பள்ளிக்கூடங்களில் காலை உணவு திட்டம் மகிழ்ச்சியை தருகிறதுபெற்றோர் கருத்து


பள்ளிக்கூடங்களில் காலை உணவு திட்டம் மகிழ்ச்சியை தருகிறதுபெற்றோர் கருத்து
x

பள்ளிக்கூடங்களில் காலை உணவு திட்டம் மகிழ்ச்சியை தருவதாக பெற்றோர் கருத்து தொிவித்துள்ளனா்.

ஈரோடு

பள்ளிக்கூடங்களில் காலை உணவு திட்டம் மகிழ்ச்சியை தருகிறது என்று பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

உணவு திட்டம் விரிவாக்கம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் நேற்று காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகை மாவட்டம் திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் வெள்ளோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடத்தில் அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் குழந்தைகளுக்கு உணவு வழங்கி, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு ருசித்தனர்.

பசியின்றி படிப்பேன்

இந்த திட்டம் குறித்து பெற்றோர் உள்பட பலர் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

வெள்ளோடு பள்ளிக்கூடத்தில் படிக்கும் 5-ம் வகுப்பு மாணவி சுகந்திரா:-

எனது பெற்றோர்கள் கூலி வேலை செய்து வருகிறார்கள். 2 பேரும் தினமும் காலையில் மிக சீக்கிரமாகவே வேலைக்கு சென்று விடுவார்கள். இதனால் பல நாட்கள் காலை நேரத்தில் எனக்கு உணவு கிடைக்காது. பசியுடன்தான் பள்ளிக்கூடத்துக்கு வருவேன். முதல்-அமைச்சர் ஸ்டாலின் காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தியபோது, எங்கள் பள்ளிக்கூடத்துக்கும் இந்த திட்டம் வரும் என்று கூறினார்கள். அது இப்போது வந்து விட்டது. முதல் நாளில் காலை உணவு சுவையாக இருந்தது. நல்ல சத்தான உணவாக இது இருக்கும் என்று ஆசிரியர்கள் கூறினார்கள். இனிமேல் தினமும் காலையில் பள்ளிக்கூடத்திலேயே உணவு கிடைத்துவிடும். எனவே நான் நன்றாக படிப்பேன். பள்ளிக்கூடத்தில் பசியின்றி படிக்கலாம்.

மகிழ்ச்சி

தொட்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்த இல்லத்தரசி கோமதி:-

எனது மகள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடத்தில் 3-ம் வகுப்பு படிக்கிறாள். தினமும் காலையில் சத்தான உணவு கொடுப்பது என்பது எங்களைப்போன்ற குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு முடியாது. ஆனால், எங்களை போன்றவர்களின் குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு, எங்கள் குழந்தைகளும் பசியின்றி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை பள்ளிக்கூடங்களுக்கு வழங்கி உள்ளார். இது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்து உள்ளது. எனது மகள் உள்பட அவள் வயதையொட்டிய அனைத்து குழந்தைகளுக்கும் சத்தான உணவு காலையில் கிடைக்கும். இந்த திட்டத்தை அளித்த முதல்-அமைச்சருக்கு நன்றி.

மிகச்சிறந்த திட்டம்

ஆசிரியை சந்தியா:-

எங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர் கூலி வேலைகளுக்கு செல்பவர்கள். அவர்களால் தினமும் காலை உணவினை குழந்தைகளுக்கு கொடுக்க முடியாது. எங்கள் மாணவ-மாணவிகளில் பலரும் காலையில் சரியாக சாப்பிடாமல் வருபவர்கள்தான். ஆனால், அனைவருக்கும் உணவு கொடுப்பது என்பது முடியாது. ஆனால், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விஷயத்தை கருத்தில் கொண்டு மிகச்சிறந்த திட்டமாக இதை கொண்டு வந்திருக்கிறார்.

இனிமேல் எங்கள் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் காலையில் இருந்தே பசியோடு இருக்க மாட்டார்கள்.

சத்தான உணவு அவர்களுக்கு கிடைக்கும். இதன்மூலம் அவர்களின் கல்வி கற்கும் திறனும் அதிகமாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதே போன்று பெற்றோர், மாணவ-மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினர் பள்ளிக்கூடங்களில் காலை உணவு திட்டம் மகிழ்ச்சியை தருகிறது என்று தெரிவித்தனர்.


Related Tags :
Next Story