பறவையா? விமானமா? - இது மருந்து சுமக்கும் டிரோன்


பறவையா? விமானமா? - இது மருந்து சுமக்கும் டிரோன்
x

மருந்துகள் கொண்டு செல்வதற்கான இந்தியாவின் முதல் டிரோன் நிலையம் மேகாலயா ஜெங்கால் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது.

மலை பரப்புகள் முழுமையாக சூழ்ந்திருக்கும் மாநிலங்களில் மேகாலயா முதன்மையானது. மாநிலத்திலுள்ள 12 மாவட்டங்கள் மலையின் பிடியில் அமைந்திருக்கின்றன. அதனால் சாலை மார்க்கமாக அவசர பயணங்கள் மேற்கொள்வது சவாலானது. நகர் பகுதியில் இருந்து மலைப்பகுதியின் அடிவாரங்களில் அமைந்திருக்கும் கிராமப் பகுதிகளுக்கு மருந்துகளையோ, வேறு ஏதேனும் பொருட்களையோ கொண்டு செல்வது கடினமானப் பணியாகும்.

அந்த குறைபாட்டைகளையும் வகையில் டிரோன்கள் மூலம் மருந்து வினியோகம் மேற்கொள்ளும் பணியை அம்மாநில அரசு தொடங்கி உள்ளது. இதன் மூலம் மருந்து வினியோகத்தை டிரோன்கள் மூலம் மேற்கொள்ளும் முதல் மாநிலம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. அதற்கேற்ப மருந்துகள் கொண்டு செல்வதற்கான இந்தியாவின் முதல் டிரோன் நிலையம் ஜெங்கால் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது.

அங்கிருந்து மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள பெடல்டோபா ஆரம்ப சுகாதார மையத்துக்கு, டிரோன் மூலம் ஒன்றரை கிலோ மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த டிரோன் 36 நிமிடத்தில் மருந்துகளை ஒப்படைத்துவிட்டது. சாலை மார்க்கமாக அந்த ஆரம்ப சுகாதார மையத்தை சென்றடைவதற்கு இரண்டரை மணி நேரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, ''ஆளில்லா விமானம், சுகாதாரத்தை புரட்சிகரமாக்குகிறது. மேகாலயாவில் முதல் டிரோன் டெலிவரி மையம் மூலம் தொலைதூர பகுதிகளுக்கு மருந்துகளை வினியோகிப்பது சுகாதார சேவைகளை பலப்படுத்தும்'' என்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்த டிரோன் 4 கிலோ எடையுடன் பறக்கும் திறன் கொண்டது. 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பெரிய டிரோன்கள் மூலம் 25 கிலோ வரை மருந்துகளை டெலிவரி செய்வதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மருந்துகள் மட்டுமின்றி, விவசாயிகளுக்கு விதைகளை அனுப்பவும், விவசாய விளைபொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்லவும் சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்றும் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

மேகாலயா மாநில சுகாதாரத்துறை மந்திரி ஜேம்ஸ் பிகே சங்மா கூறுகையில், ''பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு மலைப் பாங்கான நிலப்பரப்பு இடையூறாக உள்ளது. தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு சில சேவைகள் சென்றடைவதை உறுதிசெய்வதற்கு இது போன்ற டிரோன்கள் முதன்மையாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்'' என்கிறார்.

தொலைதூரத்தில் இருந்து இந்த டிரோனை பார்க்கும்போது, விமானமா? இல்லை பறவையா? என்ற குழப்பம் பலருக்கு ஏற்பட்டது. அதன் பிறகுதான் முதன்முதலாக டிரோன்கள் மூலம் மருந்து வினியோகம் மேற்கொள்ளப்படும் விஷயம் தெரியவந்தது.


Next Story