ரொனால்டோவின் கட்டுடல் ரகசியம்


ரொனால்டோவின் கட்டுடல் ரகசியம்
x

கால்பந்து வீரர்கள், ரசிகர்களின் அபிமான வீரர்களின் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு தனி இடம் உண்டு. கட்டுடல் அழகை பராமரிப்பதற்கு அவர் பின்பற்றும் விஷயங்கள் பற்றி பார்ப்போம்.

பலரும் அவரை ரோல்மாடலாக கொண்டிருக்கிறார்கள். ரொனால்டோவின் கட்டுக்கோப்பான உடல் தோற்றமும் அதற்கு காரணம். உடற்பயிற்சி, உணவு பழக்கம் இரண்டிலும் தீவிர கவனம் செலுத்துபவர் கட்டுடல் ஆணழகனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். வருகிற பிப்ரவரி மாதம் 5-ந் தேதி 38 வயதில் அடியெடுத்து வைக்கிறார். ஆனால் வயது வெளிப்படாத அளவிற்கு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுக்கல் அணிக்கு விளையாடி வரும் அவர், பயிற்சி மேற்கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் டிரெண்டிங் ஆகி இருக்கிறது. கட்டுடல் அழகை பராமரிப்பதற்கு அவர் பின்பற்றும் விஷயங்கள் பற்றி பார்ப்போம்.

* 15 ஆண்டுகளுக்கும் மேலாக மது உள்ளிட்ட எந்தவொரு கெட்ட பழக்கவழக்கமும் இல்லாமல் உணவு மற்றும் உடற்பயிற்சிகளை முறையாக கடைப்பிடிக்கிறார்.

* ரொனால்டோவின் ஒழுக்கமான வாழ்க்கை முறை அவரைக் கால்பந்து விளையாட்டின் முடிசூடா மன்னனாக அலங்கரிக்க வைத்துள்ளது.

* அதிக புரத உணவுகளை உட்கொள்வதும், ஆறு வேளையாக உணவை பிரித்து உட்கொள்வதும்தான் அவரது 'பிட்னஸ்' ரகசியமாக இருக்கிறது. ''நான் முழு தானியங்கள் அடங்கிய கார்போஹைட்ரேட்டுகள், பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் அதிக புரத உணவுகளை சாப்பிடுகிறேன். சர்க்கரை உணவுகளை தவிர்க்கிறேன்'' என்கிறார்.

* மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றுகிறார். பன்றி இறைச்சி, பாலாடைக்கட்டி, குறைந்தகொழுப்புள்ள தயிர், அவகொடா உள்ளிட்ட பழங்கள் அவரது காலை உணவின் விருப்ப தேர்வாக அமைந்திருக்கிறது.

* உணவகங்களுக்கு சென்றால் மாமிச உணவுகள் மற்றும் சாலட்டுகளை விரும்பி சாப்பிடுகிறார். கோழி இறைச்சியும் அவரது விருப்ப உணவாக இருக்கிறது. அதிக அளவில் புரதமும், குறைந்த அளவு கொழுப்பும் கொண்டிருப்பதால் கோழி இறைச்சியை 'மாயாஜால உணவு' என்று குறிப்பிடுகிறார்.

* ``ரொனால்டோ பொறுப்பான விளையாட்டு வீரராக அனைத்து வகையான உணவுகளையும் சாப்பிடுவார், ஆனால் அவர் மிகவும் விரும்புவது கில்ட்-ஹெட் ப்ரீம், வாள்மீன் மற்றும் கடல் பாஸ் போன்ற மீன்களை தான்'' என்பது போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் சமையல்கலை நிபுணரின் கருத்தாக இருக்கிறது.

* ``நான் ஒவ்வொரு நாளும் 100 சதவீதம் ஒழுக்கமாக இல்லை. சில நேரங்களில் என் மகனுடன் பீட்சா சாப்பிடுவேன். ஏனென்றால் இவை இல்லை என்றால், சலிப்படைந்து விடுவேன்'' என்கிறார். சாண்ட்விச்சும் விரும்பி சாப்பிடுகிறார்.

* உணவுபழக்கத்தை போலவே உடற்பயிற்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். ரொனால்டோ சில கூடுதல் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதற்காக நவீன 'ஹோம் ஜிம்மை' வீட்டில் கட்டமைத்திருக்கிறார். தனது உடல் வடிவம் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்துகிறார். அதனை மையப்படுத்தியே தனது உடற்பயிற்சிகளை திட்டமிடுகிறார்.

* எந்தவொரு உடற்பயிற்சி செய்வதாக இருந்தாலும் அதற்கு முன்பாக 'வார்ம் அப்' செய்வது அவசியம். அது காயத்தில் இருந்து காக்கும் என்றும் சொல்கிறார்.


Next Story