உலகை ஆளும் 'கிளவுட் கம்ப்யூட்டிங்' தொழில்நுட்பம்


உலகை ஆளும் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம்
x

கிளவுட் கம்ப்யூட்டிங் தளங்கள் வழியாகவே டிஜிட்டல் பரிமாற்றங்கள் நடக்கிறது.

சி.டி., டி.வி.டி., பென்டிரைவ், எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க்... இப்படித் தகவல்களை பரிமாற உதவிய சாதனங்கள் எல்லாம் மலையேறிவிட்டது (அவுட்டேட்). இப்போது ஒன்று இரண்டு எம்.பி. மட்டுமே இருக்கும் எம்.எஸ்.வேர்ட் பைலைப் பரிமாறவும், போட்டோ-வீடியோ போன்ற ஜீ.பி.கணக்கிலான டேட்டாக்களைப் பரிமாறவும், கிளவுட் கம்ப்யூட்டிங் பயன்படுகிறது. கூகுள் கிளவுட், டிராப் பாக்ஸ், அமேசான் வெப் சர்வீஸ், அஸூர், அலிபாபா கிளவுட், டிஜிட்டல் ஓசன்... இப்படி நிறைய கிளவுட் கம்ப்யூட்டிங் தளங்கள் வழியாகவே டிஜிட்டல் பரிமாற்றங்கள் நடக்கிறது. அதனால்தான், அவை உலகை ஆளும் தொழில்நுட்பங்களாக மாறி இருக்கின்றன.

* கிளவுட் கம்ப்யூட்டிங்

நம்மில் பெரும்பாலானோருக்கு 'கூகுள் டிரைவ்' தெரிந்திருக்கும். ஆனால் அது கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்தில்தான் இயங்குகிறது என்பதை, எல்லோரும் தெரிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை. ஆம்..! கூகுள் கிளவுட் தொழில்நுட்பத்தின் ஒரு சேவைதான், கூகுள் டிரைவ். கிளவுட் கம்ப்யூட்டிங் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பாக, அதன் அடிப்படை பற்றி புரிந்து கொள்வோம்.

இதனை எளிய முறையில் குறிப்பிட வேண்டுமென்றால் நாம் முதன் முதலில் கணினி பயன்படுத்தும்போது நமது தகவல்களைச் சேகரிக்க ஒரு ஹார்ட் டிஸ்க் அல்லது பென்டிரைவ் பயன்படுத்துவோம். ஆனால் கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் தற்போது நம்முடைய தகவல்களை, போட்டோக்களை மெமரி கார்டுகளுக்குப் பதிலாக ஆன்லைன் சர்வர்களில் இணையம் உதவியுடன் சேமிக்கிறோம். இது நம்முடைய டேட்டாக்களைச் சேகரித்து வைத்துகொள்ள மட்டும் பயன்படவில்லை.

நாம் முன்பெல்லாம் ஒரு அப்ளிகேஷனைப் பயன்படுத்த வேண்டுமென்றால் அதனை இண்டர்நெட்டில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவோம். ஆனால் தற்போது இணையதளச் செயலிகள் வந்துவிட்டன. அதாவது நீங்கள் எந்தவிதக் கோப்புகளையும் தரவிறக்கம் செய்யாமல், அந்த ஒரு அப்ளிகேஷனை இணையத்தில் நேரடியாக உங்களால் உபயோகிக்க முடியும். உதாரணத்திற்கு, ஆன்லைனில் ரெஸ்யூம் தயாரிப்பது, வீடியோ மற்றும் போட்டோக்களை எடிட்டிங் செய்வது ஆகியவற்றைச் சொல்லலாம். இதற்காகவும் இந்தக் கிளவுட் டெக்னாலஜி அதிகளவில் பயன்படுகிறது.

* ஐ.டி.துறை

இந்தக் கிளவுட் தொழில்நுட்பம் ஐ.டி. துறையில்தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஐ.டி. நிறுவனங்கள் தங்களது அலுவலகம் சார்ந்த தகவல்களை, சேமிக்க, பராமரிக்க, நிர்வகிக்க அலுவலகக் கணினிகளைவிட, கிளவுட் கம்ப்யூட்டிங் முறைகளையே அதிகம் நம்புகிறார்கள். இவை ரொம்பவும் பாதுகாப்பானது. அதேபோல, எங்கிருந்தும் உபயோகிக்கக்கூடியது. குறிப்பாக, அலுவலகக் கணினியோ அல்லது உங்களது தனிப்பட்ட லேப்டாப்போ செயலிழந்துவிட் டால், அதிலிருக்கும் தகவல் குறித்து கவலைப்பட வேண்டாம். ஏனெனில், கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்கக்கூடியதாக இருந்தால் அதில் சேமிக்கப்பட்ட எல்லாமே ஆன்லைன் சர்வரில், பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டிருக்கும். அதை நீங்கள், எந்த இடத்தில் இருந்தும் திரும்ப பெற்றுக்கொள்ள முடியும்.

* வகைகள்

இந்தக் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்தில் நிறைய வகைகள் இருக்கின்றன. குறிப்பாக, பப்ளிக் கிளவுட் (public cloud), பிரைவேட் கிளவுட் (private cloud), ஹைபிரிட் கிளவுட் (hybrid cloud) மற்றும் கம்யூனிட்டி கிளவுட் (community cloud)... என நான்கு வகையான கிளவுட் கம்யூட்டிங் சிஸ்டம் இருக்கிறது. அவை ஒவ்வொன்றும், ஒவ்வொருவருக்கு ஏற்றதாக இருக்கும்.

* பப்ளிக் கிளவுட்

இது பொதுவானது. அனைவரும் அவர்களுடைய தகவல்களைப் பதிவு செய்யலாம். பயன்படுத்தலாம். எடுத்துகாட்டாக, கூகுள் டிரைவ்-வை கூறலாம். அதில் நீங்கள் 15 ஜி.பி. வரை உங்களுடைய போட்டோ, வீடியோ மற்றும் இதர தகவல்களைச் சேமித்து வைக்க முடியும். உங்களது ஸ்மார்ட்போன், கணினி தவிர இணைய வசதி இருக்கும் எல்லா இடங்களிலும், உங்களது கணக்கைக் கொண்டு, அந்தத் தகவல்களை உபயோகிக்க முடியும்.

* பிரைவேட் கிளவுட்

தனிநபர் கிளவுட்டானது ஒரு தனிபட்ட நிறுவனத்திற்காக உருவாக்கப்பட்டது. இதனை அந்த ஒரு நிறுவனமும், நிறுவனம் சார்ந்த ஊழியர்களும் மட்டும்தான் பயன்படுத்த முடியும். இது மிகவும் பாதுகாப்பானது. பயனர்களின் தரவுகள் பாதுகாப்பாக இருக்கும். இதைப் பயன்படுத்த இணைய வசதி தேவையில்லை. எடுத்துகாட்டாக, அரசின் தகவல் களஞ்சியங்களை சொல்லலாம்.

* ஹைபிரீட் கிளவுட்

பொது மற்றும் தனிநபர் கிளவுட் இவை இரண்டுமே சேர்ந்ததுதான் இந்த ஹைபிரீட் கிளவுட் முறை (HYBRID CLOUD). இதனை சாதாரண பயனாளர்களும் பயன்படுத்துவார்கள். ஒரு தனிபட்ட நிறுவனமும் இதனை பயன்படுத்தும். எடுத்துக்காட்டு: வங்கிகளின் இணையதளங்கள்

* கம்யூனிட்டி கிளவுட்

இந்த முறையில் இரண்டுக்கும் மேற்பட்ட கிளவுட் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடியும். அதாவது சாதாரண மக்களும் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களும் சேர்ந்து நடத்தக்கூடிய அல்லது இயக்கக்கூடிய அப்ளிகேஷன்கள் இதில்தான் இயங்குகின்றன. ஆன்லைனில் விளையாடப்படும் கேம்கள் இந்த வகையில்தான் வரும்.

இப்படி டிஜிட்டல் உலகில் கொஞ்சம் கொஞ்சமாக ஆதிக்கம் செலுத்த தொடங்கி, இப்போது நிகரில்லா ஆட்சியையே நடத்திக்கொண்டிருக்கிறது, இந்த கிளவுட் கம்ப்யூட்டிங். இனி வரும் காலங்களில், எல்லாமே கிளவுட் கம்ப்யூட்டிங் மயமாகவே இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

1 More update

Next Story