'ஹூலா ஹூப்' இளம் சாதனையாளர்


ஹூலா ஹூப் இளம் சாதனையாளர்
x

வட்ட வடிவ வளையத்தை உடலுக்குள் நுழைத்து இடுப்பை வளைந்து ஆடும் ஹூலா ஹூப் விளையாட்டை பலரும் உடற்பயிற்சி சார்ந்தும், பொழுது போக்கு நோக்கத்துடனும் மேற்கொள்வார்கள்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசிக்கும் சிறுமி தீக்ஷிதா சுப்பிரமணி 'ஹூலா ஹூப்' விளையாட்டில் ஏராளமான உலக சாதனைகளை நிகழ்த்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திருக்கிறார்.

இத்தனைக்கும் தீக்ஷிதாவுக்கு 11 வயதுதான் ஆகிறது. 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் ஒரு நிமிடத்தில் ஹூலா ஹூப்பை தனது காலில் 207 முறை சுழற்றி கின்னஸ் சாதனை படைத்தார். 2021-ம் ஆண்டு முழங்கால்களைச் சுற்றி அதிக முறை ஹூலா ஹூப் சுழற்சி செய்ததாக மற்றொரு கின்னஸ் சாதனை படைத்தார்.

ஜிம்னாஸ்டிக்ஸ் ஆர்வலரான இவர், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் பியூச்சர் கலாமின் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் போன்றவற்றிலும் இடம் பிடித்துள்ளார். கொரோனா காலகட்டம்தான் இத்தகைய சாதனை அங்கீகாரங்களை பெறுவதற்கு அடித் தளம் அமைத்து கொடுத்திருக்கிறது.

யூடியூப் வீடியோக்களை பார்த்து அவற்றின் உதவியுடனேயே பயிற்சி செய்ய தொடங்கி இருக்கிறார். கொரோனா முதல் அலையின்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது ஆன்லைன் வழியாக ஹூலா ஹூப் வகுப்புகளில் பங்கேற்றிருக்கிறார்.

"ஹூலா ஹூப் விளை யாட்டில் கின்னஸ் உலக சாதனை படைப்பது சவாலானது. நானும் எனது பயிற்சியாளர் விஜயலட்சுமியும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் உள்ள பல்வேறு பதிவுகளை ஆராய்ந்து, எனது திறமைக்கு ஏற்ற பிரிவை தேர்ந்தெடுத்தோம். பின்பு 'ஸ்டாப்வாட்ச்'களுடன் அதிவேகமாக செய்வதற்கு பயிற்சி பெற்றேன். அதிக சுழற்சி எண்ணிக்கையை இலக்காக நிர்ணயித்து செயல்பட்டேன். தொழில்முறை புகைப்படக் கலைஞர்களைப் பயன்படுத்தி நான் மேற்கொண்ட பயிற்சிகளை பல கோணங்களில் வீடியோவாக பதிவுசெய்து, ஆவணங்களுடன் கின்னஸ் இணையதளத்தில் பதிவேற்றினோம். கின்னஸ் குழுவினர் ஆதாரங்களை ஆய்வு செய்து எனது முயற்சிக்கு ஒப்புதல் அளித்தனர்'' என்கிறார்.

இந்தியாவில், ஹூலா ஹூப் விளையாட்டு இன்னும் வழக்கத்திற்கு மாறான செயலாகவே பார்க்கப்படுகிறது என்று வேதனையோடு சொல்கிறார், தீக்‌ஷிதாவின் தந்தை சுப்பிரமணி.

"கேரளாவில் சிறிய இடத்தில் வசிக்கும் நாங்கள் நல்ல பயிற்சியாளரைக் கண்டுபிடிக்க மிகவும் போராடினோம். எங்கள் பகுதியில் ஹூலா ஹூப்பைப் பற்றி பேசினால், பலருக்கும் அது என்னவென்று தெரியாது. இருப்பினும், தீக்ஷிதாவின் ஆர்வத்தை பார்த்து அவளை ஊக்கப்படுத்தினோம். அவளுக்காக எல்லா அளவுகளிலும் வளையங்களை வாங்கினோம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவளிடம் ஓரிரு வளையங்கள்தான் இருந்தது. இப்போது வெவ்வேறு அளவுகள் மற்றும் எடைகள் கொண்ட 18 வளையங்கள் உள்ளன. ஒலிம்பிக்கில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்'' என்கிறார்.

1 More update

Next Story