காணாமல் போன ஊர்கள்


காணாமல் போன ஊர்கள்
x

ஏரி, குளங்கள், கடல் காணாமல் போவது போல் சில சமயங்களில் ஊரே காணாமல் போவது உண்டு.

காலச் சக்கரத்தின் சுழற்சியில் எதுவுமே நிரந்தரம் கிடையாது. நேற்று இருந்தது இன்று இல்லை; இன்று இருப்பது நாளை இல்லாமல் போகலாம். நாளை வேறொன்று புதிதாக உருவாகலாம். இயற்கையின் திருவிளையாடல்களில் எல்லாமே சாத்தியம்.

அப்படி இயற்கை நிகழ்த்திய அதிசயங்களில், இந்தியாவில் மாயமான 5 ஊர்களைப் பற்றி பார்க்கலாம்....

* தமிழ்நாட்டின் தென்கிழக்கு முனையில் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடைக்கோடியில் இலங்கைக்கு அருகே அமைந்திருக்கும் தனுஷ்கோடி ஒரு காலத்தில் சிறந்து விளங்கிய ஊர் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர புயல்-மழையில் தனுஷ்கோடி அழிந்து நாசமானது. இதனால், அது மனிதர்கள் வாழ தகுதியற்ற ஊர் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. புயலில் அழிந்த தேவாலயத்தின் சிதிலம் உள்ளிட்ட சில அடையாளங்களை மட்டும் இப்போது அங்கு காண முடியும். அதைக்காண தற்போது அங்கு மக்கள் சுற்றுலா சென்று வருகிறார்கள்.

* குஜராத் மாநிலத்தில் கட்ச் வளைகுடாவின் வடகிழக்கு முனையில் இருந்த லக்பத் நகரம் ஒரு காலத்தில் சிறந்த துறைமுக நகரமாக விளங்கியது. இப்போது அந்த நகரம் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதற்கு காரணம் என்ன?

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1819-ம் ஆண்டு அந்த பகுதியில் பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அந்த வழியாக பாய்ந்த சிந்து நதியின் திசை மாறியதால் லக்பத் நகரம் நீரின்றி வறண்டது. இதனால் மக்கள் படிப்படியாக ஊரை காலி செய்துவிட்டு ரான் சதுப்பு நில பகுதியை கடந்து பாகிஸ்தானுக்கு சென்று விட்டனர். எனவே, லக்பத் தற்போது மயான பூமிபோல் காட்சி அளிக்கிறது. அந்த காலத்தில் கட்டப்பட்ட 7 கி.மீ. நீளமுள்ள பெரிய கோட்டை சுவரை இப்போதும் அங்கு காண முடியும்.

* இதேபோல் குஜராத்தில் முன்பு இருந்த சித்பூர் என்ற ஊரும் இப்போது இல்லை. இந்த சித்பூர், பரசுராமர் தனது தாயாருக்கு இறுதிச்சடங்கு நடத்திய இடம் என்று கூறப்படுகிறது. சபர்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த ஊரில் ஐரோப்பிய கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட ஏராளமான வீடுகள் இருந்தன. இங்கு தாவூத் போரா சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் வசித்தனர். என்ன காரணத்தினாலோ அவர்கள் ஊரை காலி செய்துவிட்டு வேறு இடங்களுக்கு சென்று விட்டனர். இப்போது அங்கு ஆண்டுக்கு ஒரு முறை விமரிசையாக நடக்கும் ஒட்டக திருவிழாவில் மட்டும் மக்கள் கூடுகிறார்கள்.

* ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் நகரில் இருந்து 20 கி.மீ. தொலைவுக்குள் இருந்த குல்தாரா என்ற ஊரையும் இப்போது காணவில்லை. அதற்கு ஒரு கதை சொல்கிறார்கள்.

ராஜஸ்தான் பகுதியை ஒரு காலத்தில் ஆண்டு வந்த சலிம் சிங் என்ற மன்னர், குல்தாரா கிராம தலைவரின் மகளை மணக்க விரும்பியதாகவும், அதற்கு கிராம தலைவரின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவிக்கவே, மன்னர் அந்த பெண்ணை தூக்கிச் சென்று திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஒன்றும் செய்ய முடியாமல் தவித்த கிராம மக்கள், ஊரை காலி செய்துவிட்டு வேறு இடங்களுக்கு சென்றுவிட்டனர். போகும் போது வேதனையில், ''இனி இந்த கிராமத்தில் யாருமே வசிக்கக்கூடாது'' என்று சாபமிட்டுவிட்டு சென்றதாகவும், இதனால்தான் அதன்பிறகு அந்த ஊரில் யாருமே குடியிருக்கவில்லை என்றும் பேசிக் கொள்கிறார்கள்.

இடிந்த நிலையில் கூரையின்றி காணப்படும் பழைய மண் வீடுகளை இப்போதும் அங்கு காணலாம்.

* வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், பசுமையான காடுகளுக்கு மத்தியில் ஒரு காலத்தில் சிறந்து விளங்கிய உனாகோட்டி என்ற ஊரும் தற்போது இல்லை. இந்த ஊரில் பழங்கால கோவில்களும், ஏராளமான சிற்பங்களும் இருந்தன. ஒரு காலகட்டத்தில் அந்த ஊரே மண்ணில் புதைந்து காணாமல் போய்விட்டது. சிவபெருமானின் சாபமே இதற்கு காரணம் என்று பேசிக்கொள்கிறார்கள்.


Next Story