குழந்தை பிறப்பு: சீன அரசின் விருப்பமும், இளம் தம்பதியரின் மனநிலையும்..


குழந்தை பிறப்பு: சீன அரசின் விருப்பமும், இளம் தம்பதியரின் மனநிலையும்..
x

சீனாவின் மக்கள்தொகை ஆண்டுதோறும் குறைந்து வருவது குறித்து சீன அரசு கவலை தெரிவித்துள்ளது.

உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா விளங்குகிறது. இந்த நிலை இன்னும் சில ஆண்டுகள்தான் நீடிக்கும். இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா முதலிடம் பிடிக்கும் நிலை உள்ளது. சீனாவில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக பிறப்பு விகிதம் குறைந்துள்ளதுதான் அதற்குக் காரணம். 1000 நபர்களுக்கு குழந்தை பிறப்பு விகிதம் 7.52 என்ற நிலையிலேயே உள்ளது. இது ஒரு பெண்மணி, தன் வாழ்நாளில் பெற்றெடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 1.15 என்ற அளவாகும். இது உலகிலேயே மிக குறைவான பிறப்பு விகிதம்.

கடந்த அறுபது ஆண்டுகளில் முதல் முறையாக சீனாவின் தெற்கு மாகாணமான ஹுனானில் குழந்தை பிறப்பு 5 லட்சத்துக்கும் கீழே குறைந்துள்ளது. கூடுதலாக, குவாங்டாங் மாகாணத்தில் மட்டுமே 2021-ம் ஆண்டில் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளன.

சீனாவின் மக்கள்தொகை ஆண்டுதோறும் குறைந்து வருவது குறித்து சீன அரசு கவலை தெரிவித்துள்ளது. இதற்கு அந்த அரசு கையாண்ட கடுமையான அணுகுமுறைகள்தான் காரணம். 1980-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை, ஒரு குழந்தை பெற்றுகொள்வதற்குத்தான் சீன அரசு அனுமதி அளித்தது. ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றிருந்தால் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த குழந்தைகளுக்கு சலுகைகள் மறுக்கப்பட்டது. ஆனால் இப்போதோ ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெறும் தம்பதிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்து வருகிறது. சீனாவில் இதுபோன்ற ஊக்கத்தொகை வழங்கப் படுவது இதுவே முதல் முறை. மக்கள்தொகை வீழ்ச்சியை எதிர்த்துப் போராடுவதற்கு இந்த யுக்தியை கையாண்டு கொண்டிருக்கிறது.

சீன அரசாங்கத்தின் புள்ளிவிவரப்படி, கிட்டத்தட்ட 65 சதவீத மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்கிறார்கள். நெருக்கடியான வாழ்க்கைச் சூழல், அதிகரிக்கும் குடும்பச் செலவு, விலைவாசி உயர்வு போன்ற காரணங்கள், அதிக குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் ஆர்வத்தை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியாக, 2021-ம் ஆண்டு மே மாதம், பெண்கள் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் சட்டத்தை சீன அரசாங்கம் நிறைவேற்றியது. ஆனாலும் ஒரு குழந்தையே போதும் என்ற மன நிலையில் பலர் இருக்கின்றனர். ஒரு சிலர்தான் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வதற்கு விருப்பம் தெரிவிக்கின்றனர். கூடுதலாக குழந்தைகளை பெற்றுக்கொள்பவர்களுக்கு சீன அரசு பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளது. ஆனால் அந்த சலுகைகள் ஒற்றைத் தாய்மார்களுக்கு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

சீனாவில் மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது உழைக்கும் வர்க்கத்தினர் (15-64 வயதுக்குள்) 100 கோடி பேர் இருக்கிறார்கள். அவர்கள்தான் நாட்டின் பொருளாதார உயர்வுக்கு முக்கிய காரணமானவர்கள். ஆனால் 2030-ம் ஆண்டுகளில் சீனாவில் இளைஞர்களை விட வயதானவர்கள் அதிகமாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாறுபாட்டை ஏற்படுத்தும் என்பது வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது.


Next Story