அழகுக்கலை நிபுணராக அசத்தும் திருநங்கை


அழகுக்கலை நிபுணராக அசத்தும் திருநங்கை
x

அழகுக்கலை நிபுணராக அசத்தும் திருநங்கை தீபா பாஸ்கர் கங்குர்டே சொந்தமாக பியூட்டி பார்லர் ஆரம்பித்து மற்ற திருநங்கைகள் தொழில்முனைவோர்களாக மாறுவதற்கு புதிய தொழில் வாய்ப்புக்கு வழிகாட்டி இருக்கிறார்.

திருநங்கைகள் மீதான சமூகத்தின் பார்வை மாறத்தொடங்கி இருந்தாலும் அவர்கள் சமூகத்துடன் தங்களை ஒன்றிணைத்துக்கொள்ள பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. எத்தகைய நெருக்கடியான சூழலிலும் கல்வியைக் கைவிடாமல் தொடர்ந்து கற்பவர்கள் அதன் மூலம் சுயதொழில் வாய்ப்புகளைப் பெற்று சுய மரியாதையோடு தங்கள் வாழ்க்கையை நிலைநிறுத்திக்கொள்கிறார்கள்.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியை சேர்ந்த தீபா பாஸ்கர் கங்குர்டே என்ற திருநங்கை தனது குடும்பம் மற்றும் சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு பல்வேறு தடைகளை உடைத்தெறிந்து அழகுக் கலை நிபுணராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். சொந்தமாக பியூட்டி பார்லர் ஆரம்பித்து மற்ற திருநங்கைகள் தொழில்முனைவோர்களாக மாறுவதற்கு புதிய தொழில் வாய்ப்புக்கு வழிகாட்டி இருக்கிறார்.

தீபா பாஸ்கர் கங்குர்டேவின் இயற்பெயர் திலீப். ஆணாக பிறந்து வளர்ந்தவர் பருவ வயதை எட்டும்போது பெண்மை உணர்வுகளை வெளிப்படுத்த தொடங்கி இருக்கிறார். அதற்கு வீட்டிலும், பள்ளியிலும் எதிர்ப்பு எழவே, நடனம் வழியாக தனது உணர்வுகளுக்கு நிவாரணம் தேடி இருக்கிறார். அவரது நடன அசைவுகளை பார்த்து பலரும் கேலி, கிண்டல் செய்தபோதிலும் அதனை பொருட்படுத்தாமல் படிப்பை தொடர்ந்திருக்கிறார்.

''எங்கள் குடும்பம் விறகு விற்கும் தொழில் செய்தது. அதனால் சிறு வயது முதலே அந்த தொழில் எனக்கு பழகிவிட்டது. படிப்புக்கு இடையே நானும், எனது சகோதரனும் விறகு விற்பனையில் ஈடுபடுவோம். எனக்குள் பெண்மை உணர்வுகள் எட்டிப்பார்த்ததும் என் சுபாவம் மாறிப்போனது. நான் பேசும் விதத்தை பற்றி நண்பர்களும், ஆசிரியர்களும் கிண்டல் செய்வார்கள்.

நடனம்தான் எனக்கு வடிகாலாக அமைந்தது. பள்ளியில் நடக்கும் நடன நிகழ்ச்சிகளில் ஆர்வமாக பங்கேற்பேன். என் நடன அசைவுகளை பார்த்து கேலி, கிண்டல் செய்வது அதிகமானது. அதனால் சக மாணவர்களுடன் பேசுவதற்கு தயங்கினேன். அவர்களுடன் நட்பை தொடர விரும்பாமல் பெண்களுடன் பழக தொடங்கினேன். எனது செயல்பாடுகள் என் சகோதரனுக்கு பிடிக்கவில்லை. பெண் போன்ற சுபாவத்தை வெளிப்படுத்துவதற்கும், பெண்களுடன் வெளியே செல்வதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தான். அடிக்கவும் செய்தான். இருப்பினும் குடும்பத்தினர் என்னை ஒதுக்கிவைக்கவில்லை. அதுதான் எனக்கு கிடைத்த ஒரே ஆறுதல்'' என்கிறார்.

பெண்மை உணர்வுகள் மேலோங்கியதும் மற்ற பெண்களை போல் அலங்காரம் செய்யும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. தான் மேக்கப் செய்து கொள்வது சர்ச்சையாகி விடக்கூடாது என்ற எண்ணத்தில் அழகுக் கலை மீது கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். இதையடுத்து பியூட்டி பார்லர் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அதன் பிறகு அவரது சகோதரர் தொந்தரவு செய்வதை நிறுத்திக்கொண்டார்.

அங்கு அழகுக்கலை நுணுக்கங்களை கற்றுத்தேறியவர், தொழில் ரீதியாக தன்னை மேம்படுத்திக்கொள்ள மூன்று மாத கால அழகுக்கலை படிப்பில் சேர்ந்திருக்கிறார். அது தொழில்முறை அழகுக் கலை நிபுணர் என்ற அங்கீகாரத்தை பெறுவதற்கு வழிவகுத்திருக்கிறது. பியூட்டி பார்லரில் வேலை செய்தபோது மேக் அப் பற்றிய அடிப்படை விஷயங்களை மட்டுமே தெரிந்திருந்தவருக்கு இந்த படிப்பும், அதில் கற்றுக்கொண்ட விஷயங்களும் சுயமாக தொழில் தொடங்குவதற்கு தூண்டுகோலாக அமைந்திருக்கிறது. மத்திய அரசின் `ஜன் சிக்ஷான் சன்ஸ்தான்' திட்டமும் அதற்கு உதவி இருக்கிறது.

தீபா பாஸ்கர் கங்குர்தே என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு தன்னம்பிக்கையோடு செயல்பட தொடங்கி இருக்கிறார்.

"ஹேர் ஸ்பா, மணப்பெண் அலங்காரம் போன்றவற்றையும் கற்றுக்கொண்டேன். நாசிக்கில் என் வீட்டிற்கு அருகிலேயே சொந்தமாக பியூட்டி பார்லர் தொடங்கினேன். அதற்கு 'திவ்யா பார்லர்' என்று பெயர் வைத்தேன். அது நன்றாக செயல்படத் தொடங்கியது" என்கிறார்.

இப்போது தீபாவின் பார்லரில் இரண்டு பெண்கள் வேலை செய்கிறார்கள். அழகுக் கலை நிபுணராக மாறினாலும் நடனத்திற்கும் நேரம் ஒதுக்குகிறார். சொந்தமாக தொழில் செய்வது எனக்கு மிகப்பெரிய பலத்தையும், தைரியத்தையும் கொடுத்தது. எனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டேன். திருநங்கை சமூகத்தினரிடையேயும் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது" என்கிறார்.

தனது பியூட்டி பார்லரை விரிவுபடுத்தி திருநங்கைகளுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். நடிகர், நடிகைகளுடன் இணைந்து பணிபுரிய வேண்டும், அவர்களுக்கு மேக்கப் போட வேண்டும் என்பதும் தீபாவின் ஆசையாக இருக்கிறது.


Next Story