புல் மனிதன் - டாக்டர் கஜானன் முராட்கர்


புல் மனிதன் - டாக்டர் கஜானன் முராட்கர்
x

வாழ்விடங்கள் மற்றும் புல்வெளி மேம்பாட்டில் தனது முன்னோடி பணிக்காக இந்தியாவின் ‘புல் மனிதர்’ என அறியப்படுகிறார், டாக்டர் கஜானன் முராட்கர்.

இவர், புலிகள் காப்பகங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் புல்வெளிகளை உருவாக்கி விருதுகளைப் பெற்றுள்ளார். உள்ளூர் புற்களைக் கண்டறிதல், விதை வங்கி உருவாக்குதல், பாத்திகளை அமைத்தல் போன்றவற்றை மேற்கொண்டு புல்வெளி மேம்பாட்டு நுட்பத்தை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு. நாடு முழுவதும் 12 மாநிலங்களில் உள்ள புலிகள் காப்பகங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் புல்வெளிகளை உருவாக்க இந்த நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார்.

மகாராஷ்டிராவின் கல்லூரி ஒன்றில் தாவரவியல் பேராசிரியராகப் பணியாற்றும் அவர் கூறுகையில், "நமது வனச்சூழலின் கட்டிடக் கலைஞர்களாகவும், பொறியாளர்களாகவும் புற்கள் விளங்குகின்றன.

புல்வெளிகளில் கவனம் செலுத்துவதைவிட, காடுகளுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். புற்கள் என்பது உண்மையிலேயே விலங்குகளுடன் நேரடியாகத் தொடர்புள்ளவை. ஒளிந்து மறைந்து வேட்டையாட வழிவகுப்பவை.

மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கவும், நீரைப் பாதுகாக்கவும், மைக்ரோ மற்றும் மேக்ரோ வாழ்விடங்களில் புல் முக்கிய பங்கு வகிக்கிறது. வனச் சுற்றுச்சூழல் அமைப்பின் அடிப்படை உற்பத்தியாளராகப் புற்கள் விளங்குகின்றன. அடிப்படையில் மென்மையான மற்றும் கரடுமுரடான 2 புல்வெளிகள் உள்ளன. ஒவ்வொன்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் கொண்டது. சிறிய புல்வெளிகள் மேய்ச்சல் வாழ்விடத்துக்கும், விலங்குகள் மறைந்து மேய்வதற்கும், உயரமான புல்வெளிகள் இனப்பெருக்கம் செய்வதற்கும் பயன்படுகின்றன. புல்வெளி மேம்பாட்டுக்கான என் முயற்சி பயன் அளித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

பல்பூர் குனோ தேசிய பூங்காவில் 2 ஹெக்டேர் புல்வெளிகளை 360 ஹெக்டேர் புல்வெளியாக விரிவுபடுத்த முடிந்தது. இதனால், குனோவுக்கு சிறுத்தைகளைக் கொண்டு வர உதவியது. சத்ரா புலிகள் காப்பகத்தில் 52 கிராமங்கள் புனரமைக்கப்பட்டன. புல்வெளி மேம்பாட்டுக்காக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் விருதைப் பெற்றேன்.

இந்த விருது கிடைத்த உற்சாகத்தால், சத்புரா புலிகள் காப்பகத்திலிருந்த கடினமான நிலப்பரப்பைச் சரி செய்து புல்வெளிகளை வெற்றிகரமாக உருவாக்க முடிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்'' என்றார்.


Next Story