மரபணு மாற்றிய பயிர்களால் தேனீக்கள் குறையும் ஆபத்தா?

உலகிலுள்ள 500 கோடி எக்டேர் வேளாண் நிலங்களில், 17 கோடி எக்டேர் நிலங்களில் மட்டுமே மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பா உள்ளிட்ட கண்டங்களை சேர்ந்த நாடுகள் மரபணு மாற்றிய பயிர்களுக்கு தடை விதித்துள்ளன. இந்தியாவில் பயிரிடப்படும் பி.டி.பருத்தியை மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் குறிப்பிடலாம். 2002-ல் அறிமுகப்படுத்தப்பட்ட பி.டி. பருத்தி 95 சதவீத பருத்தி சந்தையை பிடித்துள்ளது. இதே போன்று மரபணு மாற்றப்பட்ட கடுகும் உள்ளது.
இந்த புதிய ரக கடுகில் விளைச்சல் அதிகம் (25 சதவீதம்) என்று ஆசைவார்த்தை சொல்லப்படுகிறது. பாரம்பரிய கடுகு விதைகள், சில ஒட்டு ரக கடுகு விதைகள், செம்மை கடுகு சாகுபடி போன்றவை மூலமும் அதிக விளைச்சல் கிடைப்பதாக வேளாண் விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் மரபணு மாற்றப்பட்ட கடுகு சுற்றுச்சூழலுக்கும், மனித ஆரோக்கியத்துக்கும், உழவர் வாழ்வாதாரத்துக்கும் கேடு விளைவிக்கும் என்றும், ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை உண்டாக்கும் எனவும் குற்றச்சாட்டுகள் உள்ளன..
மரபணு மாற்றப்பட்ட பயிர்களால் தேனீக்களும், தேனும் குறைந்து போகும் ஆபத்து இருப்பதாகவும் அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். ராஜஸ்தானில் உள்ள கடுகு வயல்களை ஒட்டிய பகுதிகளில்தான், நாட்டிலேயே அதிக தேன் எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மரபணு மாற்றப்பட்ட கடுகில் உயிரியல் பாதுகாப்பு பரிசோதனைகள், ஆபத்து மதிப்பீடு பரிசோதனைகள் போன்றவை நடத்தப்படவில்லை என்றும், முழுமையான பரிசோதனைகள் நடத்தப்படாத, வெளிப்படை தன்மையற்ற, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை குலைக்கக்கூடிய மரபணு மாற்றப்பட்ட கடுகு தேவையா? என்ற கருத்துக்களையும் சமூக ஆர்வலர்கள் முன்வைக்கிறார்கள்.






