பளபளக்கும் மறுசுழற்சி சேலைகள்...!


பளபளக்கும் மறுசுழற்சி சேலைகள்...!
x

பட்டுச் சேலை தெரியும். பருத்திச் சேலையும் ஓ.கே. வாழை நார் சேலை, தேங்காய் நார் சேலை, மூங்கில் நார் சேலை, சோற்றுக் கற்றாழை சேலை, அன்னாசி செடி சேலை, கோங்குரா சேலை... இப்படி புதுமையான சேலைகளை சென்னை அனகாபுத்தூருக்கு போனால் பார்க்கலாம்; வாங்கலாம்.

கழிவாகக் கருதி ஒதுக்கும் பொருட்களில் நார் எடுத்து... காய்கறி, பழங்கள், பட்டைகளில் வண்ணமெடுத்து உருவாக்கப்படும் இந்தச் சேலைகளை நெய்த சூடு ஆறுவதற்குள் உலகெங்கும் இருந்து வந்து அள்ளிச் சென்று விடுகிறார்கள்.

உடலை உறுத்தாத, மென்மையான, குளிர்ச்சி யான இந்தச் சேலைகளின் தயாரிப்பு நுட்பத்தை சுய உதவிக்குழுக்களுக்குக் கற்றுத்தந்து, பல நூறு பேருக்கு வாழ்க்கையையும், முடங்கிக் கிடந்த கைத்தறித் தொழிலுக்கு புத்துயிரும் அளித்திருக்கிறார் பாரம்பரிய நெசவாளியான சேகர்.

வாழைநாரில் கைவினைப் பொருட்கள் தயாரிப்போர் நிறைய உண்டு. ஆனால், அதில்இருந்து மிகவும் நுணுக்கமாக இழையைப் பிரித்தெடுத்து, வண்ணம் சேர்த்து, நெசவு செய்வது சவாலான வேலை. அதை சாதித்திருக்கிறார் சேகர். 'அனகாபுத்தூர் இயற்கை நார் நெசவு மற்றும் கைவினைப் பொருட்கள் உற்பத்திக் குழுமம்' என்ற அமைப்பைத் தொடங்கி 150 நெசவாளர்களை அதில் அங்கப்படுத்தியிருக்கிறார். அப்பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சியளித்து, நிரந்தர வேலைவாய்ப்பையும் உருவாக்கித் தந்திருக்கிறார்.

1500 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை நார்ச்சேலைகள் விலை போகின்றன. அனகாபுத்தூரில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வசிக்கிறார்கள். காலப்போக்கில் போதிய வருமானம், ஆதரவு கிடைக்காத காரணத்தால் பெரும்பாலான நெசவாளர்கள் வேறு தொழிலை நாடி விட்டார்கள். பாரம்பரியத் தொழிலை விட்டு விலக மனமில்லாமல் தவித்த சொற்ப நெசவாளர்களில் சேகரும் ஒருவர்.

''நானும் லுங்கி, சேலை என வழக்கமான நெசவு வேலையைத்தான் செய்து கொண்டிருந்தேன். ஆனால் உழைப்பிற்கு ஏற்ற கூலி கிடைக்கவில்லை. ஏதாவது வித்தியாசமாக செய்ய யோசித்தேன். நிறைய புத்தகங்கள் படிப்பேன்.

ராவணனிடம் சீதை சிக்கியிருந்தபோது, அனுமன் வாழைநாரில் சீதாப்பிராட்டிக்கு சேலை நெய்து கொடுத்தார் என ராமாயணத்தில் படித்தேன். அதை ஏன் நாமும் முயற்சி செய்து பார்க்கக்கூடாது என தோன்றியது. வாழைப்பட்டைகளை வெட்டி எடுத்து, அதில் இருந்த கூழ்ப்பகுதிகளை எல்லாம் இழைத்தேன்.

இறுதியாக கத்தையாக நார் மட்டும் மிஞ்சியது. பொறுமையாக தனித்தனி இழையாக பிரித்தேன். பருத்தி நூலுக்கு இணையாக இல்லையென்றாலும் ஓரளவுக்கு உறுதியாக இருந்தது. கொஞ்சம் பக்குவப்படுத்தினால், நிச்சயம் இதை வைத்து நெசவு செய்ய முடியும் என நம்பிக்கை வந்தது. மூத்த நெசவாளர்களிடம் பேசி அவர்கள் சொன்ன ஆலோசனைப்படி அந்த நாரைப் பதப்படுத்தி நெய்து பார்த்தேன். ஒரு கைக்குட்டை அளவுக்கு செய்த அந்த துணி, பருத்தித் துணியை விட வித்தியாசமாக இருந்தது.

அடுத்து பருத்தியோடு வாழைநாரை சேர்த்து பின்னி ஒரு சேலை நெய்தேன். அதைப் பார்த்துவிட்டு நிறைய பேர் கேட்க ஆரம்பித்தார்கள். அதற்கு பிறகு முழுமையாக வாழை நார் நெசவில் இறங்கிவிட்டேன். அப்படியே படிப்படியாக சோற்றுக்கற்றாழை, மூங்கில்நார், எருக்கஞ்செடி, தேங்காய் நார், அன்னாசி செடி, வெட்டிவேர், ஹெம்ப், கோங்குரா... என பல சோதனை முயற்சிகள் செய்து பார்த்தேன். எல்லாமே 'சக்சஸ்'. இப்போது நிறைய நெசவாளர்களை இதற்குள் கொண்டு வந்திருக்கிறேன்'' என பூரிப்பாகச் சொல்கிறார் சேகர்.

செவ்வாழை, நேந்திரம், பூவன் வாழை மரங்களில் கிடைக்கும் பட்டைகளே நார் எடுக்கத் தகுந்தவை. 3 அடி நீளத்தில் பட்டைகளை வெட்டிக் கொண்டு வருகிறார்கள். சிறு கத்தி மூலம் மேலேயிருக்கும் கூழை நீக்கி விட்டு நாரை மட்டும் தனித்துப் பிரிப்பதில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபடுகிறார்கள். ஒரு ஆள் நாளொன்றுக்கு 200 கிராம் நாரை பிரிக்க முடியும். அதை சிறிதுநேரம் உலர விட்டு, தனித்தனி இழைகளாக எடுத்து முடிச்சிடுகிறது இன்னொரு குழு.

அடுத்து நாரை திடமாக்கும் பணி. கடுக்காய், படிகாரம், மாதுளம்பழத் தோல், உப்பு சேர்த்துக் காய்ச்சி, அதில் நாரை நன்கு நனைத்தெடுக்கிறார்கள். நூலைக் காட்டிலும் உறுதியாகி விடுகிறது நார். அடுத்து, வண்ணம் தோய்த்தல். வண்ணத்துக்காக எந்த ரசாயனத்தையும் சேர்ப்பதில்லை. முற்றிலும் இயற்கைதான்.

''வேப்பிலை, வேப்பம்பட்டை, மஞ்சள், சுண்ணாம்பு என எல்லாமே இயற்கையான, உடம்பை பாதிக்காத பொருட்கள்தான். வேப்பிலை, மஞ்சளில் கொஞ்சம் சுண்ணாம்பு சேர்த்தால் இளம் பச்சை நிறம் கிடைத்துவிடும். இளஞ்சிவப்பு நிறத்திற்கு பீட்ரூட், ஊதா நிறத்திற்கு நாவல் பழம், ஆரஞ்சு கலருக்கு கேரட்டும் மரத்தூளும் என இதுபோல 8 விதமான கலர்கள் எடுக்கிறோம். நாரில் சாயம் போட்டதும், கோனில் சுத்தி நெசவுக்குக் கொண்டு போகிறோம்...'' என்கிறார்.

எல்லா நார்களுக்குமே இதுதான் 'பிராசஸ்'. 100 சதவீதம் நாரில் மட்டுமே சேலை நெய்வது சிரமம். அப்படிச் செய்தால் விலை அதிகமாகும் என்கிறார் சேகர். பருத்தியோடு 40 முதல் 80 சதவீதம் வரை மற்ற மறுசுழற்சி நார்களை சேர்க்கிறார்கள். பாவாக பருத்தியும், ஊடையாக மற்ற நாரும் சேர்த்து நெய்கிறார்கள்.

''வாழை நார், சோற்றுக் கற்றாழை நார், தேங்காய் நார், அன்னாசி நார், புளிச்சக்கீரை நார், எருக்கை நார் எல்லாம் நாங்களே தயார் செய்துவிடுவோம். மூங்கில் நாரை வெளியில் இருந்து வாங்குகிறோம். இதுதவிர, பட்டுப்போன காட்டு மரங்களைக் கூழாக்கி நூலெடுத்து சிலர் தருகிறார்கள். கடற்புல்லை இழையாக்கியும் நெய்கிறோம். வெட்டிவேர், வைக்கோலிலும் கூட சேலை நெய்ய முடியும். 25 வகையான நார்களை வைத்து நாங்கள் நெய்த சேலை லிம்கா சாதனை புத்தகத்தில் பதிவாகி இருக்கிறது.

''எந்த ரசாயனமும் சேர்க்கப்படாததால் இது உடம்புக்கு ரொம்ப நல்லது. குளிர்ச்சி. சோற்றுக்கற்றாழை நாரில் நெய்கிற உடைகள், தோல் நோய்களையே குணப்படுத்தும். டெல்லி ஐ.ஐ.டி, பாரிஸ் எக்கோ கிரீன் கண்காட்சி என பல இடங்களில் இந்த உடைகளை காட்சிப்படுத்தியதோடு ஆய்வுக்கும் உட்படுத்தி சான்றிதழ் வாங்கியிருக்கோம். நார்களிலேயே பேப்ரிக் நெசவும் செய்கிறோம். அதை மும்பை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்கிறார்கள். இந்தத் தொழிலை உற்சாகப்படுத்தினால் கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். இதுபோன்ற இயற்கைக்கு பாதிப்பில்லாத ஆரோக்கியமான தயாரிப்புகளையும், தயாரிப்பாளர்களையும் அங்கீகரித்து உற்சாகப்படுத்த வேண்டியது அரசின் கடமை....'' என்கிறார் சேகர்.

உங்களுடைய அடுத்தக்கட்ட திட்டம்?

கோயம்பேடு பூ மார்க்கெட்டில் வீணாகும் மலர்களை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தி, அதன் மூலம் இயற்கை வண்ணங்கள் மற்றும் நெசவுக்கு தேவையான மற்ற சில பொருட்களை தயாரிக்கும் எண்ணம் இருக்கிறது. அது தொடர்பான முயற்சிகளில் இறங்கி இருக்கிறோம்.

1 More update

Next Story