சிறுத்தைப்புலி ஒரு சாதுவான மிருகம்; நாய்களால் உயிருக்கு ஆபத்து - வனவிலங்கு பாதுகாவலர்கள் கவலை!


சிறுத்தைப்புலி ஒரு சாதுவான மிருகம்; நாய்களால் உயிருக்கு ஆபத்து - வனவிலங்கு பாதுகாவலர்கள் கவலை!
x
தினத்தந்தி 18 Sep 2022 3:46 AM GMT (Updated: 18 Sep 2022 3:49 AM GMT)

நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைப்புலிகள் திட்டம் வெற்றிகரமாக அமையுமா என்று வனவிலங்கு பாதுகாவலர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியாவில் அழிந்து போன சிறுத்தைப்புலிகள் இனத்துக்கு புத்துயிரூட்டும் விதத்தில், நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைப்புலிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றை பிரதமர் மோடி மத்திய பிரதேச மாநிலத்தில் காட்டுக்குள் விட்டார்.

ஆனால் இந்த திட்டம் வெற்றிகரமாக அமையுமா என்று விலங்கு பாதுகாவலர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். புதிய சுற்றுப்புறச்சூழலில் சிறுத்தைப்புலிகள் வேட்டையாடி உட்கொள்ள உணவு, பிற வனவிலங்குகளுக்கு இரையாகாமால் தங்களை அவை காத்துக்கொள்ளும் திறன் மற்றும் இனப்பெருக்க முறை ஆகியவற்றில் பெரும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் நிறைந்திருபதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இந்தியாவின் முன்னணி விலங்கு பாதுகாவலர் வால்மிக் தாபர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

வனவிலங்குகளான ஹைனாக்கள்(கழுதைப்புலி), சிறுத்தைகள், காட்டு நாய்கள் போன்றவைகளால் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள ஆப்பிரிக்க சீட்ட இனமான சிறுத்தைப்புலிகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

புதிய சுற்றுப்புறச்சூழலில் சிறுத்தைப்புலிகள் என்ன சாப்பிடும் என்பது தெரியவில்லை. மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில், இடப்பற்றாக்குறை மற்றும் இரையை தேடுவதில் சிரமம் ஆகியவற்றை சிறுத்தைப்புலி எதிர்கொள்கிறது.

இந்த பகுதி பெரும்பாலும் சிறுத்தைப்புலியின் முக்கிய எதிரிகளான கழுதைப்புலிகள் மற்றும் இந்திய சிறுத்தைகளால் நிறைந்துள்ளது. ஆப்பிரிக்காவில், கழுதைப்புலிகள் சிறுத்தைப்புலிகளைத் துரத்திக் கொல்லும் திறன் பெற்றவை.

மேலும், இந்த பகுதியை சுற்றிலும் 150 கிராமங்கள் உள்ளன. அங்குள்ள நாய்கள் சிறுத்தைப்புலிகளை கொல்லும் வாய்ப்புள்ளது. ஏனெனில், சிறுத்தைப்புலிகள் அமைதியான விலங்குகள். அவை பெரும்பாலும் இந்த வனவிலங்குகளை எதிர்த்து சண்டையிடாதவை. இதனால் அவை பிற விலங்குகளுக்கு இரையாகிவிடுகின்றன.

உலகின் வேகமாக பாய்ந்து செல்லும் திறன்வாய்ந்த, வேகமாக ஓடக்கூடிய விலங்கினமாக சிறுத்தைகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் இருந்தாலும், புதிய சுற்றுப்புறச்சூழலில் அது சாத்தியமில்லை. செரெங்கேட்டி (தான்சானியாவின் தேசிய பூங்கா) போன்ற இடங்களில், பெரிய புல்வெளிகள் இருப்பதால் சிறுத்தைகள் ஓடிவிடும்.

ஆனால், குனோ தேசிய பூங்காவில், பெரும்பாலான வனப்பகுதியை புல்வெளியாக மாற்றாவிட்டால், வேகமாக ஓட சிறுத்தைகளால் முடியாது. மேலும் அவ்வப்போது அங்கு வரும் புலிகள் கூட இந்த சிறுத்தைப்புலிகளுக்கு எமனாக அமையலாம்.

இங்கு சிறுத்தைப்புலிகள் புள்ளிமான்களை தான் பெரும்பாலும் வேட்டையாட வேண்டும், ஆனால் அவை வனப்பகுதிக்குள் மறைந்து கொள்ள முடியும் சூழல் அதிகம். மேலும், இந்த மான்களுக்கு பெரிய கொம்புகள் இருப்பதால் சிறுத்தையை காயப்படுத்தலாம். மேலும் இந்த இன சிறுத்தைகளால் காயம் தாங்க முடியாது; பெரும்பாலும் ஆபத்தானது.

சிறுத்தைப்புலிகள் நீண்ட காலமாக அரச பரம்பரையினரின் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வந்த விலங்கு. அவை இதுவரை எந்தவொரு மனிதனையும் கொன்றதில்லை.சிறுத்தைப்புலிகள் அமைதியான விலங்குகள்.

சிறுத்தைப்புலிகள் இனப்பெருக்கத்தில் சிறப்பாக செயல்படாது. உலகில் சுமார் 6,500 முதல் 7,100 சிறுத்தைப்புலிகள் மட்டுமே உள்ளன. மேலும் அவற்றின் இறப்பு விகிதம் (குட்டி நிலையில் இறப்பு) 95 சதவீதம். இது அதிகமான விகிதமாகும்.

சிறுத்தைப்புலிகள் மீண்டும் இந்தியாவில் வளர்க்கப்படுவது ஒரு பெரிய பணி. இந்த விலங்குகளின் வாழ்க்கையை உறுதிப்படுத்த அவை 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story