17,524 வைரங்களில் மிளிரும் கைக்கடிகாரம்


17,524 வைரங்களில் மிளிரும் கைக்கடிகாரம்
x

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த நகைக்கடைக்காரர் ஹர்ஷித் பன்சால், 17,524 வைரங்கள் பதித்த கைக்கடிகாரத்தை உருவாக்கி இருக்கிறார்.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நேரம் பார்ப்பதற்கு சுலபமான வழிகள் இருந்தாலும் கைக்கடிகாரம் அணிந்து கொள்ளும் மோகம் குறையவில்லை. ஆண், பெண் இருபாலரும் ஸ்டைலிஷான வடிவங்களில் கைக்கடிகாரங்கள் அணிவதற்கு ஆசைப்படுகிறார்கள்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த நகைக்கடைக்காரர் ஹர்ஷித் பன்சால், 17,524 வைரங்கள் பதித்த கைக்கடிகாரத்தை உருவாக்கி இருக்கிறார். அந்த கைக்கடிகாரத்தில் இடம்பெற்றுள்ள வைரங்கள் அனைத்தும் ஒரே அளவு, வடிவம் கொண்டிருப்பதுதான் சிறப்பம்சம். அதனால் கைக்கடிகாரம் நேர்த்தியான வடிவமைப்பில் ஜொலிக்கிறது.

வைரக்கற்கள் இரண்டு நிறங்களை கொண்டிருக்கின்றன. 17,512 வெள்ளை வைரக்கற்களும், 12 கருப்பு வைரக்கற்களும் அந்த கடிகாரத்தை அலங்கரித்துகொண்டிருக்கின்றன.

இந்த கைக்கடிகாரத்தின் எடை, 373.030 கிராம். இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15,858 வைரங்கள் பதிக்கப்பட்ட கைக்கடிகாரத்தை ஹாங்காங்கை சேர்ந்த ஜூவல்லரி உருவாக்கி இருந்ததே சாதனையாக பதிவாகி இருந்தது.

அதனை ஹர்ஷித் பன்சால் முறியடித்திருக்கிறார். இந்த வைரக்கடிகாரத்தை தயாரிப்பதற்காக தனது நகைக்கடை ஊழியர்கள் 11 மாதங்கள் கடுமையாக உழைத்ததாகவும், பல்வேறு சவால்களை எதிர்கொண்டதாகவும் கூறுகிறார்.

''ஆரம்பத்தில் நிறைய கைக்கடிகார வடிவமைப்புகளை முயற்சித்தோம். 100 சதவீதம் அணியக்கூடிய, கம்பீரமான மற்றும் நேர்த்தியான கடிகாரமாக இருக்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தோம். ஒரே வண்ணம் மற்றும் வடிவத்துடன் பல வைரங்களை உருவாக்கி, பின்னர் கைக்கடிகாரத்துக்கு முழு வடிவம் கொடுத்தோம். இந்த கைக்கடிகாரத்தை உருவாக்குவது எங்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது. நாங்கள் எல்லா சவால்களையும் ஏற்றுக்கொண்டோம்'' என்கிறார்.

கைக்கடிகாரத்தில் பதிக்கப்பட்ட வைரங்களின் உண்மைத்தன்மையை கண்டறிய கின்னஸ் சாதனை அமைப்பு சர்வதேச ரத்தின நிறுவனத்தின் ஆய்வகத்தை நாடி இருக்கிறது. அது கொடுத்த சான்றிதழின் அடிப்படையில் கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற செய்திருக்கிறது.

இருப்பினும் பன்சால் மற்றும் அவரது குழுவினர் கின்னஸ் சாதனையை முறியடிப்பது இது முதல் முறை அல்ல. 2020-ம் ஆண்டு ஒரே மோதிரத்தில் 12,638 இயற்கை வைரங்களை பதித்து கின்னஸ் சாதனை படைத்தனர். எனினும் அந்த சாதனையை 2022-ம் ஆண்டு மே மாதம் கேரளாவைச் சேர்ந்த நகைக்கடைக்காரர் முறியடித்துவிட்டார்.


Next Story