கன்னடத்தில் உருவாகும் மற்றுமொரு 'கே.ஜி.எப்.'


கன்னடத்தில் உருவாகும் மற்றுமொரு கே.ஜி.எப்.
x

‘கே.ஜி.எப்.’ படத்தைப் போலவே, இந்தப் படமும், இந்திய சினிமா உலகை ஒரு கலக்கு கலக்கும் என்கிறது, ‘கப்ஜா’ படக்குழு.

இந்திய சினிமா என்றாலே ஒரு காலத்தில் இந்தி படங்கள்தான் என்ற நிலை இருந்தது. அந்த நிலை தற்போது மாறியிருக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தரமான திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

அந்த வகையில் தெலுங்கு மொழி திரைப்படங்களையும், அங்குள்ள நடிகர்கள், இயக்குனர்களையும், இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் கொண்டு சென்ற பெருமை, 'பாகுபலி', 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படங்களுக்கு உண்டு.

பெருமளவில் இந்திய மக்களை ஈர்க்காத கன்னடத்தில் இருந்து கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த 'கே.ஜி.எப்' திரைப்படம், இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. ரூ.80 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் பாக்ஸ் ஆபீசில் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதனால் 'கே.ஜி.எப்.' படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான 'கே.ஜி.எப்.-2' இந்திய சினிமா உலகையே புரட்டி போட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

கே.ஜி.எப். படத்தை இயக்கிய பிரசாந்த் நீல், முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த பாகத்தை கொஞ்சம் அதிகப் பொருட்செலவில் எடுக்க முடிவு செய்தார். அதோடு, கதாநாயகன் யாஷ், அலட்டிக்கொள்ளாத நடிப்பு மக்களை கவர்ந்திருந்த காரணத்தால், 'கே.ஜி.எப்.' 2-ம் பாகத்தில் அவருக்கு இணையான வில்லன் பாத்திரமும் உருவாக்கப்பட்டிருந்தது.

ரூ.100 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், இந்தியா முழுவதும் சுமார் ரூ.1,300 கோடிக்கும் மேல் வசூலித்து பரப்பரப்பை ஏற்படுத்தியது. அதுவரை ரூ.500 கோடி வரையே வசூல் செய்திருந்த இந்தி சினிமா வட்டாரத்தை, இந்த மிகப்பெரிய வசூல் சாதனை ஆட்டம் காண வைத்து விட்டது.

இந்த நிலையில் தற்போது, கன்னட சினிமாவில் இருந்து கே.ஜி.எப். பாணியில் மற்றுமொரு திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. கன்னடத்தில் 2008-ம் ஆண்டு 'தாஜ்மகால்' என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர், ஆர்.சந்துரு. இவர் கன்னடத்தில் இதுவரை 10 படங்களை இயக்கியிருக்கிறார். அதில் கன்னடத்தில் முன்னணி நடிகரான உபேந்திராவை வைத்து, 'பிரம்மா', 'ஐ லவ் யூ' ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இவர் தற்போது உபேந்திரா மற்றும் கன்னடத்தின் சூப்பர் ஸ்டாரான கிச்சா சுதீப் ஆகியோரை வைத்து, 'கப்ஜா' என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் படம் இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தை ஒட்டி நடைபெறும் கதைக்களத்தைக் கொண்டதாக உருவாக்கப்பட்டு வருகிறது.

சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியாவில் குற்றச் சம்பவங்களை செய்து நிழல் உலகத் தாதாக்களாக மாறியவர்களைப் பற்றியதாகவும், அவர்கள் எப்படி தாதாக்களாக தங்களை மாற்றிக்கொண்டார்கள் என்பதைப் பற்றியதாகவும் இந்தப் படம் உருவாவதாக இயக்குனர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசர் வெளியான 2 நாட்களிலேயே சுமார் 2 கோடி பார்வைகளைக் கடந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்தப் படத்தின் டீசர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்துள்ளதாக தெரிகிறது.

இந்தப் படத்தில் கன்னட நடிகர்களான உபேந்திரா, சுதீப் தவிர்த்து, இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய், தமிழ் சினிமா நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி ஆகியோரும், ஸ்ரேயா மற்றும் காஜல் அகர்வால் ஆகிய நாயகிகளும் நடிக்கிறார்கள். கன்னடம் தவிர, தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் இந்தப் படத்தை வெளியிட இருக்கிறார்கள். 'கே.ஜி.எப்.' படத்தைப் போலவே, இந்தப் படமும், இந்திய சினிமா உலகை ஒரு கலக்கு கலக்கும் என்கிறது, 'கப்ஜா' படக்குழு. அதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

1 More update

Next Story