சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் உடல் நல நன்மைகளையும் தமிழக மக்களுக்கு வலியுறுத்தவே இந்த பயணத்தை முன்னெடுத்தேன்.

இந்த பயணம் எப்போது தொடங்கியது?

கடந்த 20 நாட்களுக்கு முன்புதான், இந்த பயணத்தை தொடங்கினோம். சென்னையில் இருந்து சைக்கிள் மிதிக்க தொடங்கி, மகாபலிபுரம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி என கிழக்கு கடற்கரை சாலை வழியாகவே கன்னியாகுமரியை சென்றடைந்தோம்.

எத்தனை நாள் பயணம் இது? கடினமான பயணமாக இருந்ததா?

திட்டமிட்டபடியே 8 நாட்களில், பயண இலக்கை அடைந்துவிட்டோம். நாங்கள் நினைத்ததைவிட, பயண அனுபவம் கொஞ்சம் கடினமானதாகவே இருந்தது. கடற்கரை சாலை வழியே பயணித்ததால், எதிர் காற்று பலமாக வீசியது. ஒருகட்டத்தில், சைக்கிள் மிதிக்கமுடியாமல், பயணத்தை பாதியிலேயே நிறுத்தும் அளவிற்கு மனம் உடைந்துவிட்டோம். இருப்பினும் எங்களை நாங்களாகவே தேற்றிக்கொண்டு, மீண்டும் பயணிக்க ஆரம்பித்தோம். திட்டமிட்டபடி, இலக்கை விரட்டிப்பிடித்தோம்.

இந்த பயணம் கற்றுக்கொடுத்த பாடம் என்ன?

விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை போன்ற மந்திர வார்த்தைகளுக்கு, இந்த பயணத்தின் மூலமாகவே அர்த்தம் புரிந்துக்கொண்டேன். எங்களை உடல் அளவிலும், மனதளவிலும் உறுதியான மனிதர்களாக இந்த பயணம் மாற்றியிருக்கிறது. பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தை வளர்த்திருக்கிறது.

அடுத்த பயணம் எங்கே? எப்போது?

இந்தியாவின் பாரம்பரிய சின்னங்களை தேடிய சைக்கிள் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறோம். மேலும் சென்னையிலிருந்து லடாக் வரை சைக்கிளிலேயே பயணிக்கும் திட்டமும் இருக்கிறது.

* பயண அனுபவத்தில் கிடைத்த மறக்கமுடியாத சம்பவங்கள்?

மனிதத்தின் மாண்பை போற்றும் நிறைய மனிதர்களை, இந்த பயணத்தின் வழியாக சந்திக்க முடிந்தது. பயணத்தின் 8 நாட்களும், திறந்தவெளியில் டெண்ட் கூடாரம் அமைத்து தூங்குவதுதான் எங்களது திட்டம். ஆனால் எங்களை பற்றி தெரிந்துகொண்ட ஊர் மக்கள், அவர்களது வீடுகளில் வந்து தங்கிக்கொள்ள சொன்னார்கள். சிலர் நாங்கள் கேட்காமலேயே உணவு மற்றும் தேவையான பொருட்களை வழங்க முன்வந்தனர்.


Next Story