திருமணத்திற்கு பிறகும் பெண்கள் கனவுகளை நனவாக்கலாம்


திருமணத்திற்கு பிறகும் பெண்கள் கனவுகளை நனவாக்கலாம்
x

திருமணமான எல்லா பெண்களுக்கும் பிரத்யேக கனவு, ஆசை, லட்சியம் இருக்கும். அதை நிறைவேற்றிக்கொள்ள, வயதும், குடும்ப சூழலும், மனைவி-அம்மா-மருமகள் போன்ற பொறுப்புகளும், தடையாக இருப்பதே இல்லை.

திருமணத்திற்கு முன்பு வரை, எல்லா பெண்களுக்கும் புதிதாக சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சமூகத்தில் தங்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்குவது, பொருளாதார ரீதியாக குடும்பத்தை தாங்கிப் பிடிப்பது... என்பது போன்ற பல கனவுகளும் இருக்கும். அதே ஆசைகளும், கனவுகளும் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்த பிறகு எல்லா பெண்களுக்கும் இருக்குமா...? என்றால் பெரிய கேள்விக் குறிதான். இருப்பினும் சில பெண்கள் மட்டும் திருமணத்திற்கு பிறகும் தங்களது ஆசைகளை, கனவுகளை துரத்திக்கொண்டிருக்கிறார்கள். ஏதாவது ஒருவழியில், தங்களை உயிர்ப்புடன் வைத்திருக்க முயற்சிக்கிறார்கள். அந்த பட்டியலில் பிரகாசமாய் ஜொலிக்கிறார், லட்சுமி சம்யுக்தா.

சென்னையை பூர்வீகமாக கொண்டிருக்கும் சம்யுக்தா, சட்டம் பயின்றவர். இருப்பினும், தன்னுடைய கணவரின் பணிச்சூழல் காரணமாக, சில ஆண்டுகள் இந்தியாவிலும், சில ஆண்டுகள் வெளிநாடுகளிலும் இடம் மாறிக்கொண்டே இருந்ததால், 'வழக்கறிஞர்' பொறுப்பில் முழுமையாக அங்கம் வகிக்கமுடியவில்லை. இருப்பினும், அவர் துவண்டுவிடவில்லை. தனக்குள் இருந்த பேஷன் ஆர்வத்தை வளர்த்தெடுக்க ஆசைப்பட்டார். திருமணத்திற்கு பிறகு, ஒரு மனைவியாக, குழந்தைகளுக்கு தாயாக அவர் முன்னெடுத்த பேஷன் முயற்சிகள், இன்று அவரை சர்வதேச திருமதி. இந்தியா அழகிப் போட்டிகள் வரை அழைத்துச் சென்றிருக்கிறது. கலந்துகொண்ட முதல் போட்டியிலேயே, 2-ம் இடம்பிடித்து அசத்தியிருக்கிறார். அதுபற்றி சம்யுக்தா பகிர்ந்து கொண்டவை இதோ...

* நீங்கள் பேஷன் துறைக்குள் நுழைந்தது எப்படி?

சட்டம் பயின்றிருந்தாலும், குடும்பச்சூழல் காரணமாக அதை தொடர முடியாத நிலையில், எனக்கான அடையாளத்தை உருவாக்க ஆசைப்பட்டேன். 2019-ம் ஆண்டுகளில் இந்தியாவில், தமிழ்நாட்டில் தங்கியிருக்கக்கூடிய சூழல் உருவானதை தொடர்ந்து அந்த காலகட்டத்தில், நிறைய பகுதி நேர படிப்புகளை பயின்றேன். அக்குபஞ்சர், யோகா, அழகுகலை, பேஷன் டிசைனிங்... இப்படியாக நிறைய கற்றுக்கொண்டேன். கொரோனா ஊரடங்கு காலங்களில் இவை நன்கு கை கொடுத்தன. குடும்ப தேவைகளை, என்னாலும் பூர்த்தி செய்ய முடிந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன்.

* திருமதி. இந்தியா அழகிப் போட்டியில் கலந்துகொண்டது எப்படி?

அது மிகவும் எதிர்பாராத நிகழ்வு. இப்போது நான், என் கணவர் மற்றும் குழந்தைகளுடன் பக்ரைன் நாட்டில் இருக்கிறேன். இங்கு, எனக்கு தெரிந்த கலைகளை பயிற்றுவித்து, அதை சமூக வலைத்தளங்களில் பகிர்வது வழக்கம். அதன் வாயிலாகவே, மிஸ் இந்தியா மற்றும் திருமதி. இந்தியா போட்டிகளை ஒருங்கிணைக்கும் மைல்ஸ்டோன் என்ற அமைப்பிடமிருந்து, திருமணமான பெண்களுக்கு நடத்தப்படும் திருமதி. இந்தியா போட்டியில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது. இது சர்வதேச அளவில் நடக்கும் போட்டி. உலகளவில் செட்டிலாகி இருக்கும் இந்திய பெண்களை ஒருங்கிணைக்கும் போட்டி என்பதால், நானும் பங்கேற்றேன்.

* அழகிப்போட்டியில் இதற்கு முன்பு கலந்துகொண்டது உண்டா?

இல்லை. இதுதான் நான் கலந்துகொண்ட முதல் அழகிப்போட்டி. நான் பேஷன் சம்பந்தமான பல பயிற்சிகளை பெற்றிருந்ததால், இதில் பங்கேற்கும் தைரியமும், என்னை நானே தயாரித்துக் கொள்ளும் மனப்பக்குவமும் கிடைத்தது.

* அழகிப்போட்டியில் என்னென்ன சுற்றுகள் இருந்தன?

பாரம்பரியத்தை பறைசாற்றும் 'டிரெடிஷ்னல்' சுற்று, நம்முடைய தனித்திறமைகளை வெளிக்காட்டும் 'டாலன்ட்' சுற்று, உடல்மொழி மற்றும் உடல் தோற்றத்தை மதிப்பிடும் பாடிகான் மற்றும் பிட்னஸ் சுற்றுகள் இறுதியாக நம்முடைய பொது அறிவை பரிசோதிக்கும் கேள்வி - பதில் சுற்றுக்கள்... என 5 விதமான சுற்றுக்களை கடந்திருக்கிறேன்.

* முதல் போட்டி அனுபவம் எப்படி இருந்தது? எப்படி தயாரானீர்கள்?

எனக்கு அதிகம் பழக்கமில்லாத துறை என்றாலும், அதில் எப்படி பங்கேற்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்ற அடிப்படையை அறிந்திருந்தேன். அதற்காகவே, உடல் எடையை குறைத்து சிறப்பாக தயாராகினேன். பாரம்பரிய சுற்றில், நம் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பிரதிபலித்து, அழகிப்போட்டிக்கு என உடல்மொழிகள் பழகி, பொது அறிவு சுற்றுக்காக நிறைய தகவல்களையும் திரட்டி படித்தேன். அதனால்தான், அழகிப்பட்டம் வென்றவருக்கு கடும் போட்டியாக திகழ முடிந்தது. திருமதி. இந்தியா பட்டம் வென்றவருக்கும், எனக்கும் சிறு மதிப்பெண்கள்தான் வித்தியாசம். குறிப்பாக, பொது அறிவு சுற்றில், என்னை விட, அவர் அழுத்தமான கருத்தை முன்வைத்ததால்தான், 2-ம் இடம் பிடித்தேன். இல்லையேல், முதல் போட்டியிலேயே, அழகிப்பட்டம் வென்றிருப்பேன்.

* உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

அழகிப்போட்டிகளில் பங்கேற்பது என்பதை தாண்டி பேஷன் துறையில், எனக்கான அடையாளத்தை அழுத்தம் திருத்தமாக உருவாக்க நினைக்கிறேன். குறிப்பாக, 'பொட்டிக்' அமைத்து, பேஷன் கனவை நினைவாக்கிக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

* திருமணமான பெண்களால், அவர்களது கனவுகளுக்கு உயிர்கொடுக்க முடியுமா?

நிச்சயமாக முடியும். திருமணமாகாத அதேசமயம் திருமணமான எல்லா பெண்களுக்கும் பிரத்யேக கனவு, ஆசை, லட்சியம் இருக்கும். அதை நிறைவேற்றிக்கொள்ள, வயதும், குடும்ப சூழலும், மனைவி-அம்மா-மருமகள் போன்ற பொறுப்புகளும், தடையாக இருப்பதே இல்லை. திருமணமாகி விட்டது, குழந்தை பிறந்துவிட்டது, குழந்தைகள் நன்றாக வளர்ந்துவிட்டார்கள்... இப்படி உங்களை நீங்களே, ஒரு வட்டத்திற்குள் நிறுத்திக்கொள்ளாதீர்கள். அதேபோல, ஆசைப்பட்டதை கற்றுக்கொள்ளவும் தயங்காதீர்கள். உதாரணமாக என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். நான் படித்தது சட்டம். ஆனால் இப்போது என்னுடைய இலக்கு பேஷன் துறையாக இருக்கிறது. நமக்கு நன்கு தெரிந்ததோ அல்லது தெரியாததோ அதை நோக்கி செல்லுங்கள். அந்த பயணம், வெகுவிரைவாகவே வெற்றிப் பயணமாக மாறிவிடும்.

* உங்களுடைய லட்சியம் என்ன?

சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால், என்னுடைய அம்மாவின் தியாகங்களை நன்கு அறிவேன். என்னையும், என்னுடைய இரு சகோதரிகளையும் வளர்க்க அவர் மிகவும் சிரமப்பட்டார். துணையின்றி குழந்தைகளை வளர்க்க சிரமப்படும் தாய்மார்களுக்கு கல்வி ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் உதவும் ஆசைகளும் இருக்கிறது. அதற்கான முயற்சிகளில், நானும் என்னுடைய சகோதரிகளும் ஈடுபட்டிருக்கிறோம்.

1 More update

Next Story