பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தங்க நாணயம் பரிசு!

2 ஆயிரம் கிலோ (20 குவிண்டால்) பாலீத்தீன் கவர் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்தால் ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை ஒரு கிராம பஞ்சாயத்து வெளியிட்டுள்ளது. அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.
இப்போது அந்த கிராமத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை எங்கும் பார்க்கமுடிவதில்லை. ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள அந்த கிராமத்தின் பெயர், சாதிவாரா. நாட்டில் உள்ள மற்ற கிராமங்களுக்கு முன்னோடியாக, தூய்மை கிராமமாக விளங்கிக்கொண்டிருக்கிறது.
அந்த கிராமத்தின் தலைவர் பரூக் அஹ்மத் கனாயே இந்த மாற்றத்திற்கு வழிகாட்டியாக விளங்குகிறார். பிளாஸ்டிக் கழிவுகள் வீதிகளில் மட்டுமின்றி வயல்களிலும், நீர் நிலைகளிலும் குவிந்து கிடப்பதைப் பார்த்து வேதனை அடைந்தவர் இந்த பரிசுத் திட்டத்தை செயல்படுத்திவிட்டார்.
''பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணுக்கும், மனிதனுக்கும் கேடானது. சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் இன்னும் 10 ஆண்டுகளில் சுத்தமான நீரையோ, வளமான நிலத்தையோ காண முடியாது'' என்கிறார்.
பரூக்கின் தங்க நாணய திட்டம் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு உதவுவதோடு சுற்றுப்புற தூய்மை, சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வையும் கிராம மக்களிடத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. 20 குவிண்டாலுக்கும் குறைவாக பாலீத்தீன் கவர் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வருபவர்கள் வெறுங்கையோடு செல்ல வேண்டியதில்லை.
அவர்கள் கொண்டு வரும் கழிவுகளுக்கு ஏற்ப வெள்ளி நாணயமோ, பிற பொருட்களோ பரிசாக வழங்கப்படுகிறது. இந்த திட்டம் ஓராண்டுக்குள்ளேயே பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படாத கிராமமாக மாற்றிவிட்டது.
''இதற்கு முன்பு இந்த கிராமத்திற்கு செல்லும் சாலைகளில் பாலீத்தின் கழிவுகள் சிதறி கிடக்கும். இப்போது அப்படி இல்லை. சாலை தூய்மையாக காட்சி அளிக்கிறது'' என்று மாவட்ட நிர்வாகமும் பரூக்கின் செயல் திட்டத்தை பாராட்டி உள்ளது.






