ரத்தத்தை பிரித்து ஆராய்ந்தவர்..!

உடலில் செலுத்திய நிகழ்வுதான் மருத்துவ உலகின் மிகப் பெரிய மைல்கல்லைத் தொட்டவர் உயிரியல் அறிஞர், கார்ல் லாண்ட்ஸ் டெய்னர்
இதய மாற்று, மூளை மாற்று அறுவை சிகிச்சைகள் எல்லாம் சாத்தியமாகிவிட்ட இந்தக் காலத்தில் ரத்தத்தை ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு மாற்றுவதெல்லாம் மிகவும் எளிதான வேலையாகிவிட்டது. ஆனால், முதன் முதலில் மனித ரத்தத்தின் வகைகளைக் கண்டறிந்து அதை முறையாக அடுத்தவர் உடலில் செலுத்திய நிகழ்வுதான் மருத்துவ உலகின் மிகப் பெரிய மைல்கல்! அந்த மைல்கல்லைத் தொட்டவர் உயிரியல் அறிஞர், கார்ல் லாண்ட்ஸ் டெய்னர் (Karl Landsteiner).
ஆஸ்திரியா நாட்டுத் தலைநகர் வியன்னாவில் 1868-ம் ஆண்டு ஜூன் 14-ந் தேதி, லாண்ட்ஸ்டெய்னர் பிறந்தார். வியன்னா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து தேர்ந்தார். பின்னர், உயிரிவேதியியல் துறையில் ஆய்வுகள் மேற்கொண்டதால் வேதியியலையும் கற்றார். அதன் பிறகு வியன்னா பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.
1900-ம் ஆண்டில் லாண்ட்ஸ்டெய்னர், இரு வேறு மனிதர்களின் ரத்தத்தைக் கலக்கும்போது சில ரத்தங்கள் உறைவதையும், சில ரத்த வகைகள் உறையாமல் இருப்பதையும் கண்டு வியந்தார்! இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி அவரின் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது. அதைக் கண்டுபிடிப்பதற்காக சரிவர உணவு உறக்கமின்றி ஆய்வகமே கதி என ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார். அந்த ஆராய்ச்சியில், 'ஓ' பாசிட்டிவ், 'ஓ' நெகட்டிவ், 'பி' பாசிட்டிவ் என ரத்தத்தின் வகைகளைப் பிரித்து அடையாளம் காண உதவும் 'ஆர்.ஹெச் காரணி'யை (Rh Factor) அலெக்சாண்டர் எஸ்.வெய்னர் என்பவருடன் இணைந்து கண்டறிந்தார் லாண்ட்ஸ்டெய்னர்.
அதன்பின் ரத்த வகைகளின் அமைப்பையும் கண்டறிந்ததோடு மட்டுமல்லாமல், 'லாண்ட்ஸ்டெய்னர் விதிகள்' எனப்படும் ஒப்பற்ற இரு விதிகளை அளித்தார். இவருடைய இந்தக் கண்டுபிடிப்பே நியூயார்க்கில் நடத்தப்பட்ட முதல் வெற்றிகரமான குருதியேற்றத்திற்கு வழிகோலியது. இதற்காக கார்ல் லாண்ட்ஸ்டெய்னருக்கு 1930-ம் ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இது தவிர, நோய் உடற்கூறியல், திசுவியல், மற்றும் நோய் எதிர்ப்பியல் துறைகளுக்குப் பல்வேறு பங்களிப்புகளைச் செய்த கார்ல் லாண்ட்ஸ்டெய்னர், 1943-ம் ஆண்டு ஜூன் 26-ந் தேதி, தனது 75-வது வயதில் மரணமடைந்தார். நியூயார்க் நகரில் உள்ள தனது ஆய்வகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே மாரடைப்பு அவரைப் பலி கொண்டது.
இரு வேறு மனிதர்களின் ரத்தத்தைக் கலக்கும்போது சில ரத்தங்கள் உறைவதையும், சில ரத்த வகைகள் உறையாமல் இருப்பதையும் கண்டு வியந்தார்..!






