சமையல் கியாஸ் விலையேற்றம் நவீன விறகு அடுப்புக்கு மாறும் இல்லத்தரசிகள்


சமையல் கியாஸ் விலையேற்றம் நவீன விறகு அடுப்புக்கு மாறும் இல்லத்தரசிகள்
x

ரத்தக்கண்ணீரை வரவழைக்கும் சமையல் கியாஸ் விலையேற்றத்தால் இல்லத்தரசிகள் சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்பாட்டில் இருந்து நவீன விறகு அடுப்புக்கு மாறிவருகின்றனர்.

ர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினசரியும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மாதம் ஒருமுறை அல்லது 2 முறையும் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் ரூ.569.50-க்கு விற்பனை செய்யப்பட்ட 14.2 கிலோ கொண்ட வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.810-ஐ எட்டியது. பின்னர் இது இந்த ஆண்டு மே மாதத்தில் ஆயிரம் ரூபாயை கடந்து ஆயிரத்து 18 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மேலும் உயர்ந்து கடந்த ஜூலை மாதம் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ஆயிரத்து 68 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போதுவரை இந்த விலையில் ஏற்ற இறக்கமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோன்று 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் ஆயிரத்து 144 ரூபாய் 50 காசுகளாக இருந்தது. படிப்படியாக விலை உயர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆயிரத்து 654 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் இது 2 ஆயிரம் ரூபாயை கடந்து 2 ஆயிரத்து 133 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

ரத்தக்கண்ணீரை வரவழைக்கிறது

அதைத் தொடர்ந்து உச்சகட்டமாக கடந்த மே 1-ந் தேதி வணிக பயன்பாட்டு சமையல் கியாஸ் சிலிண்டர், 2 ஆயிரத்து 508 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த செப்டம்பர் மாதத்தில் 2 ஆயிரத்து 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அது கடந்த 1-ந் தேதி மேலும் ரூ.36 குறைந்து 2 ஆயிரத்து 9 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எனினும் ஐநூற்று சொச்சம் ரூபாய்க்கு வீட்டு உபயோகத்துக்கான சமையல் கியாஸ் சிலிண்டரை வாங்கி வந்த இல்லத்தரசிகளுக்கும், ஆயிரம் ரூபாய்க்குள் வணிக பயன்பாட்டு சமையல் கியாஸ் சிலிண்டரை வாங்கி வந்த வணிகர்களுக்கும் தற்போதைய விலையேற்றமானது கண்களில் ரத்தக்கண்ணீரை வரவழைக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். கொரோனா தொற்று காலத்தில் போதுமான வருமானம் இன்றி தவித்த மக்களை இந்த சமையல் கியாஸ் விலை ஏற்றம் விழிபிதுங்கச் செய்தது.

எனவே, இந்த சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாற்றாக ஒரு பொருள் கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு, மின்சார உதவியுடன் இயங்கும் நவீன விறகு அடுப்பு ஒரு வரப்பிரசாதமாகவே மாறியுள்ளது. இல்லத்தரசிகள் சமையல் கியாஸ் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளும் வகையில் படிப்படியாக இந்த நவீன விறகு அடுப்புக்கு மாறிவருகின்றனர்.

நவீன விறகு அடுப்பு கண்டுபிடிப்பு

இதுகுறித்து சென்னை அடையாறைச் சேர்ந்த நவீன விறகு அடுப்பு விற்பனை நிறுவன உரிமையாளர் ராஜேந்திரன் கூறியதாவது:-

கொரோனா தொற்றுக்கு முன்பே சமையல் கியாஸ் சிலிண்டர் விலையேற்றம் காரணமாக நவீன விறகு அடுப்பு கண்டுபிடிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், கொரோனா தொற்றால் கடந்த 2 வருடங்களாக இதன் விற்பனை முடங்கியது. மேலும், இந்த நவீன விறகு அடுப்பு குறித்து பெரும்பாலான மக்களுக்கு தெரியவில்லை. ஒரு வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டரில் சமைக்கப்படும் உணவை இந்த அடுப்பில் 200 ரூபாய் விலையிலான விறகில் சமைத்துவிட முடியும்.

விறகு, வறட்டி, கொட்டாங்குச்சி, முந்திரி தோல் போன்ற முற்றிலும் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி இந்த நவீன விறகு அடுப்பை எரிக்கலாம்.

ரூ.5 ஆயிரம் முதல் 1½ லட்சம் வரை

இந்த அடுப்பில் ஊதுகுழல் மூலம் அனுப்பப்படும் காற்றை, மின்சார உதவியுடன் 'புளோயர்' மூலம் ஒரே சீராக செலுத்தி விறகை முற்றிலும் எரியவைக்கிறோம். இதனால், நெருப்பு முழுமையாக கிடைப்பதுடன், புகையும் அதிகம் வருவது இல்லை. இதனால், சமையல் கியாஸ் அடுப்புக்கு மாற்றாக பலரும் இந்த நவீன விறகு அடுப்புக்கு மாறி வருகின்றனர். ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், மெஸ், பேக்கரி போன்றவற்றிலும் தற்போது இந்த அடுப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சமைக்கும் அளவுக்கு ஏற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரையிலான விலையில் இந்த அடுப்புகள் கிடைக்கின்றன.

ஓட்டல்களுக்கு தேவையான பெரிய அளவிலான அடுப்புகளும் 1½ லட்சம் ரூபாய் வரை விற்பனைக்கு தயாராக உள்ளன.

இந்த நவீன விறகு அடுப்புகளில் இதுவரை எந்தவிதமான குறைபாடுகளும் ஏற்படவில்லை. இந்த அடுப்புகளுக்கு குறைந்தபட்சம் 10 வாட்சில் இருந்து அதிகபட்சமாக 40 வாட்ஸ் குண்டு பல்புக்கு ஆகும் மின்சாரமே செலவாகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


பாதியாக குறைந்த சமையல் செலவு-நேரம்

நவீன விறகு அடுப்பை பயன்படுத்தும் சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் சுப்பிரமணியம் கூறியதாவது:-

நான் பிரியாணி கடை நடத்தி வருகிறேன். எனக்கு வாரத்துக்கு ஒரு வணிக பயன்பாடு கியாஸ் சிலிண்டர் தேவைப்படுகிறது. இதனால், சமையல் கியாசுக்கு மட்டும் எனக்கு மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை செலவாகிவந்தது.

இந்த நிலையில், சமையல் கியாசுக்கு மாற்றாக நவீன விறகு அடுப்பு வந்துள்ளதை கேள்விப்பட்டு முதலில் ஒரு அடுப்பு வாங்கி உபயோகப்படுத்தி பார்த்தேன். அது பயன்படுத்த எளிதாகவும், சமையல் கியாசுடன் ஒப்பிடும்போது பாதி செலவே ஆகக்கூடியதாகவும் இருந்தது.

எனவே, உடனடியாக 2-வது அடுப்பையும் வாங்கிவிட்டேன். இந்த அடுப்பில் பயன்படுத்தும் பாத்திரங்களில் லேசாக கரி பிடித்தாலும், எளிதில் கழுவிவிட முடிகிறது. சமைக்கும் நேரமும் பாதியாக குறைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


5-ல் ஒரு பங்கு செலவு

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த இல்லத்தரசி சரண்யா:-

சமையல் கியாஸ் சிலிண்டர் வாங்குவது, குடும்ப பட்ஜெட்டில் தவிர்க்கமுடியாத ஒரு பெரும் செலவாக இருந்து வந்தது. இதற்கு மாற்றுப்பொருள் கிடையாதா என்று ஏங்கிக் கொண்டிருந்தபோதுதான் நவீன விறகு அடுப்பைப் பற்றி அறிந்தேன். உடனே அதை வாங்கி சமைக்கத் தொடங்கினேன். இந்த அடுப்பில் புகை அவ்வளவாக வருவது இல்லை. எனவே கண் எரிச்சல் ஏற்படவில்லை.

இந்த அடுப்புக்கு ஒரு மாதத்துக்கு 200 ரூபாய்க்கு வாங்கும் விறகே போதுமானதாக உள்ளது. எனவே, எங்கள் வீட்டில் சமையல் செலவு 5-ல் ஒரு பங்காக குறைந்துள்ளது.

ராயப்பேட்டை பகுதியில் சிறிய அளவில் மெஸ் நடத்திவரும் எனது தாயாரும் தற்போது நவீன விறகு அடுப்புக்கு மாறிவிட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.


நவீன விறகு அடுப்புக்கான 'பில்லட்ஸ்'

நவீன விறகு அடுப்பில் பயன்படுத்தப்படும் மதிப்புக்கூட்டு பொருளான 'பில்லட்ஸ்' குறித்து அந்த அடுப்பு விற்பனை நிறுவன உரிமையாளர் ராஜேந்திரன் கூறிய தாவது:-

நம்மூரில் தற்போது நவீன விறகு அடுப்பில் பெரும்பாலும் விறகு கட்டைகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், வெளிநாடுகளில் விறகை பயன்படுத்துவது இல்லை. அதற்கு பதில் 'பில்லட்ஸ்'-ஐ பயன்படுத்துகிறார்கள். 'பில்லட்ஸ்' என்பது மரத்தூள், கரும்புச்சக்கை, மாட்டுச்சாணம், கருவேலமரம் போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு மதிப்புக்கூட்டு பொருள் ஆகும்.

நவீன தொழில்நுட்பத்தில் இந்த 'பில்லட்ஸ்' தயாரிக்கப்பட்டுள்ளதால், விறகு அடுப்பில் இவை முழுமையாக எரியும். இதனால், அதிக அளவில் புகை ஏற்படாமல் இருக்கிறது. ஒரு கிலோ விறகு பயன்படுத்தும் இடத்தில் 700 கிராம் 'பில்லட்ஸ்' பயன்படுத்தினாலே போதும். தற்போது ஒரு கிலோ பில்லட்ஸ் விலை ரூ.16-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் முழு அளவில் இந்த 'பில்லட்ஸ்' விற்பனைக்கு வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story